சினிமா

”திரை உலகம் சந்திக்காத படம் விடுதலை” - இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா பேச்சு

”திரை உலகம் சந்திக்காத படம் விடுதலை” - இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா பேச்சு

webteam

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் விடுதலை பாகம்-1 திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் வெற்றிமாறன், சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ உள்பட படக்குழு பங்கேற்றனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கலந்து கொண்டனர்.

இசைஞானி இளையராஜா மேடையில் பேசுகையில், “இந்த படம், திரை உலகம் சந்திக்காத படம், வெற்றிமாறனின் ஒவ்வொரு கதையும் வெவ்வேறு திரைக்கதைகளை கொண்டது, கடலில் வரும் அலை எப்படி மாறி மாறி வருகிறது அதுபோலவே தான் இந்த கதையும். ஒவ்வொரு அலையும் வெவ்வேறு அலையே. அதுபோல வெவ்வேறு திரைக்கதையை வெற்றிமாறன் உருவாக்குவது பெருமையாக இருக்கிறது. 1,500 படங்களில் வேலை பார்த்த அனுபவத்தில் கூறுகிறேன், வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குநர்.

இந்த படத்தில் நீங்கள் இதுவரை கேட்காத இசையை கேட்பீர்கள்” என்றார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே அரங்கத்தில் கூடி இருந்த ரசிகர்கள் தீடீர் கூச்சலிட கோபமடைந்த இளையராஜா, இப்படி கூச்சலிட்டால் நான் மைக்'கை கொடுத்து விட்டு போயிட்டே இருப்பேன் என்றார். மறு கணமே படத்தின் வழிநெடுக பாடலை பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இயக்குநர் வெற்றிமாறன் மேடையில் பேசுகையில், “விடுதலை படத்தின் தொடக்கம் ராஜா சார் தான். அவரை சந்தித்து பேசும் போது, கதையை கேட்டார். அவருக்காக 45 நிமிடங்கள் படமாக்கி காட்டினேன். அதைப்பார்த்து வழி நெடுக காட்டுமல்லி பாடலை எழுதினார்.

என் உணர்வு வார்த்தையாக மாறி ஒலியாக மாறி வந்தது. அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டதெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது. அனைவரும் உங்களின் பாட்டை கேட்டு வளர்ந்தவர்கள் தான்” என்றார்.

இசைஞானி இளையராஜா பேச்சை கேட்க இந்த வீடியோ தொகுப்பை பார்க்கவும்..