சினிமா

இது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல ! எச்சரிக்கை விடுக்கும் '2.0'

நாம் எப்போதாவுது இந்த அவசரமான நகர வாழ்க்கையில் வான் நோக்கி எப்போதாவது பறவை கூட்டங்களை ரசித்திருக்கிறோமா ? விடுமுறை காலங்களில் தீம் பார்க்குக்கு குழந்தைகள் கூட்டிச் செல்லும் நாம் சென்னைக்கு மிக அருகாமையில் இருக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணலாயத்துக்கு சென்று இருக்கிறோமா. ஆனால், இப்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் "2.0" படத்தை பார்த்தால் பறவைகளை ரசிக்கத் தோன்றும். ஆம், இந்த உலகு மனிதர்களுக்கானது மட்டுமே அல்ல சகல ஜீவ ராசிகளுக்கும்தான் என்பதே 2.0 படத்தின் மையக் கரு.

அதை தனக்கே உரிய பிரம்மாண்டத்திலும், உலகத் தரத்திலும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். அப்படி என்ன நடக்கிறது "2.0" கதையில் என்று பார்த்தால், பொது மக்கள் பயன்படுத்தும் செல்போன்கள் திடீர் திடீரென மாயமாகிறது. பேசிக்கொண்டு இருக்கும்போதே செல்போன்கள் வானில் பறந்து செல்கிறது. மேலும், இந்த செல்போன்களால் சிலர் குறிவைத்து கொல்லப்படுகிறார்கள். இதனால் அரசாங்கமே அஞ்சி நடுங்குகிறது. இதற்காக அரசாங்கம் ரோபாட்டிக் விஞ்ஞானியான வசீகரனிடம் ஆலோசனை கேட்கிறது. எதனால் செல்போன்கள் மாயமானது ? யார் இதனை செய்கிறார்கள் ? என ரஜினியும் பெண் ரோபோவான எமி ஜாக்சனும் புறப்படுகிறார்கள் ? அப்போதுதான் இதனை செய்வது பட்சிராஜன் எனும் அக்ஷய் குமார் என தெரிகிறது. ஏன் இதனை அவர் செய்கிறார் ? இதனை ரஜினி எப்படி எதிர்கொள்கிறார் என்பதே திரையில் விரியும் பிரம்மாண்டம்.

ரஜினி "2.0"வில் வசீகரனாகவும், சிட்டியாகவும், சிட்டி 2.0வாகவும் அதற்கடுத்து ஒரு கதாப்பாத்திரமும் இருக்கிறது அது ரசிகர்களுக்கான சர்பரைஸ். ரஜினியின் இத்தனை ஆண்டுகால நடிப்புத் திறனையும், அந்த உற்சாகத்தையும் 2.0வில் கொண்டு வந்திருக்கிறார். சிட்டியின் அறிமுகமும், சிட்டி 2.0வின் அறிமுகங்களிலும் தியேட்டரில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். ரஜினிக்கு சமமான கதாப்பாத்திரம் அக்சய் குமாருடையது. பறவையியல் அறிஞராக பக்சிராஜனாக இரண்டாம் பாதியில் நெகிழவும், மிரட்டவும் வைத்திருக்கிறார். "2.0"வின் ஒட்டுமொத்த திரைக்கதையையும் அக்சய் குமாரை சுற்றியே நடக்கிறது. ஒவ்வொருவிதமான பாவனைகளிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார் அவர்.

நிலா எனும் ரோபோவாக வரும் எமி ஜாக்சன் தன் பங்குக்கு சிறப்பாகவே பணியாற்றியிருக்கிறார். இப்படத்துக்கு பின்னணி இசை ஹாலிவுட் தரம் ஒவ்வொரு ஃபேரமிலும் தன் இசையால் அதிரவைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் முறையாக பாடல்கள் இல்லாத ஷங்கர் படம். ஆனால், பாடல்களுக்கு தேவையில்லாத வகையில் திரைக்கதை அமைப்பு. இப்படத்துக்கான வசனத்தை ஷங்கரும், ஜெயமோகனும் இணைந்து எழுத்யிருக்கிறார்கள். படத்தின் வசனங்களுக்கான தொழில்நுட்ப உதவியை மதன் கார்க்கி வழங்கியிருக்கிறார். "2.0"வின் பிரம்மாண்ட திரைக்கு காரண கர்த்தாவான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, எங்கேயும் நழுவவிடாத வகையில் அமைந்திருக்கிறது ஆண்டனியின் எடிட்டிங்.  

2.0வின் மிகைப்படுத்தப்பட்ட விழிகள் விரியும் காட்சிகளை கொண்டு வந்தவர்கள் சீனிவாஸ் மூர்த்தி தலைமையிலான விஎஃப்எக்ஸ் குழுவினர். கற்பனைக்கும் எட்டாத காட்சிகள், எப்படி இப்படியெல்லாம் செய்தார்கள் என வியக்க வைத்துள்ளார்கள். எல்லாம் சரியாக இருக்கிறதா "2.0"வில் என்ற கேட்டால் இல்லை என்று சொல்லலாம். ஓரிரு காட்சிகள் தொய்வை தரும், சைன்ஸ் பிஃக்ஷன் படங்களில் லாஜிக் பார்ப்பது அபத்தம் என்பதால் அதனை விமர்சிக்க தேவையில்லை. ஆனால், ஓர் தமிழ் படம் இத்தனை பிரம்மாண்டமாய், தொழில்நுட்பத்திலும் மைல் கல்லாய், சமூகத்துக்கு மிகத் தேவையான கதைக் கருவையும் வைத்ததற்கு இயக்குநர் ஷங்கரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இனி வரும் காலங்களில் இந்தியா சினிமாவில் 2.0,க்கு பிறகு பிரம்மாண்ட படங்கள் வரலாம், ஆனால் அதற்கான விதை "2.0"வில் ஷங்கர் போட்டதாக இருக்கும்.