சினிமா

“தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல்”- ஆர்கே.செல்வமணி ஆதங்கம்

webteam

 ‘தொட்ரா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஏ.வெங்கடேஷ்,​ மீரா கதிரவன், கலைப்புலி எஸ்.தாணு மற்றும் படக்குழுவினரும் கலந்துகொண்டனர். 

விழாவில் நடிகர் பரத் பேசும்போது, “தொட்ரா படம் டைட்டிலிலேயே பாஸ்மார்க் வாங்கிவிட்டது. எனக்கு காதல் படம் பிரேக் கொடுத்தது போல பிருத்விக்கு இந்த ‘தொட்ரா’ படம் அமையும் என சொல்கிறார்கள்.. உண்மைதான் அந்தப்படம் எனக்கு மட்டுமல்லாமல் அதில் பணியாற்றிய பலருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது... அதேபோல இந்தப்படமும் ஒரு காவியமாக அமையும் என நம்புகிறேன்” என்றார். 

அடுத்தாக பேசிய பெப்சி தொழிலாளர்கள் சங்க தலைவர் ஆர்கே.செல்வமணி, “ஒரு பாடல் ஹிட்டானால் அதை வாங்கி விற்பவர்களுக்கு 30 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது.. ஆனால் அதை உருவாக்கிய படைப்பாளிகளுக்கு 30 ரூபாய் கூட கிடைப்பதில்லை. இது என்ன சிஸ்டம்..? நாங்கள் உருவாக்கிய அந்த பாடல்களை எங்கள் விழாக்களில் நாங்கள் பயன்படுத்துவதற்கே, வெறும் 12 படங்களின் பாடல்களுக்கு 90 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. ஆனால் அந்த 12 படங்களின் பாடல்களை எடுத்த தயாரிப்பாளர்களுக்கு 90 லட்ச ரூபாய் ஆடியோ ரைட்ஸ் கொடுக்காத ஒரு நிறுவனம், ஒருநாளைக்கு ஒரு ஷோவுக்கு மட்டும் பயன்படுத்த 90 லட்ச ரூபாய் நம்மிடம் வாங்கும் அளவுக்கு கொண்டுவந்துவிட்டது யார்..? பல ஆயிரம் கோடிகளை நம்மை வைத்து வேறு யாரோ சம்பாதிக்கிறார்கள்.. ஆனால் நமக்கோ பல நூறு ரூபாய்களை பார்க்க முடியவில்லை..

எல்லா மாநில சினிமாவுக்கும் ஒரு வீடு.. ஒரு வாசல்.. ஆனால் தமிழ் சினிமாவுக்கு மட்டும் ஒரு வீடு மூன்று வாசல். அதனால் யார் வேண்டுமானாலும் எந்த வழியாகவும் உள்ளே நுழையலாம் என்கிற நிலை. டைட்டில் பதிவு செய்யும் குழப்பங்கள் கூட இதனால் தான். இப்போது நடைபெற்ற போராட்டம் கூட, தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களில் தங்கள் கைக்காசை போட்டு மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்காமல், முந்தைய படத்தின் வருமானத்தில் இருந்து கொடுக்கும் நிலையை உருவாக்கவேண்டும் என்பதற்காக நடத்தப்பட்டது தான்.. தயாரிப்பாளர்கள் யாரையும் நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை.. அவர்களுடன் எங்களுக்கு எந்தப் பகையும் இல்லை.. இதைத் தயாரிப்பாளர்கள் அனைவரும் புரிந்துகொண்டு ஒத்துழைத்தால் தமிழ்சினிமா சுபிட்சமாக இருக்கும்” என்றார். 

அடுத்ததாக பிரபல இயக்குநரும் இந்தப்படத்தின் நாயகன் பிருத்வியின் தந்தையுமான பாண்டியராஜன் பேசியபோது, “பிருத்வி இவ்வளவு நண்பர்களை சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும்.. ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியை பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது.” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார். 

நிகழ்ச்சியின் இறுதியில் பேசவந்த இயக்குநர் கே.பாக்யராஜ், “பாண்டியராஜன் தனது மகனைப் பற்றி ரொம்பவே ஃபீல் பண்ணிப் பேசினார்.. அவரே ஃபீல் பண்ணினால், அவருக்கு முன்னாடி வந்த நான் என் மகன் சாந்தனுவை பற்றி எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பேன்... பத்து வருடங்களுக்கு முன் ‘காதல்’ படத்தில் நடிக்கச்சொல்லி சாந்தனுவுக்குத்தான் அந்த வாய்ப்பு வந்தது.. படம் நிச்சயம் ஹிட்டாகும் என நன்றாகவே தெரிந்தது.. ஆனாலும் அப்போது அந்தப்படத்தில் நடிக்கும் அளவுக்கு அவருக்கான வயது இல்லை என மறுத்துவிட்டேன். அதற்குப்பின் அந்த வாய்ப்பு பரத்திற்குப் போய், படமும் மிகப்பெரிய ஹிட்டாகி விட்டது. அதனால் யாருக்கு என்ன கிடைக்கவேண்டுமோ அது எல்லாமே வரும் நேரத்தில் தான் வரும்.. அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை.” என வாழ்த்திப் பேசினார்...