சினிமா

ரஜினிக்குப் பிடித்தது சர்க்கரைப் பொங்கலா? மீன் குழம்பா?: - சுவாரஸ்ய தகவல்கள்

ரஜினிக்குப் பிடித்தது சர்க்கரைப் பொங்கலா? மீன் குழம்பா?: - சுவாரஸ்ய தகவல்கள்

webteam

இன்றைக்கு மீண்டும் தலைப்புச் செய்தியாகி இருக்கிறார் ரஜினி. ‘மீன் குழம்பு வைக்கும் சட்டியை கழுவாமல் அதில் சர்க்கரைப் பொங்கல்’ வைக்க முடியாது எனச் சொல்லி இருக்கிறார். சர்க்கரைப் பொங்கலை யாரும் மீன் குழம்பு வைக்கும் சட்டியில் வைக்கமாட்டார்கள். அதேபோல் சர்க்கரைப் பொங்கல் வைக்கும் பானையில் யாரும் மீன் குழம்பும் வைக்கமாட்டார்கள். மீன் குழம்பை சட்டியில் வைக்க வேண்டும். அதே மாதிரி சர்க்கரைப் பொங்கலை பானையில் வைக்க வேண்டும். இந்த வேறுபாடு அறியாதவர் இல்லை ரஜினி.

அரசியலில் இன்றைக்கு நிலவும் வேறுபாட்டை உணர்த்துவதற்காக அவர் இந்த ஒப்புமையை கூறியிருக்கிறார். நாம் இப்போது இந்தக் கட்டுரையில் பேச இருப்பது சர்க்கரைப் பொங்கல் மற்றும் மீன் குழம்பு அரசியல் பற்றியல்ல. ரஜினிக்கு சர்க்கரைப் பொங்கல் பிடிக்குமா? அல்லது மீன் குழம்பு பிடிக்குமா? என்பதைப் பற்றிதான்.

ஆரம்பக் காலங்களில் ரஜினி அதிகம் விரும்புச் சாப்பிட்டது அசைவ சாப்பாட்டைதான். அதுவும் அவருக்குப் பிடித்த உணவு வகைகள் பல அசைவை பட்டியலில் வருபவைதான். ரஜினியின் வீட்டில் உள்ளவர்கள் சைவம் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் ரஜினி அசைவ பிரியர். ஆகவே, அதை அவர் விரும்பி சாப்பிடுவதற்காக தனியாக நண்பர்களை வைத்திருந்தார்.

ரஜினியிடம் நெருங்கிப் பழகியவர்கள் அவரின் அசைவ உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றி அதிகமாக பேசியிருக்கிறார்கள். அதில் ஒருவர் முத்தப்பா. இவர் ஏவிஎம் ஸ்டியோவில் வேலை செய்தவர். பல காலம் வரை ரஜினியின் பர்சனல் மேக் அப் மேனாக இருந்தவர். வடபழனியில்தான் இவர் பல வருடமாக குடியிருந்து வந்தார். இந்த முத்தப்பா, பலமுறை ரஜினி ஒரு அசைவ சாப்பாட்டுப் பிரியர் என்பதை விளக்கி பேட்டிகள் கொடுத்திருக்கிறார். எப்போது எல்லாம் அசைவ உணவான மீன் குழம்பை ரஜினி சாப்பிட விரும்புகிறாரோ அப்போது எல்லாம் முத்தப்பா வீட்டிற்கு வந்துவிடுவார். பெரும்பாலும் முத்தப்பா வீட்டிற்கு ரஜினி இரவு நேரங்களில் ஒரு சாதாரண காரில் வருவார். ஒண்டு ஒடிசலான சந்திற்குள் உள்ள முத்தப்பா வீட்டிற்கு வரும்போது ஏதாவது மாறுவேடத்தில்கூட ரஜினி வருவது சகஜம். இவரது வீட்டில் ரஜினி மீன் குழம்பை ருசித்து சாப்பிடுவார். அதேபோல் முத்தப்பாவின் மனைவி வைக்கும் தலைக்கறி குழம்பு ரஜினிக்கு மிகவும் பிடிக்கும். ஆட்டுக் குடல் உணவை அவர் விரும்பிக் கேட்டு சாப்பிடுவார்.

