சினிமா

‘தி பவர் ஆஃப் தி டாக்’ - ஆண்மை மீது வைக்கப்பட்ட விமர்சனம்

webteam

சிறந்த இயக்குனருக்கான பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் ‘தி பவர் ஆஃப் தி டாக்’, கௌபாய்கள் திரியும் அமெரிக்க வெஸ்டன் வகை கதையாகும்.

ஒரு துப்பாக்கித் தோட்டா வெடிக்கும் சத்தம் இல்லாத கௌபாய் திரைப்படம் இது. வெடிச்சத்தமோ, குதிரை மனிதர்கள் மோதும் ரத்தக்களரியோ இல்லாத அதேவேளையில், வன்முறைக்குப் பின் இயங்கும் ஆண்மையும், வீரசாகசமும் எவ்வளவு நோய்க்கூறானது என்பதை அழுத்தமாக ‘தி பவர் ஆப் தி டாக்’ மூலம் திரையில் படைத்து, பெண் இயக்குனர் ஜேன் காம்பியன் ஆஸ்கர் பரிசையும் வென்றிருக்கிறார்.

1994-ம் ஆண்டு ‘தி பியானிஸ்ட்’ திரைப்படத்துக்காக திரைக்கதைப் பிரிவில் ஆஸ்கர் வென்றவர் ஜேன். வெஸ்டர்ன் திரைப்படங்களுக்கே உரித்தான மலைகளின் பின்னணியில் நெடிதாக நீண்டிருக்கும் மேய்ச்சல் நிலப்பகுதியில், பர்பேங்க் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் பில் மற்றும் ஜார்ஜின் கதை இது.

சென்ற நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் நிகழ்கிறது. பில் மற்றும் ஜார்ஜ் இருவரும் தங்கள் பெற்றோர்கள் அளித்த பண்ணையை ஒரு பழைய மாளிகையில் தங்கி நிர்வகிக்கிறார்கள். குதிரைகளைப் பழக்கி, காளைகளைக் காயடிப்பதில் பில் வல்லவனாகவும் இரக்கமற்ற தீரனாகவும் இருக்கிறான்.

வெஸ்டர்ன் வகைமையில் சிறந்த எத்தனையோ திரைப்படங்களைப் பார்த்திருந்தாலும் இயக்குனர் ஜேன் காம்பியன் நமக்குப் பரிச்சயமான அதே நிலப்பரப்பை, தனிமையான மலைகளை கழுகுப் பார்வை கொண்ட ஷாட்கள் மற்றும் நுட்பமான கவனத்துடன் வித்தியாசமாக காண்பிக்கிறார். நியூசிலாந்து நாட்டிலுள்ள சினிமா அதிகம் பார்க்காத நிலப்பரப்புகளில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

புழுதியைக் கிளப்பும் கால்நடைகள், முழுக்க முழுக்க ஆண்களின் சத்தமும் உற்சாகமும் நிறைந்த பண்ணைச் சூழல் வழியாக நமக்கு படம் அறிமுகமாகிறது. முரட்டுத் தம்பி மற்றும் மென்மையான அண்ணனின் கதையாகத் தொடங்கும் இந்த கௌபாய் கதையில் அண்ணனின் வாழ்வில் வரும் ஒரு பெண் திருப்புமுனையை ஏற்படுத்துகிறாள். ஒரு பயணத்தின் நடுவில் இரவில் தங்கிய விடுதியில் விதவை ரோஸின் மீது காதல் கொண்ட ஜார்ஜ் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான்.

அண்ணனின் பணத்துக்காகவே ரோஸ் வந்திருப்பதாக நினைத்து பில் அவளுக்கு உளவியல் ரீதியான தொந்தரவுகளைத் தரத் தொடங்குகிறான். ஜார்ஜின் அதீதமான நேசத்தையும் மீறி மைத்துனன் பில் கொடுக்கும் தொந்தரவுகளால் மனம்நொந்து குடிநோயாளியாக மாறுகிறாள் ரோஸ். வளரிளம் பருவத்தில் உள்ள ரோஸின் மகனான பீட்டரை, அவனது பெண்தன்மையைக் காரணமாக்கி பில் கடுமையாக நடத்துகிறான்.

பிராணிகளின் உடலைக் கீறிச் சோதிப்பதில் ஆர்வம் கொண்ட சிறுவன் பீட்டர் படிப்படியாக பில்லின் மனம் கவர்கிறான். ஒருகட்டத்தில் பில்,
குதிரைகளைப் பழக்குவதற்கு பீட்டரைப் பயிற்றுவிக்கிறான். தனது தாயை மீளாத துயரத்துக்குள்ளாக்கிய பில்லையே கடைசியில் கொல்கிறான் சிறுவன் பீட்டர்.

