”இன்றைய காலக்கட்டத்தில் முஸ்லிம் மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் பழக்கம் இருக்கிறது” என்று ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தின் துவக்க விழாவில் இயக்குநர் அமீர் பேசியுள்ளார்.
‘ஆதி பகவன்’ படத்திற்குப்பிறகு இயக்குநர் அமீர் ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். இப்படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் எழுதியுள்ளார்கள். நாயகனாக கரு பழனியப்பன் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஏ.எஸ்.எம் ஜாஃபர் தயாரிக்கும் இப்படத்தின் துவக்கவிழா நேற்று நடைபெற்றது. இதில், வெற்றிமாறன், கரு.பழனியப்பன், யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். இவ்விழாவில் பேசிய இயக்குநர் அமீர்,
”பொதுவா வெறும் ஸ்கிரிப்டை வைத்து பூஜை போடுவோம். இந்த விழா அப்படியில்லை. இது ஒரு படத்தின் அறிமுக விழா.
ஒரு புதிய தயாரிப்பாளர், இந்த காலத்தில் படம் செய்வதே கடினம். அதிலும், என்னை மாதிரி இயக்குநரை வைத்து படமெடுப்பது இன்னும் கடினம். அவருக்காகத் தான், அவரை அறிமுகப்படுத்தும் நோக்கம் தான் இந்தவிழா. பாரதிராஜா சார் படம் செய்யும் போதே நிறைய கதைகளை வெளியில் வாங்கி செய்வார். ஆனால், எல்லோரும் அவர் கதை என நினைப்போம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வேறொருவரின் கதையை செய்தால் கொஞ்சம் சினிமாவில் ஒரு மாதிரியாக பார்க்கும் பழக்கம் இருக்கிறது. அதை மாற்றலாம் என நானே துவங்கியது தான் இது. நானும் வெற்றியும் சேர்ந்து தினமும் ஒரு புராஜக்ட் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். நான் வேறு படங்கள் செய்யும் நிலையிலிருந்த போது, இந்தப்படத்தை இந்தகதையை செய்யலாம் என தோன்றியது. நான் வெற்றியிடம் ’இறைவன் மிகப்பெரியவன்’ செய்யலாமா என கேட்டேன். ‘கண்டிப்பாக செய்யலாம்’ என்றார்.
இடையில் நான் இன்னொரு படமும் செய்திருக்கிறேன். அதைப்பற்றி அறிவிப்பு விரைவில் வரும். இப்படத்தை பொறுத்தவரை கரு. பழனியப்பன் நடிக்கிறார். இப்போதைக்கு, இது மட்டும் தான் முடிவாகியுள்ளது. எனக்கு இப்படி சுதந்திரமாக வேலை செய்வது தான் பிடிக்கும். வெற்றி முதலில் சொன்னபோதே இதை நாம் செய்திருக்கலாமே என்று தோன்றியது.
இன்றைய காலக்கட்டத்தில் முஸ்லிம் மதத்தை தீவிரவாத மதமாக கட்டமைக்கும் பழக்கம் இருக்கிறது. இன்றைக்கு புதிதாக வருபவர்கள் தங்கள் சாதி அடையாளங்களை தான் முன்னிறுத்துகிறார்கள், இன்றைய காலகட்டத்தில் இது மோசமான விசயமாக இருக்கிறது. இந்தப்படம் எங்களுக்குள் இருக்கும் அழகான உறவை தான் சொல்லவருகிறது. நீங்கள் பார்க்காத புதிய விசயம் எதையும் சொல்லப்போவதில்லை. நீங்கள் பார்த்த விசயங்களை நினைவுகளை தான் இந்தப்படம் சொல்லும். சூரியை வைத்து ஒரு படம் செய்யவுள்ளேன். இன்னும் அடுத்தடுத்து நிறைய படங்கள் செய்யவுள்ளேன். சினிமாவில் என்னை முழுதாக பார்க்கலாம். ஓட்டுக்காக எங்களுக்குள் பகைமையை உண்டாக்காதீர்கள் என்பதை இந்தப்படம் அழுத்தமாக சொல்லும்” என்று கூறியுள்ளார்.