ராயன் pt web
சினிமா

தனுஷுக்கு பிறந்தநாள் பரிசு! மூன்று நாட்களில் இத்தனை கோடிகளா.. வசூல் மழையில் ராயன்!

Angeshwar G

நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ராயன். இத்திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளியாகும் 50 ஆவது திரைப்படம் என்பதால் அறிவிப்பு வெளியானதில் இருந்தே எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், செல்வராகவன், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் கடந்த 26 ஆம் தேதி திரைக்கு வந்தது. முன்னதாக படத்தின் பாடல்கள், ட்ரைலர்கள் உள்ளிட்டவை வரவேற்பினைப் பெற்றது. அடங்காத அசுரன் தான் பாடலில் “உசுரே நீ தானே..” வரிகள் வைரலானது.

முதல்நாளில் மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்ற ராயன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனுஷின் இயக்கத்தில் இரண்டாவது திரைப்படம் என்பதால் அவரது இயக்கத்திற்கு பாராட்டுக்களும் கிடைக்கின்றன. தனுஷ் ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர். தொடர்ச்சியாக ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ராயன்

இந்நிலையில்தான் படத்தின் முதல் 3 நாள் வசூல் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது. ராயன் திரைப்படம் முதல் மூன்று நாட்களில் உலகளவில் 70-75 கோடிகளை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும்நாட்களில் ரூ. 100 கோடி வசூலைத் தொட்டுவிடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேசமயத்தில் இந்திய அளவில் ரூ.50 கோடி வசூலை நெருங்கி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய அளவில் ராயன் திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி ரூ.14.75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் நாளின் வசூலைவிட அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அளவில், டெடொபூல் திரைப்படத்தைத் தாண்டி ராயன் திரைப்படத்திற்கு போட்டியாக பெரிய படங்கள் வெளியாகாததும் குறிப்பிடத்தக்கது.