சினிமா

''50% பார்வையாளர்கள் என்றால், நாங்கள் ஏன் முழு ஜி.எஸ்.டி கட்டவேண்டும்?'' - டி.ராஜேந்தர்

''50% பார்வையாளர்கள் என்றால், நாங்கள் ஏன் முழு ஜி.எஸ்.டி கட்டவேண்டும்?'' - டி.ராஜேந்தர்

sharpana

தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதித்ததை மீண்டும் 50 சதவீதமாக்கிய தமிழக அரசின் அறிவிப்பையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டி.ராஜேந்தர் கோரிக்கை வைத்துள்ளார். 

பொங்கலுக்கு விஜய்யின் ‘மாஸ்டர்’, சிம்புவின் ’ஈஸ்வரன்’ படங்கள் வெளியாவதையொட்டி திரைத்துறையினர் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கக்கோரி முதல்வருக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனால், தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களுடன் படங்களை பார்க்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. கொரோனா காரணமாக இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், 100 சதவீத அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் மறு உத்தரவு வரும் வரை 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டும் தியேட்டர்களுடக்கு அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு, சிறப்புக் காட்சிகளை திரையிடவும் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் டி.ராஜேந்தர் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் “தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். மக்கள் நலனை கட்டிக்காக்க ஒரு சின்ன தூண்டுகோள். தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கக்கோரி தமிழக அரசு அனுமதி கொடுத்தது. ஆனால், துரதிஷ்டவசமாக 50 சதவீதம்தான் அனுமதிக்கவேண்டும் என்று மத்திய அரசு விதித்துவிட்டது தணிக்கை. மத்திய அரசு 50 சதவீத இருக்கைகள்தான் அனுமதிக்கவேண்டும் என்று சொல்கிறது. அப்படி என்றால் நாங்கள் ஏன், முழுமையாக 12 சதவீதம் ஜி.எஸ்.டி வரி செலுத்த வேண்டும்? என்னங்க இது கொடுமை? தமிழகத்தில் சில இடங்களில்தான் கடற்கரை உள்ளது. இதனைவிட்டால் மக்களுக்கு என்று இருக்கும் பொழுதுபோக்கு சினிமாதான்.

மக்களுக்கு பொழுதுபோக்க வேற என்ன இருக்கு வழி? சினிமா டிக்கெட் எடுத்தால் அவங்கதான் கட்டவேண்டி இருக்கு வரி. அவங்க தலையில ஏத்திக்கிட்டே இருக்கீங்க வலி. இந்த மக்களுக்காகவாவது பொங்கல் போனஸாக உள்ளாட்சித்துறை வரியான 8 சதவீதத்தை நீக்கவேண்டும். எங்கள் கலை உலகத்தினரின் கவலையை கஷ்டத்தைப் போக்கவேண்டும். மக்களுடைய இந்த உணர்வை கட்டிக்காக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.