பெண்களுக்கு வீட்டைச் சுற்றிய 4 சுவர் மட்டுமே பாதுகாப்பு, உலகம் என்றிருந்த காலத்திலேயே, கடுமையானப் போராட்டங்களுக்குப் பிறகு பெண்கள் படித்து மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளிலும் சாதித்தது உண்டு. எனினும், சினிமாவுக்கு முன்னோடியான நாடகத் துறையில் பெண்களுக்குப் பதிலாக ஆண்களே, பெண்கள் வேஷம் அணிந்து நடித்துவந்தநிலையில் படிப்படியாக அந்த நிலை மாறியது. அவ்வளவு எளிதில் இந்த முன்னேற்றம் நடைபெறவில்லை என்றாலும், குறிப்பிட்ட இடைவெளியில் பெண்கள் நடிப்புத் தொழிலுக்கும் வர ஆரம்பித்தனர். பின்னாளில் நடிப்பு மட்டுமின்றி இயக்குநர்களாக, திரைக்கதை எழுத்தாளர்களாக, படத் தயாரிப்பாளர்களாக என பன்முகத் திறமைகளையும் வெளிப்படுத்த ஆரம்பித்தனர் பெண்கள். அவ்வாறு தமிழ் சினிமாவில் இயக்குநர்களாக அவதாரம் எடுத்த பெண் இயக்குநர்களை சிலரைப் பற்றி இங்கு காணலாம்.
1. டி.பி. ராஜலக்ஷமி (T. P. Rajalakshmi) (1911-1964)
இவர்தான் தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநர் எனப் பெயர் எடுத்தவர். திருவையாறு பஞ்சாபகேச ராஜலக்ஷ்மி என்பது தான் இவரது முழுமையானப் பெயர். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முதல் ஹீரோயினாக அறிமுகமானவர். அதன்பிறகு 1936-ம் ஆண்டு ‘மிஸ் கமலா’, 1939-ம் ஆண்டு ‘மதுரை வீரன்’ ஆகியப் படங்களை இயக்கியதன் மூலம் தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குநர் என்று பெயரெடுத்தார். அத்துடன் முதல் பெண் திரைக்கதையாசிரியர், முதல் பெண் பாடகி, முதல் பெண் இசையமைப்பாளர், முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர். டி.பி. ராஜலக்ஷமி தான் தமிழ் திரைத்துறையில் அடுத்து வந்த பெண்களுக்கு நம்பிக்கையூட்டியவர் என்றால் மிகையாகாது. சமூக சேவைகள், பெண் உரிமைகள், திராவிட இயக்கத்திலும் மிகவும் ஆர்வம் கொண்டவர் டி.பி. ராஜலக்ஷமி.
2. பி. பானுமதி (1925 - 2005)
நடிகை, இயக்குநர், பாடகி, தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடலாசிரியர் என அப்போதே கடுமையான போட்டியாளராக இருந்தவர் பி. பானுமதி. ‘சந்திரணி’, ‘அம்மாயி பெல்லி’ உள்பட பல திரைப்படங்களை தயாரித்து இயக்கிய பி. பானுமதி, கடந்த 1975-ம் ஆண்டு வெளியான ‘இப்படியும் ஒரு பெண்’ என்ற தமிழ் படத்தையும் எழுதி, தயாரித்து, நடித்து, இயக்கினார். அவருடன் சிவக்குமார் மற்றும் தேவிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
3. சாவித்திரி (1936-1981)
கதாபாத்திரத்துக்கு ஏற்ற பாவனைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்கள் மட்டுமின்றி தனது சக நடிகர்களாலும் பாரட்டப்பட்டவர் நடிகையர் திலகம் சாவித்திரி. டி.பி.ராஜலக்ஷமி போன்றே இவரும் பாடகி, இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 1968-ம் ஆண்டு வெளியான ‘சின்னாரி பாப்புலு’, 1969-ம் ஆண்டு வெளியான‘மாத்ரு தேவதா’, 1971-ல் வெளியான ‘விந்தா சம்சாரம்’ உள்ளிட்ட தெலுங்கு திரைப்படங்களையும், 1969-ல் வெளியான ‘குழந்தை உள்ளம்’, 1971-ல் வெளியான பிராப்தம் உள்ளிட்ட தமிழ் படங்களையும் இயக்கியுள்ளார். இதில் ‘சின்னாரி பாப்புலு’ திரைப்படம் முழுக்க முழுக்க மகளிர் மட்டும் இணைந்து பங்கேற்ற முதல் சினிமா என்ற பெயரைப் பெற்றது.
4. பி. ஜெயதேவி
1984-ம் ஆண்டு வெளியான ‘நலம் நலமறிய ஆவல்’, 1985-ம் ஆண்டு வெளியான ‘விலாங்கு மீன்’, 1987-ம் ஆண்டு வெளியான ‘விலங்கு’, 1987-ம் ஆண்டு வெளியான ‘பாசம் ஒரு வேஷம்’ உள்ளிட்ட படங்களை எழுதி இயக்கியுள்ளார். 2000-ம் ஆண்டில் வெளியான ‘புரட்சிக்காரன்’ படத்திற்கு கதை மட்டும் எழுதியுள்ளார். மேலும் தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், நடிகை என்ற பன்முகத் திறமை கொண்டவர்.
5. லஷ்மி
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியாவின் 4 மொழிகளிலும் பரபரப்பான நடிகையாக இருந்தவர் லஷ்மி. சுமார் 400 படங்களுக்கும் மேல் இவர் நடித்துள்ளார். கடந்த 1980-ம் ஆண்டு வெளியான ‘மழலைப் பட்டாளம்’ என்றப் படத்தை இயக்கியுள்ளார். குறிப்பாக இயக்குநர் கே. பாலச்சந்தரின் மேற்பார்வையில் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் நடிகை லஷ்மி.
மேலும் பல பெண் இயக்குநர்கள் குறித்து அடுத்தவாரம் காணலாம்.