பா ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவான தங்கலான் திரைப்படம் நேற்று வெளியானது. விக்ரம் மட்டுமல்லாது, பார்வது, பசுபதி, மாளவிகா மோகனன் என நடித்த அனைவரும் தங்களது பங்களிப்பை செவ்வனே செய்ததாக படம் பார்த்தவர்கள் சிலாகித்து வருகின்றனர். இதைவிட சுவாரஸ்யம் என்னவெனில், தங்கலான் படத்தைப் பார்க்க, தங்கலான் கெட்டப்பிலேயே தியேட்டருக்குச் சென்று பலரும் படம் பார்த்தனர். ஒருசிலர் தியேட்டர் நிர்வாகிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
ஒவ்வொரு படத்திற்கும் தன்னால் முடிந்த அத்தனை உழைப்புகளையும் கொட்டி நடித்து வரும் விக்ரமுக்கு, கடந்த சில ஆண்டுகளாக எந்த படமும் வெற்றிப்படமாக அமையவில்லை. அப்படி இருக்க, ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் உருவாவதாக வெளியான அறிவிப்பில் இருந்தே எதிர்பார்ப்பு எகிறியது. கோலார் தங்க வயலில் வாழ்ந்த பழங்குடியினரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், கொடுக்கப்பட்ட பாத்திரமாகவே மாறியிருக்கிறார் விக்ரம்.
சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுவருகிறது. நடிகர்களின் பங்களிப்பு சூப்பர், கதை மற்றும் திரைக்கதையில் சற்று சொதப்பல் இருப்பதாகவே விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. எது எப்படியானாலும் வசூல் ரீதியாக விக்ரமுக்கு பெரிய ஓபனிங் ஆக அமைந்துள்ளது தங்கலான். ஆம், வசூல் நிலவரத்தை அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமே வெளியிட்டுள்ளது.
அதில், உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 26. 44 கோடி ரூபாயை தங்கலான் வசூல் செய்ததாக குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே வசூல் ரீதியாக தாண்டவமாடிய ராயனை விட முதல் நாளில் அதிக வசூலை பெற்றுள்ளார் தங்கலான். வட இந்தியாவில் ஆகஸ்ட் 30ம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில், வசூல் தொடர்ந்து ஏறு முகத்தில் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.