சினிமா

வலியால் வந்த வார்த்தைகள்: தெலுங்கு நடிகர்களிடம் ஒற்றுமையில்லை என்றபேச்சுக்கு நானி விளக்கம்

வலியால் வந்த வார்த்தைகள்: தெலுங்கு நடிகர்களிடம் ஒற்றுமையில்லை என்றபேச்சுக்கு நானி விளக்கம்

EllusamyKarthik

நடிகர் நானி அண்மையில் தெலுங்கு திரையுலக நடிகர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லை என சொல்லி இருந்தார். அவர் நடிப்பில் வெளிவந்துள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தின் புரோமோஷனின் போது இதனை சொல்லி இருந்தார். ஆந்திர மாநிலத்தில் சினிமா டிக்கெட்டுகளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசும்போது தான் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.

மேலும், அப்போது பேசுகையில், “இங்கு எங்களுக்கு நிறைய பிரச்னைகள் உள்ளன. அதுமாதிரியான இக்கட்டான சூழலில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால், எங்களிடம் ஒற்றுமை இல்லை. நாங்கள் ஒன்றாக இணைந்து பிரச்னைகளுக்கு தீர்வு காண தவறுகிறோம்” என நானி சொல்லி இருந்தார். 

அவரது இந்தப் பேச்சுக்கு சில தரப்பினர் விமர்சனங்களை முன் வைத்து இருந்தனர். 

இந்நிலையில், தற்போது தனது பேச்சு குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். “வலியால் வந்த வார்த்தைகள் அவை. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என நான் விரும்பியதால் வந்தது அது. எல்லோரும் ஒன்றாக இணைந்து, அதனை எப்படி வெளிப்படுத்த வேண்டுமோ அப்படி வெளிப்படுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். 

டிக்கெட் விலையேற்ற விவகாரத்தில் தெலுங்கு திரை உலகில் அது தொடர்பாக எதிப்பு குரல் தெரிவித்துள்ள ஒரே நடிகர் நானி மட்டுமே. மற்ற எந்தவொரு நடிகரும் அது குறித்து பேசவில்லை. தனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் நானி.