சினிமா

‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..!

‘குயின்’ வெப் சீரிஸின் முக்கிய கதாபாத்திரங்களின் பெயர்கள் இதுதான்..!

jagadeesh

‘தி குயின்’ என்ற பெயரில் அனிதா சிவகுமரன் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ‘குயின்’ வெப் சீரிஸ் இயக்கப்பட்டுள்ளது. இதனை கவுதம் மேனனும், பிரசாந்த் முருகேசனும் இயக்கியுள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை என்றாலும் இதில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் பெயர் சக்தி சேஷாத்ரி என்று வைக்கப்பட்டுள்ளது. இதில் எம்ஜிஆரின் கதாப்பாத்திரம் ஜிஎம்ஆர் என்றும் கருணாநிதியின் பெயர் கருணாமூர்த்தி என்றும் சூட்டப்பட்டுள்ளது. எம்ஜிஆரின் மனைவியான ஜானகி கதாப்பாத்திரம் ஜனனி என புனையப்பட்டுள்ளது. மேலும் ஜிஎம்ஆர் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்யப்படும், எம்ஜிஆர் கதாபாத்திரம் ஜெயலலிதாவுடன் காட்டிய நெருக்கம் குறித்து விரிவாகப் பேசி உள்ளது இந்த வெப் சீரிஸ். இதனால் எம்.ஜி.ஆரின் மனைவியான ஜானகி - ஜெயலலிதா இடையே ஏற்பட்ட மனக்கசப்பையும் வெளிப்படையாக பேசியுள்ளது.

மிக முக்கியமாக தாயாக சோனியா அகர்வால், இளம் வயது சக்தியாக வரும் அஞ்சனா ஜெயபிரகாஷ், எம்ஜிஆர் பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்கள். இதில் இயக்குநர் கவுதம் மேனனும் கவுரவ தோற்றத்தில் நடித்திருக்கிறார். குயின் வெப் சீரிஸின் பலமே ஒளிப்பதிவுதான். எஸ்.ஆர்.கதிரின் கேமரா கண்கள், அந்தக் காலத்தையும் நிகழ் காலத்தையும் தனித்தனியாக காட்டுகிறது. அதேபோல "என்னை நோக்கி பாயும் தோட்டா"வின் தர்பூகா சிவாதான், குயின் வெப் சீரிஸ்க்கும் இசை. இந்த வெப் சீரிஸின் ஜீவனை, சிவா தன்னுடைய ஆத்மார்த்தமான பின்னணி இசையால் தாங்குகிறார்.

மெதுவாக நகரும் திரைக்கதையும், லிப் சிங்க் ஆகாத டப்பிங்கும் குயினுக்கு சற்றே பின்னடைவை தருகிறது. ஆனாலும் காட்சியமைப்புகளால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.