பொதுவாக ரஜினி இவர்களின் வீட்டுக்கு வருவதற்கு முன்பே நான் இன்று வருகிறேன் என முன்கூட்டியே சொல்லிவிடுவார். அதன் பின் அவர்கள் என்ன சமைக்கலாம் எனக் கேட்டு சமைத்து வைத்துவிடுவார்கள். முதன்முதலாக ரஜினி இமய மலை சென்றபோது மலையேற்றத்திற்கான அந்தப் பயணத்திற்கு ஒரு தடியை ரஜினி பயன்படுத்தி இருந்தார். அந்தத் தடியை முத்தப்பா வயது முதிர்வால் நடக்க சிரமப்பட்ட போது ரஜினி அதனை அன்பளிப்பாக கொடுத்துவிட்டார். இந்த முத்தப்பா 2018 ஆண்டுதான் காலமானார்.

ரஜினிக்கு முத்தப்பா பல ஆண்டு நண்பர். ஆனால் ரஜினிக்கு உணவு விஷயத்தில் பல திடீர் நண்பர்களும் உண்டு. ரஜினிக்கு நீலாங்கரை தாண்டி ஒரு பங்களா இருக்கிறது. அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது சிங்கப்பூர் சிகிச்சைக்குச் சென்று திரும்பியப் பின் இங்குதான் சில மாதங்கள் தங்கி ஓய்வு எடுத்தார். தென்னை மரங்கள் நிறைந்த இந்த பங்களாவில் ரஜினி ஒரு சாதாரண கயிற்றுக் கட்டிலைப் போட்டு படுத்து உறங்குவது வாடிக்கை. அதேபோல் ஒரு தோட்டத்தொழிலாளிப் போல் அங்குள்ள மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவது நாய்களுடன் நேரத்தை செலவிடுவது என மகிழ்ச்சியாக இருப்பார் ரஜினி.

அப்படி இவர் இங்கு தங்கி இருக்கும் போது அவரது பங்களாவுக்குப் பின்புறம் ஒரு சாதாரண குடிசை வீடு உண்டு. அந்த வீட்டிலுள்ளவர்களிடம் ரஜினி, தன்னுடைய ஸ்டார் அந்தஸ்தை கழற்றி வைத்துவிட்டு மிக சகஜமாக பேசுவார். பழகுவார். அப்படியான பழக்கத்தில் அந்த வீட்டு நண்பரிடம் ரஜினி, தனக்கு கருவாட்டுக் குழம்பு வைத்து தரும்படி கேட்டு பல காலம் சாப்பிட்டு வந்தார். ரஜினியை நெருகியவர்களுக்குத் தெரியும் அவர் ஒரு கருவாட்டுக் குழம்பு ரசிகர் என்பது. அதை அவர் தன் பழையப் பேட்டிகளில்கூட கூறியுள்ளார். இந்த அசைவ சாப்பாட்டு நண்பர்கள் எல்லாம் ரஜினிக்கு நெருக்கமானவர்களாக இருந்தார்கள். பிரதிபலன் பார்க்காத இவர்களை ரஜினி, தனது அன்புக்குரியவர்களாக வைத்திருந்தார்.

ஆனால், அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் சிங்கப்பூரில் சிகிச்சை எடுத்து திரும்பிய பிறகு முழுவதுமாக அசைவ சாப்பாடுகளை நிறுத்திவிட்டார். சில ஆண்டுகளாக அவர் உணவு பழக்கம் முழுக்க சைவமாக மாறிவிட்டது. அவரது வாழ்நாளில் அவர் அதிகமாக விரும்பிச் சாப்பிட்ட உணவுகள் அனைத்தும் அசைவ உணவுகள்தான்.

ஆக, சர்க்கரைப் பொங்கலைவிட, ரஜினி தன் வாழ்நாளில் தேடித்தேடி சாப்பிட்ட உணவு மீன்குழம்புதான்.