சினிமா

நாளை முதல் தியேட்டர்கள் திறப்பு: என்னென்ன படங்கள் வெளியாகின்றன தெரியுமா?

நாளை முதல் தியேட்டர்கள் திறப்பு: என்னென்ன படங்கள் வெளியாகின்றன தெரியுமா?

sharpana

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. இதனால், தமிழகத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த ஏழு மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் முன்னணி நடிகர், நடிகைகளின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியானது. ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின், விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் சூரரைப் போற்று படமும் வெளியாகவிருக்கிறது.

இந்த ஏழு மாதங்களாக தியேட்டர்கள் திறக்கப்படாததாலும், தங்களுக்கு போட்டியாக ஓடிடி தளங்கள் வந்துவிட்டதாலும் தியேட்டர் உரிமையாளர்கள் தமிழக முதல்வரிடம் தொடர்ந்து தியேட்டர்களை திறக்கச்சொல்லி வற்புறுத்தி வந்தனர். கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி ’50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை நவம்பர் 10 ஆம் தேதி முதல் திறக்கலாம்’ என்று அரசு அனுமதித்தது. இதனால், முன்னணி நடிகர்களின் பழைய படங்களையும், கொரொனா ஊரடங்கின்போது தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருந்த படங்களையும் மீண்டும் திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஏற்கெனவே, பாண்டிச்சேரியில் பிகில் படத்தை மீண்டும் திரையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னையின் முன்னனி திரையரங்குகளான பிவிஆர் மற்றும் சத்யம் சினிமாவில் கடந்த ஆண்டு வெளியான ஜோக்கர், இந்த ஆண்டு வெளியான தாராள பிரபு, ஓ மை கடவுளே, பீஷ்மா, Hit, My spy, 1917 உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இதனால், ஓ மை கடவுளே படத்தின் இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஓ மை கடவுளே வெளியாகும் தியேட்டர்களின் விவரங்களை பகிர்ந்து “போடு.. அமுக்கு குமுக்கு அமால் டுமால்” என்று குதூகலத்தோடு பதிவிட்டுள்ளார்.