சினிமா எனும் வரலாற்று சிற்பத்தை சிற்றுளியால் செதுக்கிய மாயச்சிற்பி இந்த மகேந்திரன். எதார்த்த கதைக் களங்களுக்கு எவராலும் புகுத்த முடியாத திரைக்கதையால் சினிமாவை வண்ணமயமாக்கிய கருப்புத் தூரிகை. இன்றைக்கு நாம் பிரமித்துப் பார்க்கும் சினிமாக்களை உருவாக்கியவர், இந்த கலைஞன்தான். அப்போதைய சினிமாக்கள், பக்கம் பக்கமாக பேசும் வசனங்களாக நிறைந்து, நாடக பாணியில் இருந்ததில் தீவிர அதிருப்தி கொண்டிருந்தார் மகேந்திரன். (சிவாஜியின் தங்கப்பதக்கம் படத்திற்கு வசனம் எழுதியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)
திரைக்கதை ஆசிரியராக தமிழ் சினிமாவில் அறிமுகமான மகேந்திரன், பின்னாளில் சினிமாவை மாற்றுப் பாதையில் நகர்த்திய மகாகலைஞன். ஆனார். 1964-ஆம் ஆண்டு ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான நாம் மூவர் திரைப்படம், இவரின் கதையில் உருவான முதல்படைப்பு. அதன்பின், சபாஷ் தம்பி, நிறைகுடம், திருடி, தங்கப்பதக்கம், ஆடுபுலி ஆட்டம் என இவரின் கதையமைப்பில் உருவான பல சினிமாக்கள் பிரமாண்ட வெற்றியை அடைந்தன. ஆனால், மகேந்திரனுக்கு நாம் எந்த சினிமாவை பரிகாசம் செய்தோமோ? அதேபோன்ற சினிமாக்களை தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்ற கவலை எழுகிறது.
பின்னர் சினிமாவே வேண்டாம் என்ற முடிவோடு ஊருக்குச் சென்றுவிடுகிறார். ஆனால், சினிமாவுக்குத் தான் திறமையானவர்களை ஈர்த்து தன்பக்கம் நிறுத்திக் கொள்ளும் சக்தி இருக்கிறதே. அதேபோல் மகேந்திரனை ஈர்த்துக் கொண்ட தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதப் படைப்புதான் முள்ளும் மலரும். உமா சந்திரன் எழுதிய நாவலைத் தழுவி அவர் எழுதி வைத்திருந்த திரைக்கதைதான் மகேந்திரனின் மனதை மாற்றிய கதை.
ரஜினி என்ற சிறந்த நடிகனை தமிழ் திரைத்துறைக்கு அடையாளம் காட்டிய திரைப்படம்தான் முள்ளும் மலரும். மிகை ஒப்பனைகள் இல்லாமல், நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் உணர்வுகள் வழியே கதையைச் சொன்னார் மகேந்திரன். இலக்கிய படைப்பாளிகளின் சிறந்த படைப்புகளை திரைமொழியில் கொண்டுவர வேண்டும் என்பது அந்நாளிலேயே அவருள் உதித்தது. அதன் காரணமாகதான், தனது முதல் படத்தை முள்ளும் மலரும் நாவலைக் கொண்டு தந்தார், அதற்கான பலனும் கிடைத்தது. 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த திரைப்படம், தமிழக அரசின் சிறந்த திரைப் படத்துக்கான விருதை வென்றது. தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதை ரஜினிகாந்துக்கு பெற்றுத் தந்தது.
முள்ளும் மலரும் திரைப்படத்தை போல, உதிரிப்பூக்களும் மகேந்திரனின் க்ளாசிக் படைப்புகளில் ஒன்று. அதேபோல், ரஜினி இரு வேடங்களில் நடித்த ஜானி திரைப்படத்தையும் சொல்லலாம். ரஜினியின் ஸ்டைல் என இப்போது சொல்லப்படும் அவரின் உடல்மொழி, மகேந்திரனிடம் இருந்து வந்ததாகச் சொல்லப்படுவதும் உண்டு. இப்படி, இன்னும் சில திரைப்படங்களையும், பல சுவாரஸ்ய பின்னணியையும் சொல்லிக் கொண்டே போகலாம்.
முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே படங்கள்தான் அதிக அளவில் பலரும் அறிந்தவரை. ஆனால், பூட்டாத பூட்டுக்கள், நண்டு, மெட்டி போன்ற படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. பூட்டாத பூட்டுக்கள் படம் பொன்னீலனின் உறவுகள் நாவலை மையமாக வைத்து எழுதப்பட்டது. உதிரிப்பூக்கள் திரைப்படமும் புதுப்பித்தனின் சிற்றன்னை கதையின் கருவை கொண்டு எழுதப்பட்டதுதான். மகேந்திரனின் பல திரைப்படங்கள் பெண் கதாபாத்திரத்தை முன்னிலையாக வைத்து உருவாக்கப்பட்டவை. ஒரு பெண்ணின் பார்வையில் கதை சொல்வது என்பதே அன்று அரிதாக ஒரு வழக்கம். அதை பல படங்களில் நிகழ்த்தி காட்டியவர் மகேந்திரன். உணர்வுகளின் வழியாக கதைகளை சொல்லிய அவரால் தொடர்ச்சியாக கமெர்ஷியல் ரீதியாக ஹிட் கொடுக்க முடியாததால் விரைவிலேயே இயக்குநர் அவதாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
கதாசிரியராக, இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தடம் பதித்திருக்கிறார், இயக்குநர் மகேந்திரன். விஜய்-ன் தெறி படத்தில் தெறிக்கவிடும் வில்லனாக மிரட்டியிருப்பார். மாஸ் ஹீரோ விஜய்க்கு எதிராக கோபம் நிறைந்த கண்களுடன், இவர் பேசும் வசனங்கள் எல்லாம் திரையரங்கில் கைத்தட்டல்களை அள்ளின. நாம் பல காலத்துக்கு அவரின் திரைப்படங்களை கொண்டாடிக் கொண்டே இருப்போம். அதுதான் அவரை நம்முடன் இத்தனை பிணைப்புடன் வைத்திருக்கிறது. அது என்றைக்குமே அவரை நம்முள் உயிர்ப்புடன் வைத்திருக்கும்.