சினிமா

ராஜினாமா செய்தது ஏன்? - பாக்யராஜ் வெளியிட்ட அறிக்கை!

ராஜினாமா செய்தது ஏன்? - பாக்யராஜ் வெளியிட்ட அறிக்கை!

webteam

இயக்குநர் முருகதாஸிடம் கெஞ்சியும் உடன்படாததாலேயே, சர்கார் பட கதையை வெளியே சொல்லவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன் என கே.பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில்  ‘சர்கார்’படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்றும் 'செங்கோல்' என்ற தலைப்பில் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்தது. இயக்குநர் பாக்கியராஜ் தலைவராக உள்ள இந்த அமைப்பு, வழக்கு தொடர்ந்த வருணுக்கு எழுதிய கடிதத்தில் இதனை குறிப்பிட்டது. கே.பாக்யராஜின் கடிதத்துக்கு பிறகு இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. கதை என்னுடையது தான் என்று முருகதாஸ் பிடிவாதமாக இருந்த நிலையில் செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என பாக்யராஜும் தனது கருத்தில் உறுதியாக இருந்தார்.

இதனையடுத்து சர்கார் படத்தின் டைட்டில் கார்டில் "நன்றி ராஜேந்திரன்" என்ற பெயரை போட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டதால் இதுதொடர்பானவழக்கு சமரசத்தில் முடிந்தது. இது குறித்து பேசிய பாக்யராஜ் எனது மகன் கூட விஜயின் ரசிகன்தான். ஆனால் சங்க தலைவர் என்ற முறையில் முடிவெடுத்தேன். இதில் அதிகம் காயப்பட்டது நான்தான். விஜய் ரசிகர்கள் எனது முடிவை புரிந்து கொள்ளாமல் எனது மகனை கடுமையாக விமர்சித்தனர் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தென்னிந்திய எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து இயக்குநர் கே.பாக்யராஜ் இன்று ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ''சர்கார் பட கதை விவகாரத்தில் பல அசெளகரியங்களை நான் சந்திக்க வேண்டி இருந்தது. இயக்குநர் முருகதாஸிடம் கெஞ்சியும் உடன்படாததாலேயே, சர்கார் பட கதையை வெளியே சொல்லவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். நான் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டதே அதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இந்த நிலையில் முறையாக தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் பொறுப்புக்கு வருவதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன். தேர்தல் நடத்துவது வீண் செலவு என்று நினைக்கலாம், ஆனால் சங்கமே வீணாக போவதைக்காட்டிலும் பணம் வீணாவது தவறில்லை என்று தோன்றுகிறது. தேர்தல் நடத்தப்பட்டால் நான் மீண்டும் தலைவர் பதவியில் போட்டியிட்டு மெஜாரிட்டி ஓட்டுகளோடு வெற்றி பெறுவேன். தொடர்ந்து கடமையோடு செயல்படுவேன்'' என்று தெரிவித்துள்ளார்