சினிமா

"நேரம் விலைமதிப்பற்றது" - நடிகர் அஜித்தை ரசிகர்கள் 'தல'யென கொண்டாட வைத்த மந்திரம்!

"நேரம் விலைமதிப்பற்றது" - நடிகர் அஜித்தை ரசிகர்கள் 'தல'யென கொண்டாட வைத்த மந்திரம்!

webteam

மே 1... இன்று தனது 50-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் அஜித்.  திரையுலக பயணத்தில் அஜித்தாக இருந்த அவரை, ரசிகர்கள்  'தல' என்று அழைக்கவைக்க அவர் கடந்து வந்த பாதை கவனத்துக்குரியது.

1971 ஆம் ஆண்டு பிறந்த அஜித், பள்ளிக் காலத்துக்குப் பின் ஒரு கட்டத்தில் தனது தந்தையிடம் 'நான் படிக்க விரும்பவில்லை' என்று கூறியபோது, அவர் அளித்தக் கட்டளை ஒன்றுதான்: 'படிக்கவில்லை என்றால் வேலைக்குச் செல்; ஆனால் நீ  சும்மா ஊர் சுற்ற கூடாது'.

“நேரம் விலைமதிப்பற்றது” என்பதுதான் அஜித்தின் தாரக மந்திரம். அந்த மந்திரம்தான், அவரை ஒரு நடிகனாக, ரேஸ் கார் டிரைவராக, புகைப்படக் கலைஞனாக, துப்பாக்கிச் சுடும் வீரராக, பல துறை வித்தகராக மாற்றியிருக்கிறது.

சினிமாவிற்கு வந்த ஆரம்பக் காலங்களில், வெற்றியின் மூலம் அஜித்திற்கு கிடைத்த புகழ் போதையும், தோல்விகளின் மூலம் கிடைத்த கசப்பான அனுபவங்களும் அவருக்கு ஒருவித பக்குவத்தைக் கொடுத்தது. அந்தப் பக்குவம்தான் அவருக்கு மனிதர்களைப் படிக்கும் தெளிவைக் கொடுத்தது.

விளைவு, தனது வட்டத்தை சிறியதாக்கினார். ஊடக வெளிச்சத்தை தவிர்த்தார். ரசிகர் மன்றங்களை கலைத்தார். தன்னை வளர்த்தெடுக்கும் விஷயங்களுக்கு மட்டுமே நேரம் கொடுத்தார். அந்த திட்டமிடலோடு கூடிய உழைப்புதான் இன்று பலரை “ எப்படி இந்த மனுஷனாலும் மட்டும் முடியுது” என்ற கேள்வியை கேட்க வைத்திருக்கிறது.

அவர் உழைத்தார், ஜெயித்தார் என்பது உண்மை என்றாலும், அவரைத் தொடர்ந்து தொழில் ரீதியாக ஈடுபாடு காட்ட வைப்பது எது? ஒவ்வொரு முறை அவர் கீழே விழும் போது அவரை ஃபீனீக்ஸ் பறவை போல் பறக்க வைப்பது எது? - இந்தக் கேள்வி இன்று வரை பலருக்கும் இருக்கிறது. அந்தக் கேள்விக்கான பதிலை அவர் தனது நெருங்கிய வட்டாரங்களில் பகிர்ந்திருக்கிறார்.

அது: “நான் ஜெயிக்க வேண்டும்... ஜெயித்தே ஆக வேண்டும்... ஏளனம் செய்தவர்கள் முன்பு கர்வம் கொண்டு வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற வெறிதான்!”

இந்த அணையா நெருப்புதான் விபத்து நிகழ்ந்து படுக்கையில் கிடக்கும்போது இயக்குநர் சரணிடம் "நான் சீக்கிரம் வந்துவிடுவேன்... நீங்கள் அமர்க்களம் படத்திற்கான வேலையை பாருங்கள்" என்று சொல்லவைத்தது.

‘நான் கடவுள்’ படத்திற்கு கமிட் ஆகி, அங்கு தனக்கான மரியாதை கிடைக்காதபோது அந்த வாய்ப்பை தூக்கி எறிய வைத்தது.அதுதான் வளர்ந்து வரும் நடிகர் யாரும் செய்ய முயலாத ஒரு  ‘வரலாறை’ கொடுக்க வைத்தது.

அதுதான் 'அஜித் அவ்வளவுதான்’ என்று விமர்சனங்கள் எழுந்த போது, ஒரு ’பில்லா'வை கொடுக்க வைத்தது. பில்லா படத்திற்கு தனது வாழ்த்துகளை கூறச் சென்ற எஸ்.ஜே.சூர்யாவிடம் ஆக்ரோஷத்தோடு அஜித் சொன்னது...  ‘இஸ்ட் ஜஸ்ட் தி பிகினிங்...’

ஆம், அஜித்தின் அடுத்த இன்னிங்ஸ் அப்படிதான் இருந்தது... `மங்காத்தா', `ஆரம்பம்', `வீரம்', `என்னை அறிந்தால்', `வேதாளம்',`விஸ்வாசம்', `நேர்கொண்ட பார்வை' அடுத்தடுத்து தனக்கான கிராப்டை தானே செதுக்கினார்.

அதேநேரம் கோடிக்கணக்கான ரசிகர்கள் தன்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்கு உணர்ந்த அவர், ஆளில்லா விமான போட்டிகளில் கலந்துகொள்ள மாணவர்களை தயார்படுத்துதல், துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் உள்ளிட்டவற்றிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

”நேரத்தை பயன்படுத்துங்கள்... ஒரு நொடியைக் கூட வீணாக்காதீர்கள்... நேரம் கை மீறி போனால் மீண்டும் கிடைக்காது... கிடைக்கவே கிடைக்காது!”

இன்று 'வலிமை' பட போஸ்டர் வரவில்லை என்பதற்காக அவர்களது ரசிகர்கள் ஆதங்கப்படவில்லை. ”எங்களது நாயகனை காண முடியவில்லையே” என்பதற்காவே ஆதங்கப்படுகிறார்கள். அப்படி ஒரு நாயகனை உருவாக்கியது “நேரம் விலைமதிப்பற்றது” என்ற மந்திரம்தான்!

- கல்யாணி பாண்டியன்