சினிமா

அதெப்படி கண்பாஷை புரியாமல் போகும்! ஷோபனாவின் காதலுக்கு தகுதியானவரா ‘திருச்சிற்றம்பலம்’?

அதெப்படி கண்பாஷை புரியாமல் போகும்! ஷோபனாவின் காதலுக்கு தகுதியானவரா ‘திருச்சிற்றம்பலம்’?

Rasus

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதி ராஜா, பிரியா பவானி சங்கர் என பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றித் திரைப்படமாக அமைந்திருக்கும் படம்தான் ‘திருச்சிற்றம்பலம்’.

தியேட்டரில் போய் உட்கார்ந்ததுமே, காதை கிழிக்கும் அளவிற்கு வரும் குண்டு சத்தங்களும், ரத்தம் தெறித்து திரை நனையும் காட்சிகளையும், சம்பந்தமே இல்லாத பஞ்ச் வசனங்களையும் வைக்காததற்கே இயக்குநருக்கு முதலில் நன்றி கூறலாம். சமீபத்திய படங்கள் முழுக்க முழுக்க அப்படியே பயங்காட்டிய நிலையில், இப்படி ஒரு ஃபீல்குட் படம் கொடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி.. தனிக்குடும்பங்கள் பெருகி வரும் இக்காலத்தில் வீட்டில் ‘இப்படி ஒரு தாத்தா இருந்தால் எப்படி இருக்கும்’ என இன்றைய தலைமுறையினர் ஏக்கம் கொள்ளும் அளவிற்கு சிறப்பான தாத்தா கதாபாத்திரத்தை கொடுத்ததற்கும் இயக்குநரை பாராட்டலாம். குறிப்பாக ‘ஒரு கட்டம் வரை குடும்ப பாரத்தை சுமப்பது எப்படி சுகமோ, அதேபோல் வயசான பிறகு வீட்டிற்கு பாரமாக இருப்பதும் சுகமே’ என்பது போன்ற வசனங்கள் அற்புதமாக உள்ளன. ஆனால் சில விஷயங்களை ஏன் குறிப்பிட மறந்தார்கள் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம். 

பூவிலிலும் மெல்லியது அழகான காதல். மெல்லிய மொட்டானது அழகான பூவாக மலர்ந்து, இதழ்களுடன் வாசம் வீசுவது எப்படி ஒரு செடிக்கும் தெரியாமல் பூவுக்கும் தெரியாமல் நடக்குமோ, அப்படித்தான் ஒரு அழகான காதலும் இருக்கும். அந்த உணர்வு எங்கு, எப்போது, யார் மேல் உருவாகும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அத்தகைய பூ போன்ற காதலை மற்றொருவர் சொல்லி நம்மால் உணர முடியாது. மவுன மொழியும், கண் பேச்சும் இல்லாமலா ஒரு காதல் இருக்கும்.

யார் ஒருவரால் உங்களின் மவுன மொழியை புரிய முடிகிறதோ, யார் ஒருவரால் உங்களின் கண் அசைவுகளை வைத்து உங்கள் உள்ள உணர்வுகளை கண்டுகொள்ள முடிகிறேதா, யார் ஒருவரிடத்தில் ஒரு கண்ணாடிபோல உங்களை முழுமையாக காட்ட முடிகிறேதா அவர்கள்தான் உண்மையிலேயே உங்களுக்கு நல்ல லைஃப் பார்ட்டனர்.

அப்படி பார்க்கும்போது, திருச்சிற்றம்பலத்திற்கு(தனுஷ்) சாப்பாட்டில் என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பது தொடங்கி எந்த விஷயம் அவனை பாதிக்கும், எப்போது அவன் சந்தோஷப்படுவான்.. எப்போது அவனிடமிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்பது வரை மொத்தமாக அவனை பற்றி அறிந்தவள்தான் ஷோபனா. அவன் இன்ப, துன்பங்கள் என அத்தனையும் அறிந்தவள் ஷோபனா.. அப்படிப் பார்க்கும்போது பலத்திற்கு ஒரு நல்ல மனைவிதான் ஷோபனா.. அவனை வாழ வைக்க வந்த தேவதையும் அவள்தான்.

ஆனால் ஷோபனாவிற்கு பலம் நல்ல நண்பனா? காதலனா? கணவரா எனப் பார்த்தால் இதில் எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவளின் உள்ள உணர்வுகளை துளியும் அறியாத முட்டாள் அவன். அவளின் மவுன மொழியும், கண் பார்வை அசைவும் அவனுக்கு எந்தவொரு உணர்வையும் கொடுக்கவில்லை. எதையும் சகஜமாக பலத்திடம் பகிர்ந்து கொள்ளும் ஷோபனாவிற்கு தன் காதலை சொல்ல முடியவில்லை.. அல்லது அவள் சொல்ல விரும்பவில்லை. காரணம் தன் காதல் எண்ணம் குறித்தோ , தன் மன உணர்வு குறித்தோ, தனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பது குறித்தோ அவனாக அறிய வேண்டும் என ஆசைப்பட்டாள் ஷோபனா.

