சினிமா

ஓடிடி திரைப் பார்வை: ‘செஞ்சுரி கவுடா’வின் 'திதி'யும், நமக்கு கிடைக்கும் சேதியும்!

ஓடிடி திரைப் பார்வை: ‘செஞ்சுரி கவுடா’வின் 'திதி'யும், நமக்கு கிடைக்கும் சேதியும்!

subramani

'கன்னடப் படங்கள் என்றாலே கமர்ஷியல்தான்', 'லாஜிக் இல்லாத படங்களைத்தான் கன்னட திரைப்பட ரசிகர்கள் கொண்டாடுவார்கள்' என்பன போன்ற விமர்சனங்களை எல்லாம் சமீபத்திய பல கன்னடப் படங்கள் அடித்து நொறுக்கியிருக்கின்றன. 2015-ஆம் ஆண்டு வெளியான 'திதி' என்கிற டார்க் ஹியூமர் கன்னடப் படம் மிகப்பெரிய அதிர்வினை இந்திய சினிமாவில் ஏற்படுத்தியது. தமிழில் கி.ராஜநாராயணன், பூமணி போன்றோர் எழுதிய மண்சார் இலக்கியங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஒரு திரைச்சித்திரமே 'திதி' எனும் கன்னடப் படம்.

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் இருக்கும் தொலைதூரக் கிராம் ‘நோடேகொப்பலு’. அங்கு வசிக்கும் பாரம்பரிய பெரிய குடும்பம் 'செஞ்சுரி கவுடா’வினுடையது. வயதில் செஞ்சுரி போட்டவர் செஞ்சுரி கவுடா. அவர் அவ்வூரின் இளசுகளையும் பெருசுகளையும் வம்பிழுத்து பொழுதுபோக்கிக் கொண்டிருக்கிறார். இளவயதில் பெரிய மைனர் என்று பெயரெடுத்தவருக்கு இப்போது வயது 101. தற்செயலாக சிறுநீர்கழிக்கப் போன செஞ்சுரி கவுடா அப்படியே மண்ணில் சாய்ந்து இறந்து போகிறார்.

செஞ்சுரி கவுடாவின் மகன் கட்டப்பாவிற்கு வயது தோராயமாக 80. கட்டப்பாவிற்கு ஒரு மகன், அவர் பெயர் தமண்ணா. தமண்ணாவின் மகன் அபி. அபியே இவ்விழுதில் தொங்கும் கடைசிக் குஞ்சம். இத்தனை தலைமுறைகளைக் கண்ட செஞ்சுரி கவுடா 101 வயதில் இறந்து போகவே ஊர்மக்கள் கூடி அவரை கொண்டாடி அடக்கம் செய்கின்றனர். செஞ்சுரி கவுடா பெருவாழ்வு வாழ்ந்ததால் அவருக்கு பதினாறு நாள்கள் நினைவுச் சடங்குகள் செய்து இறுதியாக 500 பேரை அழைத்து கறி விருந்து வைப்பதென திட்டம். இந்த 'திதி' நிகழ்வில் நடப்பவை எல்லாம்தான் 'திதி' எனும் இந்த அற்புத சினிமாவின் திரைக்கதை.

செஞ்சுரி கவுடாவின் மகன் கட்டப்பா அரை டவுசர் அணிந்து கொண்டு ஆசை துறந்த தேசாந்திரியாக அவ்வூரை சுற்றிக் கொண்டிருப்பவர். கட்டப்பா தனது ஒரு நாளை சிறப்பிக்க அதிகபட்சமாக ஒரு பாட்டில் டைகர் விஸ்கி போதுமானது. அவரது வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அனுபவப் பித்தேறிய வாழ்க்கை மொழிகள். ஒரு காட்சியில் இறந்துபோன செஞ்சுரி கவுடாவின் பேரன் தமண்ணா தன் தகப்பனும் செஞ்சுரி கவுடாவின் மகனுமான கட்டப்பாவை சடங்கு செய்ய அழைக்கிறார். அதற்கு கட்டப்பா குடித்துவிட்டு “ஏன்டா இல்லாத ஆட்டம் போடுறீங்க... நீங்க பண்ற கூத்தை எல்லாம் செத்துப் போனவன் எழுந்து வந்து பாக்கப் போறானா..?” என்று சொல்வார். திதி நாள்களின் ஒவ்வொரு சடங்கிற்கும் கட்டப்பாவை ஆள்விட்டுத் தேடும் படியாகவே இருக்கும்.

இறந்தவரின் பேரன் தமண்ணாவோ 'அப்பன் கட்டப்பா எதிலும் பிடிப்பு இல்லாமல் திரிகிறார், ஆனால் இறந்தவருக்கு இவர்தான் வாரிசு எனும் முறையில் சொத்துக்கள் இவர் பெயருக்கு தான் வரும் என்ன செய்யலாம்’ என சிந்திக்கிறான். இதனால் செஞ்சுரி கவுடாவின் மகன் கட்டப்பா இறந்து விட்டதாகக் கூறி சொத்துக்களை விற்க முயன்று மாட்டிக் கொள்கிறான். கடைசி வாரிசு அபியோ கிடாய் வாங்க வைத்திருந்த காசில் குடித்துவிட்டு சீட்டாடி தோற்றுவிடுகிறான். இவை எல்லாம் இறந்த செஞ்சுரி கவுடாவின் திதி நாள்களில் நடக்கின்றன.

