சினிமா

எதிர்ப்பை மீறி டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி இன்று நடக்கிறது!

எதிர்ப்பை மீறி டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி இன்று நடக்கிறது!

webteam

இந்துத்துவா அமைப்புகளின் எதிர்ப்பை மீறி, டெல்லி அரசு ஆதரவுடன் டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி இன்று நடக்கிறது. 

பிரபல கர்நாடக இசைப்பாடகர் டி.எம்.கிருஷ்ணா. மகசேசே விருது பெற்ற இவர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர். இவர் கர்நாடக இசை அனைவருக்கும் சொந்தமானது என்று பேசி வருபவர். இஸ்லாமிய, கிறிஸ்துவ பாடல்களையும் பாடி வருகிறார். ’ஏசு கிறிஸ்து, அல்லா குறித்த பாடல்களை கர்நாடக இசையில் மாதந்தோறும் வெளியிடுவேன்’ என்றும் தெரிவித்தார். இதனால் இவருக்கு இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இசை நிகழ்ச்சி நடத்தக் கூடாது என்றும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்நிலையில், ’பூங்காவில் நடனம் மற்றும் இசை’ என்ற பெயரில் கலாசார நிகழ்வின் அங்கமாக டி.எம்.கிருஷ்ணாவின் இசைக் கச்சேரிக்கு டெல்லியை சேர்ந்த ஸ்பிக் மேக்கே மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. 

இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை விமான நிலைய ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அதில், டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சி 17 ஆம் தேதி டெல்லி நேரு பார்க்கில் நடைபெற உள்ளதாக தெரிவித்திருந்தது. இதற்கு இணைய தளங்களில் வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தன.இந்நிலையில் அவரது இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

இதுகுறித்து பேசிய டி.எம்.கிருஷ்ணா, ‘நவம்பர் 12 அன்று இந்திய விமான நிலைய ஆணையம் இந்த இசை நிகழ்ச்சி குறித்து அறிவித்ததில் இருந்தே, ட்விட்டரில் என் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டது. இவர் கிறிஸ்தவ, இஸ்லாமிய பாடல்களை பாடுபவர், இவரை வைத்து ஏன் இசை நிகழ்ச்சி நடத்துகிறீர்கள்? என்று பலரும் கேள்வி எழுப்பினார்கள். இந்து எதிர்ப்பாளன்,  அர்பன் நக்சலைட் ஆகிய வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்தனர். 13ஆம் தேதி இரவு வரை இசை நிகழ்ச்சி நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் இருந்தேன். ஆனால், அவசரமான சில காரணங்களுக்காக நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக, இந்திய விமான நிலைய ஆணையத்தினரால் அன்று இரவு எனக்குத் தெரிவிக்கப்பட்டது’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, டி.எம்.கிருஷ்ணா நிகழ்ச்சியை நடத்த முன்வந்துள்ளது. டெல்லியில் பைவ் செசன்ஸ் கார்டனில் இன்று மாலை இந்நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு வருமாறு டெல்லி மக்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி டெல்லி துணை முதலமைச்சரும் கலாச்சார அமைச்சருமான மணீஷ் சிசோடியா கூறும்போது, ‘ கலையையும் கலைஞர்களையும் மதிக்க வேண்டியது டெல்லி மக்களின் கடமை. இங்கு நிகழ்ச்சி நடத்த வரும் எந்த கலைஞருக்கும் நான் அனுமதி மறுக்கக் கூடாது’ என்றார்.