சினிமா

‘மன்மத லீலை’ முதல் ’செஃல்பி’ வரை: இந்தவாரம் வெளியாகும் திரைப்படங்கள்!

‘மன்மத லீலை’ முதல் ’செஃல்பி’ வரை: இந்தவாரம் வெளியாகும் திரைப்படங்கள்!

sharpana

இயக்குநர் வெங்கட் பிரபுவின் ‘மன்மத லீலை’ முதல் ஜி.வி பிரகாஷின் ‘செல்ஃபி’ வரை இந்தவாரம் சில திரைப்படங்கள் வெளியாகின்றன.

’மன்மத லீலை’

’மாநாடு’ வெற்றிக்குப்பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் ‘மன்மத லீலை’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன. குறிப்பாக, படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதால் ஏகோபித்த வெய்ட்டிங்கில் காத்திருக்கிறார்கள் வெங்கட் பிரபு ரசிகர்கள். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் பாய்லர் போல் ரசிகர்களின் மனதை சூடாக்கியது. அசோக் செல்வன் நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு வெங்கட் பிரபுவின் உதவி இயக்குநர் மணிவண்ணன் கதையை எழுதியுள்ளார். வெங்கட் பிரபுவின் 10-வது படமாக உருவாகியுள்ள ’மன்மத லீலை’ நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது.

’இடியட்’

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘பார்ட்டி’ படத்திற்குப்பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகும் படம் ‘இடியட்’. ‘தில்லுக்கு துட்டு’, ‘தில்லுக்கு துட்டு 2’ என பேய் படங்களாக இயக்கிய ராம் பாலா இயக்குகிறார்.  நிக்கி கல்ராணி நாயகியாக நடித்துள்ள இப்படத்தினை வழக்கமாக நகைச்சுவை ப்ளஸ் பேய் கதைக்களத்திலேயே உருவாக்கி ஹாட்ரிக் வெற்றி கொடுக்க காத்திருக்கிறார் ராம் பாலா. விக்ரம் செல்வா இசையமைத்துள்ள இப்படத்தினை சித்தார்த் ரவிபதி தயாரித்துள்ளார். நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி ‘இடியட்’ தியேட்டர்களில் வெளியாகிறது.

’செல்ஃபி’

’ஜெயில்’ படத்திற்குப் பிறகு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் ‘செல்ஃபி’. முக்கிய கதாபாத்திரத்தில் கெளதம் மேனன் நடித்துள்ள இப்படத்தில் வர்ஷா பொல்லம்மா நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையைத்துள்ளார். சபரீஷ் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் மதிமாறன் இயக்கியிருக்கிறார். ஜி,வி பிரகாஷ் ப்ளஸ் கெளதம் மேனன் நடித்திருந்தாலும் மதிமாறன் இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர் என்பதால், இப்படத்தையும் சினிமா ரசிகர்கள் உற்றுநோக்கிக் காத்திருக்கிறார்கள். 

இதேபோல், மலேஷியாவில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பூச்சாண்டி வரான்’ மற்றும் ‘மார்பியஸ்’ உள்ளிட்டப் படங்களும் நாளை வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.