தமிழகத்தின் திரைவானில் மின்னும் நட்சத்திரங்களில் சிலர் மட்டுமே அதிகப்படியான ரசிகர்களின் இதயம் நிறைந்தவர்களாக உள்ளனர். அவர்களில் முக்கியமானவர் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். தமிழ் திரையுலகில் இப்போதும் எப்போதும் இருக்கும் ஒரே சூப்பர் ஸ்டாரும் ரஜினி மட்டுமே.
ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டுகிறது, முக்கியப் பிரச்னைகள் குறித்து இவர் தெரிவிக்கும் கருத்துகள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்துகிறது, எப்போது முழுநேர அரசியலுக்கு வருவார் என கோடிக்கணக்கான ரசிர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அகவை 70-ஐ தொடும் இவர் எடுத்துக் கொண்ட தொழிலில் காட்டிய அக்கறையே இத்தனைக்கும் காரணம் என்கின்றனர் அவரின் வளர்ச்சியை தொடக்கம் முதல் கண்டு வருவோர். 1950 டிசம்பர் 12ல் எளிய குடும்பம் ஒன்றில் நான்காவது பிள்ளையாகப் பிறந்தவர். மராத்தியக் குடும்பம் என்பதால் மாமன்னர் சிவாஜியின் பெயர் சூட்டப்படுகிறது.
ஆனால் அப்பெயர் கொண்டவர் இலக்கணம் வகுத்த நடிப்புலகில் பின்னாளில் இப்பிள்ளை கொடிகட்டிப் பறக்கும் என அந்நாளில் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். படிப்பு முடித்து நடத்துநர் வேலைக்குச் சென்ற சிவாஜிராவிற்கு நடிப்பின் மீது ஏற்பட்ட ஈர்ப்பு சென்னை திரைப் படக்கல்லூரியில் கொண்டு வந்து விட்டது. வித்தியாசமான உடல் மொழி, மற்றவர்களை ஆச்சரியப்படுத்தும் வேகம் போன்றவை இயக்குநர் சிகரம் கே பாலச்சந்தரை ஈர்க்க, அபஸ்வரமாய் அபூர்வராகங்களில் திரையில் தோன்றினார். இன்று அவர்தான் தமிழ்த்திரையின் ஆதார ஸ்ருதியாக மாறியிருக்கிறார். தொடர்ந்து எதிர்மறைப் பாத்திரங்களில் நடித்து வந்த அவர், எஸ்.பி முத்துராமன் மூலம் நேர்மறை கதாபாத்திரம் ஏற்ற புவனா ஒரு கேள்விக்குறி வெற்றி பெற பாதை மாறியது.
கதையின் நாயகனாக ரஜினிகாந்த் மாறினார். திரைப்பட உலகில் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்த ஏவிஎம் எனும் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய முரட்டுக்காளை ரஜினியின் திரைப்பாய்ச்சலுக்கு வேகம் கூட்டியது. தொடர்ந்து அவரின் படங்கள் வெற்றி மேல் வெற்றி பெற உச்ச நட்சத்திரம் என்ற இடத்தை அடைந்தார். 1981 ஆம் ஆண்டில் தனது வாழ்க்கைத் துணையாக லதாவினை ஏற்றார். வணிக ரீதியான படங்களில் ரசிகர்களுக்காக நடித்தாலும், ஆன்மீகமே தன்னை வலிமையுள்ளவனாக மாற்றியதாகக் கூறிய ரஜினி, தனது 100ஆவது படம் என்ற மைல்கல்லை எட்டும் போது ராகவேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை தயாரித்து நடித்தார். இது ரஜினி என்ற மனிதனின் தனிப்பட்ட எண்ணத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதாக அமைந்தது.
எத்தனை உயரத்திற்குச் சென்றாலும் தொடக்கக் காலத்தை மறக்காதவர் என்பதை உணர்த்தும் வகையில் கதை திரைக்கதை எழுதி தயாரித்த வள்ளி திரைப்படத்தில் தனது நண்பர்களுக்கு வாய்ப்பு தந்தது மட்டுமல்லாமல், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அப்படத்தில் நடித்தது பலரது பாராட்டைப் பெற்றது. வெற்றியையும்,தோல்வியையும் ஒரு சேரப் பார்க்கும் அவரது மனப்பாங்கு திரையைப் போலவே தனிப்பட்ட வாழ்க்கையிலும் வெற்றியைத் தேடித்தந்தது. தமிழ் மட்டுமல்லாது பன்மொழித் திரைப்படங்களிலும் பங்களிப்பை வழங்கிய ரஜினிகாந்திற்கு இந்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது. பாட்ஷா, முத்து போன்ற திரைப்படங்களில் நடித்த காலகட்டத்தில் அவர் வெளியிட்ட சில கருத்துகள் தமிழக அரசியல் களத்தில் அவருக்குள்ள முக்கியத்துவத்தை உணர்த்தின.
அதன் பின்னர் ரஜினி அரசியல் களத்தில் நுழைவது எப்போது என்ற கேள்வி எழத்தொடங்கியது. தொடர்ந்து திரைப்பணிகளை கவனித்து வந்த அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிறிது காலம் ஓய்வெடுக்கும் கட்டாயத்திற்கு ஆளானார். தமிழ்த்திரை ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற ரஜினி அதன் பின்னர் தனித்துவமிக்க கதைகளைத் தேர்ந்தெடுத்து வழங்கினார். அதோடு அரசியல் களத்திற்கு வருவது உறுதி என்றும் அறிவித்தார். அதன் பின்னர் தனது ரசிகர் மன்றங்களை, மக்கள் மன்றமாக மாற்றிய ரஜினி, அந்தப் பணிகளிலும் தனக்கே உரிய தனித்துவத்துடன் செயலாற்றி வருகிறார். ஒரு கலைஞனாக திரைத்துறையில் வெற்றி பெற்ற ரஜினி, மனைவி மற்றும் மகள்கள் எடுத்துக் கொண்ட துறைகளில் வெற்றி பெற துணை நின்றார். தனக்கு பெரும் ஆதரவு கொடுத்த தமிழ்ச்சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு அடுத்த அடியையும் எடுத்து வைத்துள்ளார்.