அமெரிக்காவின் வன்மையான இயற்கையையும், பூர்வ குடிகளையும் அடக்கி தங்களது ஆண்மைத்துவத்தைப் பெருமிதமாக கொண்டு அழித்தே இன்று நாம் காணும் ஒரு வல்லரசு நாட்டை கௌபாய்கள் படைத்தார்கள். அந்த இயற்கையைக் ஆதிக்கம் செய்து ஆள்வதில் அவர்கள் கொண்ட பெருமிதம் மற்றும் மட்டில்லாத கவர்ச்சியைக் காண்பிக்கும் விதமாகவே இதுவரையிலான வெஸ்டர்ன் திரைப்படங்கள் இருந்திருக்கின்றன.

தனது வாழ்க்கைக்காக இயற்கையை, உயிர்களை, சக மனிதர்களை, பூர்வ குடிகளை அழிப்பதற்குப் பின்னாலுள்ள மனோபாவம் மீது ‘தி பவர் ஆஃப் தி டாக்’ மூலமாக பெரும் விமர்சனத்தை வைத்திருக்கிறார் இயக்குனர். பெண்தன்மை கொண்ட பீட்டர், தன் தாய்க்கு நடந்த அநியாயமான துயரத்துக்குப் பொறுப்பேற்று, ஆண் என்ற பெருமிதத்தையே அணியாக்கி நெஞ்சு நிமிர்த்தித் திரியும் பில்லைக் கொல்கிறான்.

பில்லைக் கொல்வதற்கு அவன் பயன்படுத்தும் ஆயுதம் இறந்த மாட்டின் தோல். ஆந்திராக்ஸ் நோய்க்கிருமி வந்த மாட்டுத் தோலை, பில்லுக்கு அவன் அறியாமல் கயிறு நூற்பதற்குக் கொடுத்துதான் அந்தக் கொலை புரியப்படுகிறது. திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளிலேயே முகத்தில் எந்தச் சலனமும் இல்லாமல் பில், ஒரு மாட்டின் விதைப்பைகளை அறுக்கும் காட்சி நமக்குக் காண்பிக்கப்படுகிறது.

ஆண்மையும் ஆண் என்று கொள்ளும் பெருமையும் எத்தனை பலவீனமான கற்பிதம் என்பதை பில்லின் இளம்பருவத்துக் கதையிலிருந்து வலுவாகக் கட்டியிருக்கிறார் இயக்குனர். பில்லின் தனிமையும், அமைதிகொள்ளாத அகக்கொந்தளிப்பும் காண்பிக்கப்படும் அந்த நதிக்கரைக் காட்சி ஓவியம்
போலப் படைக்கப்பட்டிருக்கிறது.

பெண்மை கொள்ளாத ஆண்மை எத்தனை தனிமையானது, நிர்க்கதியானது என்பதை ஒரு வெஸ்டர்ன் கதைநிலப்பரப்பிலிருந்து சொல்லியிருப்பதன் மூலம் சாதாரண பழிவாங்கும் கதையென்ற அடையாளத்திலிருந்து உயர்ந்துவிடுகிறது இந்தப் படைப்பு. கவித்துவமும் பிரமாண்டமும் நிறைந்த ஆரி வேக்னரின் ஒளிப்பதிவும், ஜானி க்ரீன்வுட்டின் இசையும் ‘தி பவர் ஆப் தி டாக்’ படைப்புக்கு வலுசேர்ப்பவை.

நேசத்துக்குரிய கணவன், அன்னியமான இடத்துக்கு தனது இரண்டாவது திருமணத்திற்காக அழைத்துவரப்பட்ட மகன், நிஷ்டூரமான மைத்துன் ஆகியோருக்கு இடையே நிர்கதியாக அல்லாடும் ரோஸாக நடித்த கிர்ஸ்டன் டன்ஸ்ட், பில் கதாபாத்திரத்தில் நடித்த பெனடிக்ட் கும்பர்பேட்ச் ஆகியோருக்கும் சிறந்த நடிப்புக்கான ஆஸ்கர் எதிர்பார்க்கப்பட்டது.

பெண்தன்மை கொண்ட பீட்டராக ‘சிஸ்ஸி’ என்று கேலி செய்யப்பட்டு, பில்லிடம் நெருங்கி அவனது வித்தைகளைக் கற்று, கற்றுத் தந்தவனுக்கே மரணத்தைத் தரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கோடி ஸ்மித் மெக்பீக்கும் ஆஸ்கர் கிடைக்கும் என்று ஆரூடம் கூறப்பட்டது. என்ன நடக்கிறது என்று துலங்காத மர்மத்தை க்ளைமாக்ஸ் வரை தக்கவைத்திருப்பது அத்தனை சாதாரணமானதல்ல. நிதானமாக, கொஞ்சம் கூடுதலாக அவகாசம் எடுத்துக் கொண்டு அந்த மர்மத்தை நிகழ்த்துவதில் ஜேன் கேம்பியன் வெற்றிகண்டிருக்கிறார்.

-ஷங்கர் ராமசுப்ரமணியன்