படத்தில் கட்டப்பா கதாபாத்திரம் ஏன் இப்படி பிடிப்பற்ற தேசாந்திரியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது என நியாயம் செய்ய ஒரு காட்சியுண்டு. அத்தனை முக்கியமான காட்சி அது. அக்கிராமத்திற்கு வந்து செம்மறி ஆட்டுக் கிடை போட்டிருக்கும் நாடோடிக் கூட்டத்துடன் இரவில் மது அருந்திவிட்டு கட்டப்பா பேசுகிறார். அவரைச் சுற்றி ஆணும் பெண்ணுமாக கதை கேட்க அமர்ந்திருக்கிறார்கள். கட்டப்பா சொல்கிறார் “அப்ப நான் ரொம்ப சின்னப் பையன். என் அம்மா தவறிப் போனாங்க. இப்ப செத்துப் போனாரே என் தகப்பனார் அவரு ஒரு சின்னப் பொண்ண கூப்பிட்டு வந்து இவள நீ கட்டிக்கடானு என்கிட்ட சொன்னாரு. நான் சொன்னேன் எனக்கு இன்னும் வயசு வரலனு. ஆனா அவரு கட்டாயப்படுத்தி அந்தப் பெண்ண எனக்கு கட்டி வெச்சாரு. ரெண்டு பிள்ளையும் பிறந்துச்சு. ஒரு நாள் நான் மரத்து மேல ஏறி கிளை வெட்டும் போது என் கண்ணுல பாக்கக் கூடாதத பாத்துட்டேன். என் சம்சாரமும் என் தகப்பனாரும் மரத்தடியில ஒன்னா இருந்தத என் கண்ணால பாத்தேன். அதை கவனிக்காத என் தகப்பன் எழுந்து போயிட்டாரு. நான் பாத்தத என் சம்சாரம் பாத்துட்டா. ஆனா நான் அவகிட்ட அது பத்தி எதுவும் கேட்டுக்கல. ஒரு நாள், ரெண்டு நாள் போச்சு. ராத்திரி திடீர்னு ஒரு சத்தம் என்னனு ஓடிப்போய் பாத்தா நான் பயந்தது போலவே என் சம்சாரம் என் ரெண்டு பிள்ளைகளோட கிணத்துல குதிச்சுட்டா. நானும் குதிச்சேன். ஆனா என்னால ஒரு பிள்ளைய மட்டும்தான் காப்பாத்த முடிஞ்சது” என தன் மனதில் கிடந்த அந்த கனமான ப்ளாஷ் பேக்கை சொல்லி முடிக்கிறார்.

இதில் என்ன சிறப்பு என்றால், தன் ப்ளாஷ் பேக்கை சொன்னவர் கூடவே “இதெல்லாம் உண்மையாவே என் வாழ்க்கையில நடந்தது தானா..? இல்ல நேத்து ராத்திரி நான் கண்ட கனவானு எனக்கு தெரியல...” என்கிறார். இப்படியான நுட்பமான இடங்களில்தான் திதி எனும் இந்த சினிமா இலக்கியத் தரத்தை அடைகிறது.

உண்மையில் நம்முடைய வாழ்வில் என்றோ எப்போதோ நடந்த சில விசயங்கள் உண்மையில் நமக்கு நடந்தது தானா இல்லை கனவா என்று நினைக்கத்தான் தோன்றுகிறது. இத்தனை இலக்கியத் தரமான படத்தை இயக்கிய ராம் ரெட்டிக்கு இப்படத்தை இயக்கும் போது வயது 26 தான். இப்படத்தில் நடித்தவர்களில் பலரும் தொழில் முறை நடிகர்கள் இல்லை. நோடேகொப்பலு கிராம வாசிகளே இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் டோரோன் டெம்பர்ட் இப்படத்திற்கு இன்னொரு இயக்குநர் என்றே சொல்லவேண்டும். வெக்கை பொங்கும் அக்கிராமத்திற்குள் நம்மை அழைத்துச் சென்று செஞ்சுரி கவுடாவின் திதி விருந்தில் நம்மை அமர வைக்கிறார். கட்டப்பாவாக நடித்திருக்கும் சென்ன கவுடா இப்படத்திற்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார்.

63வது ஆண்டுக்கான தேசிய விருதினை இப்படம் பெற்றது. 2017ஆம் ஆண்டுக்கான கன்னட பிலிம் பேர் விருதினையும் இப்படம் பெற்றது. மேலும் தங்கச் சிறுத்தை விருது உள்ளிட்ட பல சர்வதேச திரைப்பட விருதுகளையும் இப்படம் வென்றது. இந்திய திரைக் கலைஞர்கள் அனுராக் காஷ்யப், இர்ஃபான், சங்கர் உள்ளிட்டோர் இப்படத்தை பெரிதும் பாராட்டி இருந்தனர் அமெரிக்க திரைமேதை Francis Ford Coppola பிரஞ்சு இயக்குநர் Jean-Pierre Jeunet ஆகியோர் தாங்கள் 'திதி' திரைப்படத்தின் ரசிகர்கள் என்று கூறினர். இந்தப்படம் நெட்பிளிக்ஸில் காணக் கிடைக்கிறது.

சர்வதேச சினிமா என்பது எப்போதுமே இந்திய எல்லைக்கு வெளியில்தான் கிடைக்கும் என்கிற பிம்பத்தை 'திதி' போன்ற தத்துவார்த்த சினிமாக்கள் பலமுறை தகர்த்திருக்கின்றன.

- சத்யா சுப்ரமணி