சினிமா

”இந்தியாவுக்குள்தான் இந்தப் பிரிவினைகள்” ஏஆர் ரகுமான் விவகாரம் பற்றி ஸ்ருதி பளீச் பேட்டி

”இந்தியாவுக்குள்தான் இந்தப் பிரிவினைகள்” ஏஆர் ரகுமான் விவகாரம் பற்றி ஸ்ருதி பளீச் பேட்டி

webteam

ஊரடங்கின் தனிமையான நாட்களை இசையால் நிரப்பியிருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்த 100 நாட்களில் ’எட்ஜ்’ என்ற ஒரு அழகிய பாடல் ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். விரைவில் அதன் முதல் ஒரிஜினல் ட்ராக் வெளியிடப்படவுள்ளது. இதுபற்றி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த ஊரடங்கு நாட்களில் ஏதாவது கிரியேட்டிவ்வாக வித்தியாசமாக செய்ய நினைத்தேன். என் மனதில் இருந்து தொடங்கியது எட்ஜ் பாடல். என்னை நானே எப்படிப் பார்ப்பது, எப்படி என்னை நேசிப்பது என்ற கேள்விகளைப் பற்றியது. இது எல்லோருக்கும் மகிழ்ச்சியான தருணமாக இல்லை. எதையாவது இழந்துவிடுவோமோ என்று ஏதாவொரு பயத்தில் பாதுகாப்பற்ற நிலையை உணர்ந்தோம். அவற்றில் இருந்து நாம் ஏதோ கற்றுக்கொண்டோம். இதெல்லாம் அந்தப் பாடலில் இருக்கும்" என்று கூறும் ஸ்ருதி, அவரது பாடலை முதலில் பியானாவில் வாசித்து உருவாக்கியுள்ளார். 

"என் சிறு வயதிலேயே இசைமீதான ஆர்வத்தை கண்டுகொண்டேன். சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், அம்மாவும் நீயே பாடலைப் பாடினேன். அதுதான் என் முதல் பாடல் அனுபவம். 80 ஆயிரம் பேருக்கு மத்தியில் பாடினேன். பலத்த கைதட்டல் கிடைத்தது. புதியவர்களிடம் என்னை அறிமுகப்படுத்திய அந்த கணத்தில் இருந்து இசை என் வாழ்க்கையில் வந்துவிட்டது" என்று ஆர்வத்துடன் பகிர்ந்துள்ளார்.

ஏஆர் ரகுமானின் பாலிவுட் பற்றிய விமர்சனத்துக்குப் பதிலளித்துள்ள ஸ்ருதிஹாசன், "ரகுமான் சார் மிகவும் பிரபலமான இந்தியர்களில் ஒருவர். வெளிநாட்டில் இந்தியர்களை வடக்கு, தெற்கு, மத்திய இந்தியா என்று பார்ப்பதில்லை. நாம் எல்லோரும் அவர்களுக்கு வண்ணமயமான, அதிர்ந்து பேசும், சுவாரசியமான தோற்றம் கொண்ட இந்தியர்கள். இந்தியாவுக்குள்தான் இந்தப் பிரிவினைகள் உள்ளன. அப்படி நினைக்காத நன்கு படித்த விழிப்புணர்வு கொண்ட பலர் மும்பையில் இருக்கிறார்கள்" என்று தன் மனதில் பட்ட கருத்துகளை முன்வைத்திருக்கிறார்.