‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்திற்காக அனுமதியின்றி உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகத்தை ட்ரோன் மூலமாக படம்பிடித்த படக்குழுவினர் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தை சிலர் ட்ரோன் கேமரா மூலம் படம்பிடிப்பதாக எஸ்பிளனேடு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் அத்துமீறி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நவீன் குமார், சுரேஷ், ரூபேஷ் என்பதும், இவர்கள் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடித்து, இயக்கும் ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தின் படக்குழுவினர் என்பதும் தெரியவந்தது.
‘பிச்சைக்காரன் 2’ படத்திற்காக சென்னை ரிப்பன் மாளிகை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கட்டிடத்தை ட்ரோன் கேமரா மூலமாக படப்பிடிப்பு நடத்த போலீசாரிடம் அனுமதி பெற்றுள்ளதும் தெரியவந்தது. ஆனால் அங்கு படப்பிடிப்பு நடத்திவிட்டு அப்படியே அனுமதியின்றி உயர்நீதிமன்றம் மற்றும் பார் கவுன்சில் வளாகம் ஆகியவற்றை ட்ரோன் கேமரா மூலமாக அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது விசாரணையில் தெரியவந்தது. அத்துமீறி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட காரணத்தினால் படக்குழுவினர் 3 பேர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய ட்ரோன் கேமராவை பறிமுதல் செய்த போலீசார், பின்னர் அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர். மேலும் உயர் நீதிமன்ற வளாகம், தலைமை செயலகம், ரயில் நிலையம் போன்ற அரசுக்கு சொந்தமான இடங்களில் அனுமதி பெறாமல் ட்ரோன் கேமரா மூலம் படப்பிடிப்பு நடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.