சினிமா

மணி ஹெய்ஸ்ட்டா? கூர்காவா? .. பீஸ்ட் ட்ரெய்லரை அனல்பறக்க தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

மணி ஹெய்ஸ்ட்டா? கூர்காவா? .. பீஸ்ட் ட்ரெய்லரை அனல்பறக்க தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!

சங்கீதா

நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அவரது ரசிகர்கள் மாஸாக கொண்டாடி வரும்நிலையில், வழக்கம்போல் சில படங்களின் சாயல் படத்தில் உள்ளதாக நெட்டிசன்கள் பரவலாக சமூகவலைத்தள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு நடிகர் விஜயை வைத்து, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில், ஏப்ரல் 13-ம் தேதி இந்தப் படம் வெளியாகவுள்ளநிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று திரையரங்குகள் மற்றும் யூ-ட்யூபில் ட்ரெய்லர் வெளியானது. இதையடுத்து விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், வழக்கம்போல் சில படங்களின் சாயல் உள்ளதாக நெட்டிசன்கள் பரவலாக சமூகவலைத்தள பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதன்படி, யோகி பாபு, மனோபாலா, சார்லி ஆகியோரின் நடிப்பில், கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘கூர்கா’ படத்தைப்போல் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். ‘கூர்கா’ படத்தில், யோகி பாபு போலீசாக நினைத்து உடற்தகுதி இல்லாததால் தோல்வியடைந்து கடைசியில், மால் ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிவார். இந்நிலையில், தீவிரவாத கும்பல் ஒன்று அந்த வணிக வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மாலில் இருக்கும் மக்களை, தீவிரவாத கும்பல் பணயக்கைதிகளாக பிடித்து வைத்து கொள்ளும்.

பின்னர், அந்த தீவிரவாத கும்பலிடமிருந்து, செக்யூரிட்டிகளான யோகிபாபு, சார்லி மற்றும் நாய் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து, எப்படி பணயக் கைதிகளாக இருக்கும் மக்களை மீட்கின்றனர் என்று நகைச்சுவையாக கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கும். இதேபோல் கொரோனா ஊரடங்கில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸ் உலகளவில் பிரபலமானது. இந்த வெப் சீரிஸ் போன்று, ‘பீஸ்ட்’ படத்தின் கதைக்களம் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

‘மணி ஹெய்ஸ்ட்’ இல் வங்கி ஒன்றை, ஹைஜாக் செய்யும் புரொபஸர் தலைமையிலான கொள்ளை கும்பல், அங்கிருந்த மக்களை பிணயக் கைதிகளாக வைத்து கொள்ளையடிக்கும். அந்த கொள்ளை கும்பல், கோமாளி மாஸ்க் அணிந்திருந்த நிலையல், இங்கு கிறிஸ்துமஸ் தாத்தா மாஸ்க்கை அணிந்து ஹைஜாக் செய்கின்றனர் தீவிரவாதிகள் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், ‘மணி ஹெய்ஸ்ட்’  வெப் சீரிஸில் விஜய் புரொபஸராக நடித்தால் நன்றாக இருக்கும் என அதன் இயக்குநர் அளித்த பேட்டியை பார்த்து விட்டு இயக்குநர் நெல்சன் இப்படியொரு கதையை விஜய்க்காக உருவாக்கினாரா என தெரியவில்லை என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில், அவர் வில்லன்களின் புல்லட்களை இரும்பு தடுப்பு வைத்து தடுப்பது போன்று, இந்தப் படத்திலும் நடிகர் விஜய் அவ்வாறு தீவிரவாதக் கும்பலிடமிருந்து தப்பிப்பதாக நெட்டிசன்கள் கூறியுள்ளனர். எனினும படம் வெளிவந்தப் பின்னரே முழுமையான தகவல்கள் வெளிவரும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, பீஸ்ட் ட்ரெய்லர் வெளியானதை அடுத்து ட்விட்டரில் மணி ஹெய்ஸ்ட் மற்றும் கூர்கா படம் தொடர்பான ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.