சினிமா

சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்கும் "தக்ஸ்" தப்பித்ததா? இல்லை நம்மை சிறைபிடித்ததா? #Review

சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்கும் "தக்ஸ்" தப்பித்ததா? இல்லை நம்மை சிறைபிடித்ததா? #Review

webteam

மலையாளத்தில் தினு பாப்பச்சன் இயக்கி 2018ல் வெளியான படம் 'ஸ்வாதந்தர்யம் அர்தராத்ரியில்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது குமரி மாவட்டத்தின் தக்ஸ். `ஹே சினாமிகா’ படத்திற்குப் பிறகு பிருந்தாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் ஹ்ருதூ ஹரோன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஷ்காந்த், அனஸ்வரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயலும் ஒரு குழுவைப் பற்றிய கதைதான் இந்த “குமரி மாவட்டத்தின் தக்ஸ்” படம்.

2005ல் நாகர்கோவில் சிறைச்சாலைக்கு கைதியாக வருகிறார் சேது (ஹ்ருதூ ஹாரோன்). கொலை மற்றும் கொள்ளை குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதே சிறையில் இருக்கும் துரையுடன் (பாபி சிம்ஹா), சேதுவுக்கு நட்பு ஏற்படுகிறது. இந்த ஜெயிலின் வார்டன் ஆரோக்ய தாஸ் (ஆர்.கே.சுரேஷ்), படு ஸ்ட்ரிக்டான ஆளாக இருக்கிறார்.

கைதிகளை அடித்து நொறுக்குவது, மிரட்டி உருட்டுவது என டெரர் காட்டுகிறார். இதற்கிடையே தன் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்பதை விரும்பாத சேது, அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறார். அந்த திட்டத்தில் துரையையும் கூட்டு சேர்க்கிறார். இதன் பிறகு அவர்கள் தப்பிக்க போடும் திட்டமும், அது நிறைவேறியதா என்பதும் தான் படத்தின் மீதிக்கதை.

இந்தப் படத்தின் நிறைகள் எனப் பார்த்தால், மலையாளத்தில் உருவான ஸ்வாதந்தர்யம் அர்தராத்திரியில் படத்தில் இருந்த அதே டென்ஷனை, தவறவிடாமல் இந்த ரீமேக்கிலும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிருந்தா. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அறிமுகப்படுத்துவது, ஜெயிலில் இருந்து தப்பிக்க திட்டம் போடுவது, அதை செயல்படுத்துவது என எந்த இடமும் தேக்கமே இல்லாமல், விறுவிறுவென நகர்கிறது. முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹ்ருதூ ஹாரோன் மிக சிறப்பு என்ற அளவிலும் இல்லை, மிக மோசம் எனும் அளவுக்கும் சொதப்பவுமில்லை. மிக சேஃபான முகபாவனைகளை மட்டுமே கொடுத்து தப்புகிறார்.

அடுத்தடுத்த படங்களில் இன்னும் தன்னை தயார்படுத்த வேண்டும். பாபி சிம்ஹா எமோஷனலான இடங்களிலும், சண்டைகளிலும் சிறப்பாக நடித்துள்ளார். இவர்களில்லாமல், முனீஷ்காந்தை வைத்து வரும் நகைச்சுவைக் காட்சிகள், அனஸ்வராவை வைத்து வரும் ரொமாண்டிக் காட்சிகள் இரண்டும் நன்றாகவே ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது. சாம் சி எஸின் பின்னணி இசை, படத்தின் டென்ஷனை க்ளைமாக்ஸ் வரை தக்க வைக்கிறது.

படத்தின் குறைகள் என்று பார்த்தால், படத்தில் இருக்கும் செய்ற்கைத்தனம் தான் முதலில் வந்து நிற்கிறது. இந்த செயற்கை தனம் படத்தின் ஒளிப்பதிவில் இருந்தே ஆரம்பிக்கிறது. படத்தின் துவக்கத்தில் வரும் மழையில் நடக்கும் சண்டை, ஜெயிலுக்குள் வரும் வெளிச்சம், பீடி புகைக்குள் ஆட்கள் வருவது என அழகுக்காக பல ஐடியாக்கள் செய்திருக்கிறார்கள். ஆனால், அது படத்துடன் ஒன்றாமல் தனியாக துறுத்திக் கொண்டு மட்டுமே தெரிகிறது. மலையாளத்தில் இருந்த அனைத்தும், இதில் இருக்க வேண்டும் என்று உழைத்திருக்கிறார்கள். ஆனால் அதிலிருந்த லைவ்லி உணர்வை கொண்டு வர படக்குழுவினரால் முடியவில்லை. காரணம் படத்தின் சுமாரான ரைட்டிங் தான்.

ப்ரிசன் ப்ரேக் ஜானர் (Prison Break Genre) என்றாலே, அதில் சிலர் ஜெயிலில் இருந்து தப்பிக்க நினைப்பார்கள், அது நடந்ததா இல்லையா என்பதுதான் கதை. அப்படி ஒரு கதைக்குள் வரும் பல கதாபாத்திரங்களுக்கு டயலாக் வெறும் “ஏய் தப்பிக்கவா பாக்க” என்பதுதான். அவர்கள் தப்பிப்பதுதான் கதையே எனும் போது, இந்த வசனம் படத்தின் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பது பொறுமையை சோதிக்கிறது. இந்தப் படத்தின் உச்சகட்ட செயற்கைத் தனம் நடிகர் ஆர்.கே.சுரேஷின் நடிப்பு. அந்த வட்டார வழக்கு பேச முயற்சிப்பது, அவர் கொடுக்கும் பர்ஃபாமென்ஸ் என எல்லாவற்றிலும் ஒரு செயற்கைத் தனம் படம் முழுக்க தெரிந்து கொண்டே இருக்கிறது.

மொத்தத்தில் இது மிக மோசமான படம் என்று கேட்டால், இல்லை. பெரிதாக போர் அடிக்காமல் நகரக் கூடிய படமாக தான் கொடுத்திருக்கிறார்கள். அதே நேரம் மிகச் சிறப்பான படமா என்றால், அதுவும் இல்லை. வெறும் டைம்பாஸ் படம் என்ற அளவில் தான் இருக்கிறது இந்த தக்ஸ். எந்த புது அனுபவமும் தேவை இல்லை, ஒரு ப்ரிசன் ப்ரேக் படம் என்றால் போதும் என்பவர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம்.