தஞ்சாவூரில் ஆதரவற்ற ஏழைகளுக்கு ‘விஜய் விலையில்லா விருந்தகம்’ மூலம் தொடர்ச்சியாக உணவு வழங்கி வருகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையால் தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மக்களும் ஏழைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, உதவிக்கரம் நீட்டி விஜய் மக்கள் இயக்கத்தினர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உணவு, மளிகைப்பொருட்கள், காய்கறி, கிருமி நாசினி தெளிப்பு போன்றவற்றை செய்துவருகின்றனர்.
ஆதரவற்றவர்களுக்கு மட்டுமல்லாமல், கொரோனாவுடன் மக்களைக் காக்க போராடிவரும் முன்களப் பணியாளர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் 1 கிராம் தங்க நாணயம் எல்லாம் அளித்து ஊக்கப்படுத்தினர். காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினரும் ஏழைகளுக்கு அரிசி, மளிகைப் பொருட்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறார்கள்.
இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், தொடர்ச்சியாக நாள் தவறாமல் ’விஜய் விலையில்லா விருந்தகம்’ மூலம் ஏழைகளுக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேளை உணவினை தொய்வில்லாமல் வழங்கி வருகிறார்கள்.
சாலைகளிலும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனை அருகிலும் வழங்கப்படும் இந்த இலவச உணவகத்தில் ஆதரவற்றவளும், ஏழைகளும் வந்து பசியாறிவிட்டுச் செல்கிறார்கள்.