சினிமா

ஊடக உலகம் திரள வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது - காட்மேன் வெப்சீரிஸ் படைப்புக் குழு

ஊடக உலகம் திரள வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது - காட்மேன் வெப்சீரிஸ் படைப்புக் குழு

webteam

காட்மேன் இணைய தொடருக்கு தடை கோருவதும், அதற்கு எதிரான வழக்குகளும், காட்சி ஊடகத்துறையில் கருத்துச் சுதந்திரத்துக்கான அச்சுறுத்தல் என்று, காட்மேன் வெப்சீரிஸ் படைப்புக் குழு தெரிவித்துள்ளது.

காட்மேன் வெப்சீரிஸில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவதூறாக சித்தரித்ததாக கூறி பாரதிய ஜனதாவைச் சேர்ந்த அஸ்வத்தாமன் மற்றும் 5 அமைப்புகள் சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெப் சீரிஸ் தயாரிப்பாளர் இளங்கோ, இயக்குநர் பாபு யோகேஸ்வரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்தனர். இதனிடையே ஆன்லைனில் வெளியாகவிருந்த காட்மேன் வெப்சீரிஸ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்தது.


இந்நிலையில் காட்மேன் வெப் சீரிஸ் படைப்புக்குழு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், காட்மேன் வெப்சீரிஸ் டீசரில் இடம்பெற்றிருந்த வசனங்களின் உண்மைத்தன்மை என்ன, ஒட்டுமொத்த வெப் சீரிஸின் கதை என்ன என்பது பற்றியெல்லாம் எந்த புரிதலும் இல்லாமல், குறிப்பிட்ட சமூகத்துக்கும், இந்து மதத்துக்கும் எதிரானது எனும் கருத்தை உருவாக்கி உள்ளதாகவும், வெப்சீரிஸிக்கு தடைகோரும் நடவடிக்கைக்கு எதிராக ஊடக உலகம் திரள வேண்டிய சூழல் உருவாகியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை காட்மேன் முற்றிலுமாக தடை செய்யப்படுமானால், எதிர்காலத்தில் யார் வேண்டுமானாலும் தலையிட்டு எந்தப் படைப்பையும் திரைக்கு வரும் முன் தடுத்து நிறுத்திவிடலாம் எனும் நிலை ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை ஒரு கையெழுத்து இயக்கமாக மாற்றி மத்திய அமைச்சகத்துக்கும், பிரதமர் மற்றும் முதல்வரின் கவனதுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று காட்மேன் வெப்சீரிஸ் படைப்புக் குழு தனது அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளது.