சினிமா

ஆணாதிக்கத்தின் மீது ஓங்கி அறைந்த ‘தப்பட்’

ஆணாதிக்கத்தின் மீது ஓங்கி அறைந்த ‘தப்பட்’

subramani

ஒரு பார்டியில் கணவன் கோவத்தில் தன் மனைவியை அறைந்து விடுகிறார் அதற்காக விவாகரத்து பெற சட்ட உதவியை நாடுகிறார் மனைவி. இது தான் தப்பட் படத்தின்
ஒன்லைன். மேலோட்டமாக பார்த்தால் இதெல்லாம் ஒரு காரணமா...? குடும்பங்களில் இதெல்லாம் நடக்குறது தானே... எனத் தோன்றும்., ஆனால் இது நடக்கக் கூடாது
என்பது தான் தப்பட் நமக்குச் சொல்லும் செய்தி.

அன்பான கணவன் மனைவியாக வாழும் மேல்தட்டு தம்பதிகள் விக்ரமும் (பாவல் குல்டி) அம்ரிதாவும் (டாப்ஸி). லண்டன் செல்ல கிடைத்த வாய்ப்பு கார்ப்பரேட் அரசியலால்
பறிபோக பார்ட்டி ஹாலில் வைத்து கோவத்தில் மனைவியை அறைந்து விடுகிறார் விக்ரம். பொது இடத்தில் விழுந்த அந்த அறை அப்பெண்ணின் சுயமரியாதையினை
தொட்டுவிடுகிறது. இதற்காக அவர் சட்டப்படி விவாகரத்து பெறுகிறார். உண்மையில் இப்படி ஒரு ஒன்லைனை இரண்டரை மணி நேர சினிமாவாக சலிப்பூட்டாத
திரைக்கதையுடன் உருவாக்க முடியும் என நம்பிய இயக்குனர் அனுபவ் சின்ஹாவின் துணிச்சலுக்கு பாராட்டுகள். அம்ரிதாவின் வீட்டில் வேலை செய்யும் அப்பாவிப் பெண்,
அம்ரிதாவுக்காக வழக்காடும் வழக்கறிஞர் பெண், கணவனை இழந்து வாழும் பக்கத்து வீட்டுப் பெண், நாயகியின் தாயார், மாமியார் என சமூகத்தின் வெவ்வேறு
அடுக்கிகளில் வெவ்வேறு வயதில் வெவ்வேறு தளத்தில் வாழும் பெண்களை துணைக்கு அழைத்துக் கொண்டு இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது.

தற்போது அமேசான் ப்ரைமில் கிடைக்கும் இப்படம் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியிருக்கிறது. விக்ரம் அம்ரிதாவை அறைந்தது தவறு தான் என்றாலும் அவன்
அவளிடம் அதற்காக மன்னிப்பு கேட்கவில்லை. உண்மையில் அவனுக்கு இது மன்னிப்பு கேட்க வேண்டிய அளவிற்கு பெரிய குற்றமில்லை என சொல்லிக்
கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கதாபாத்திரத் தன்மையினை படத்தின் கடைசி காட்சி வரை விட்டுக் கொடுக்காமல் கடைபிடித்திருக்கிறார் இயக்குநர். இந்த கதாபாத்திர
வடிவமைப்பு விவாகரத்து கேட்கும் டாப்ஸியின் நியாயத்திற்கு வலு சேர்க்கிறது. துருதுரு கலகல குடும்பப் பெண்ணாக கதையில் அறிமுகமாகும் டாப்ஸி கணவர் அறைந்த
பிறகு வேறொரு முகமாக மாறிப் போகிறார். டாப்ஸியின் முகத்தில் ஒவ்வொரு செல்லும் அத்தனை அடர்த்தியுடன் நடித்திருக்கிறது. அறை விழுந்த பிறகு சில காட்சிகள்
வரை நீடிக்கும் இக்கதை எடுத்துக் கொண்ட வாதத்தின் அடர்த்தியை இயக்குநரே ஒரு கட்டத்தில் தளர்த்தியதாக தோன்றுகிறது. இறுதி காட்சியில் “அனைத்துக்கும் மன்னிப்பு
கேட்கிறேன்., ஒரு நண்பனாக என்னை வந்து நீ அவ்வப்போது சந்திப்பாய் என எதிர்பார்க்கிறேன்.” என கணவர் விக்ரம் தன் மனைவியிடம் மன்னிப்பு கேட்கிறார். அதனை
ஏற்றுக்கொள்ளத் தயார் தான் என்றாலும் உடைந்த எதையும் ஒட்ட வைக்க முடியாது என்பதால் தீர்க்கமாக சுயமரியாதைக்காக விவாகரத்து பெற்று அம்ரிதா
கணவனிடமிருந்து கண்ணீருடன் விடைபெறுகிறார்.