ஆனால் படத்தில், ஷோபனாவின் தம்பி தனது அக்காளின் காதல் குறித்து கொட்டும்போதுதான், பலமாகிய தனுஷ்க்கு, ஷோபனா தன்னை காதலித்திருக்கிறாள் என தெரியவருகிறது. இத்தனை ஆண்டுகள் அவளுடனேயே சுற்றிய பலத்தாலேயே அவள் உணர்வுகளை கண்டுகொள்ள முடியவில்லையே.. அவளின் அழகான மனதை படிக்கமுடியவில்லையே.. யாரோ சொல்லித்தான் அவள் உணர்வுகளை பலத்தால் அறிய முடிகிறது.

அப்படிப் பாக்கும்போது ஷோபனாவிற்கு பலம் ஒரு நல்ல கணவர் அல்ல... ஒரு நல்ல நண்பர் மாதிரிகூட தெரியவில்லை. ஷோபனா காதல் குறித்து தெரிந்த பின்பு, காதல் உணர்வோடு தனுஷ் இருக்கும் காட்சிகள் இன்னும் பெரிய அளவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் ஒரு நல்ல கிளைமேக்ஸாக இருந்திருக்கும். ஆனால் கிளைமேக்ஸ் ஏதோ உணர்வின்றி திணிக்கப்பட்டதுபோல இருந்தது. பலம், ஷோபனாவோடு கணவராக இணைந்தது, ஒரு அழகான புத்தகத்தில் தேவையில்லாமல் ஒட்டி வைக்கப்பட்ட ஒரு பக்கம்போன்று இருந்தது. 

இரண்டாவது, திருச்சிற்றம்பலம் தனது தந்தையும், தாத்தாவையும் அவன், இவன் என்று ரொம்பவுமே மரியாதை குறைவாக அழைப்பார். படம் முழுக்கவே அப்படித்தான் வரும். தந்தையின் மீதுள்ள வெறுப்பால் அவர் இப்படி நடந்து கொள்கிறார் என கூறப்பட்டாலும் அதற்கேற்ற அழுத்தமான ப்ளாஷ்பேக் காட்சி இடம்பெறவில்லை. அந்த காரணம் போதுமானதாக இருக்கும் போது இதுவும் நெருடலான ஒன்றாகவே படுகிறது.

மூன்றாவதாகவும் ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு ஹீரோவுக்கு ஏதாவது பிரச்னை என்றாலோ, அல்லது அவர் கஷ்டத்தில் இருக்கிறார் என்றாலோ காலங்காலமாக இந்த இயக்குநர்கள் ஏன் அவர் புல் பாட்டல் சரக்கை மொத்தமாக அடிப்பது போன்று காட்சி வைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. போதாக்குறைக்கு தாத்தாவுடன் இணைந்தே மொத்த சரக்கையும் அடிக்கிறார் பலம். ஏன் இதுபோன்ற போதைக் காட்சிகளை இயக்குநர்கள் வைக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

உலகம் வேகமாக வளர்கிறது.. இங்கே மதுபோதை எல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என்று எண்ணத்தில் இயக்குநர் இந்த மதுக்காட்சிகள் சீனை வைத்திருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அப்படிப் பார்த்தால், தியேட்டரில் சண்டையிட்டப் பின் அன்று கோபமாக செல்லும் ஷோபனாவும் மது அருந்துவது போன்ற ஒரு காட்சியை வைத்திருக்கலாமே..? அப்படி வைத்திருந்தால்தானே அது சரிக்கு சமமாக இருந்திருக்கும். அதுபோன்ற காட்சியை வைப்பதற்கு இயக்குநருக்கு ஒரு தயக்கம் இருக்கிறதல்லவா? அதேதயக்கம் பலம் மது அருந்துவது போன்ற காட்சியிலும் ஏன் இயக்குநருக்கு இல்லாமல்போனது?

மதுபோதை காட்சிகளையே இயக்குநர்கள் கையில் எடுக்காமல் இருக்கலாம். மதுக் காட்சிகள் எல்லாம் படத்திற்குத்தானே.. இதை பார்த்து யார் கெட்டுப்போகப் போகிறார்கள் என இயக்குநர் நினைத்தால், ஷோபனாவும் குடிப்பதுபோன்ற காட்சியை குற்றவுணர்வு இல்லாமல் வைத்திருக்க வேண்டும். ஆக மொத்தத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் குடும்பத்தோடு பார்ப்பதற்கு குறைவில்லாத படம்தான் திருச்சிற்றம்பலம் என்பதை மறுப்பதற்கில்லை.