சினிமா

"ஓடிடி உரிமை தவிர வேறு பணம் சம்பாதிக்கவில்லை": இயக்குநர் பார்த்திபன்

"ஓடிடி உரிமை தவிர வேறு பணம் சம்பாதிக்கவில்லை": இயக்குநர் பார்த்திபன்

webteam

இயக்குநர் ஆர். பார்த்திபனின் ஒத்த செருப்பு, லஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பனோரமா விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அங்கீகாரம் மூலம் சிறந்த படங்களை எடுப்பதற்கான உற்சாகம் கிடைத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் இயக்குநர் பார்த்திபன்.



இந்தப் படத்திற்காக உழைத்த அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி கூறியுள்ள அவர், "இந்தப் படத்திற்கு ஒரு விருதை எதிர்பார்த்தாலும், இன்னும் பெரிய விருதுகளை எதிர்பார்க்கிறேன்" என்கிறார். இரண்டு வகையான இயக்குநர்கள் இருக்கிறார்கள். கமர்ஷியல் படங்களை எடுப்பவர்கள் ஒருவகை. அடுத்து, விருதுகளை நோக்கமாகக் கொண்டு படம் எடுப்பவர்கள். இரண்டாவது வகையைச் சேர்ந்தவன்தான் நான்" என்கிறார் பார்த்திபன்.

ஒத்த செருப்பு போன்ற படங்களை தியேட்டர்களில் வெளியிடுவதற்கு மிகுந்த சிரமப்பட்டதாகக் கூறும் பார்த்திபன், "அந்தப் படத்தில் விளம்பரத்திற்காக செலவழித்த பணத்தைக்கூட திரும்ப எடுக்க முடியவில்லை" என்று கவலைப்படுகிறார். "ஓடிடி தளத்திற்கான உரிமையைச் தவிர, வேறு பணம் சம்பாதிக்கவில்லை. படத்தின் சேட்டிலைட் உரிமைகூட இன்னும் விற்கப்படவில்லை. நல்ல சினிமாவை விரும்பும் ரசிகர்களை நான் நம்புகிறேன். பொருளாதார இழப்புகளைப் பற்றி கவலைப்படாமல் என் பயணம் தொடரும் " என்றும் குறிப்பிட்டுள்ளார்.