இந்தக் கதையினை ஒருதலை பட்சமாக நாம் அணுகுகிறோமோ என்ற சந்தேகமும் சில சமயம் எழுகிறது. காரணம் கொலை செய்தவனைக் கூட தூக்கில் போட வேண்டாம்
அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என விவாதிக்கும் பலரும் கூட அவன் மன்னிப்பு கேட்ட போதும் விவாகரத்தே சரி என வாதிடுகின்றனர். தவறு நிகழாமல் வாழ்க்கை
சாத்தியமே இல்லை. அதில் மன்னிப்பு கேட்ட பிறகும் கூட விவாகரத்து தான் சரி என்றால் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமே தவிர வேறில்லை என்றாகி விடுகிறது.
அம்ரிதாவின் வழக்கறிஞராக வரும் பெண்ணின் கதாபாத்திர வடிவமைப்பு குறிப்பிடத்தக்கது. பெரிய வழக்கறிஞர் என்றாலும் சராசரி மனைவியாக தன்னை குடும்ப
கட்டமைப்புக்குள் முடக்கி வைத்திருந்த அந்தப் பெண் ஒரு கட்டத்தில் சுதந்திரமாக வாழ வெளியேறுகிறார். ஒட்டு மொத்தமாக ஆண்களே அயோக்கியர்கள் என
நிறுவவில்லை இயக்குநர் எனச் சொல்வதற்காக அம்ரிதாவின் அப்பா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அவர் தன் மனைவியை, மகளின் நியாயங்களை புரிந்து
கொள்கிறார்.

டாப்ஸியின் கணவராக விக்ரம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாவல் குல்டி மிக கச்சிதமாக நடித்திருக்கிறார். டாப்ஸி வீட்டு வேலைக்காரப் பெண்ணாக நடித்திருக்கும்
கீதிகா வித்யா, டாப்ஸியின் அப்பாவாக நடித்திருக்கும் குமுந்த் மிஸ்ரா என ஒவ்வொரு கதாபாத்திரமும் உயிர்ப்புடன் இக்கதையினை தாங்கி நிற்கிறது. ஒளிப்பதிவாளர்
ஸோமிக் முகர்ஜியும், இசையமைப்பாளர் அனுராக் சைகாவும் படத்தின் அசுர பலம்.

இந்திய அளவில் ஏன் உலகளவில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு குறித்தும் பெண்களின் சுயமரியாதை குறித்தும் ஒற்றை அறையில் கேள்வி எழுப்பி இருக்கிறார்
இயக்குநர். ஆண்கள் அனைவரும் தங்களை மறு விவாதத்துக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதனை தப்பட் இன்னுமே
சிறப்பாக கையாண்டிருக்கலாம்.

இந்திய சமுதாயத்தில் குடும்பம் என்பது தவிர்க்க முடியாத உணர்வு பூர்வமான ஒரு அம்சமாக இருந்து வருகிறது. அன்பு, பாசம், பொறுப்பு ஆகிய பல்வேறு அம்சங்கள்
ததும்பும் ஒரு அமைப்பாக குடும்பம் இருக்கிற அதேவேளையில், குடும்ப உறவுகளில் தந்தை பிள்ளைகள் மீது செலுத்தும் ஆதிக்கம், கணவன் மனைவி மீது செலுத்தும்
ஆதிக்கம் நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அந்த ஆதிக்க மனோபாவம் ரத்தத்தில் கலந்து தன்னை அறியாமல் இயல்பான ஒன்றாகவே ஆண்களுக்கு இருக்கிறது
என்பது சுடுகின்ற உண்மைதான். அதனை உணர்த்த தப்பட் இயக்குநர் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.

“மன்னிப்பு கேட்கும் கணவனை மன்னிக்க முடியாத அல்லது மன்னித்தாலும் சேர்ந்து வாழ இயலாத மனநிலைக்குச் சென்றுவிட்ட டாப்ஸியின் முடிவு நியாயமானது தான்.
என்றாலும் விட்டுக் கொடுப்பதும் குறைகளோடு ஏற்றுக் கொள்வதும் தான் வாழ்க்கை.” என்று உங்களுக்கு சொல்லத் தோன்றுகிறதா...? அந்த விட்டுக் கொடுத்தலை, அந்த
தியாகத்தை ஏன் எப்போதும் பெண்கள் மட்டுமே செய்ய வேண்டியிருக்கிறது...? என்பது தான் தப்பட் வைக்கும் வாதம்.