மாரிசெல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் நடிப்பில் வெளிவந்த மாமன்னன் படத்தின் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியபோது...என்னுடைய மூன்று படங்களும் வெற்றி பெற்றுள்ளது. இருந்தாலும் எனக்குள் ஒரு பதற்றம் இருக்கிறது. அது எப்போது நிற்கும் என்று தெரியவில்லை. படத்தை முடித்த பிறகு நான் நினைத்தது என்வென்றால். இந்தப் படம் ஓடுது ஓடவில்லை. ஆனால், சொல்ல வேண்டியதை பதிவு பண்ணிவிட்டேன் என்ற திருப்தி ஏற்பட்டது.
மாமன்னனை எடுத்து மக்களிடம் வைத்துவிட்டேன்.. பாடலாசிரியர் யுகபாரதி கொண்டாட்டத்துக்காக பாடல் எழுதப்படக் கூடாது என்று வலியை வெளிப்படுத்தும் வகையில் பாடல்களை கொண்டு வந்தோம். என்னை பார்த்து வியக்க வேண்டியதில்லை. என்னை நம்ப வேண்டும். என்னுடைய படம் என்பது திரையிட்ட முதல் நான்கு நாட்கள் ரசிகர்கள் உற்சாகப்படுத்தி பார்க்கும் படம் இல்லை. 40 ஆண்டு கழித்தும் பார்க்கும் படமாக இருக்க வேண்டும். அது போன்று படத்தை எடுத்துள்ளேன்.
மேக்கப் போடாமல் நடிப்பது நடிப்புக்கு செய்யும் துரோகம் என்று வடிவேலு சொன்னார். ஆனால், மேக்கப் போட்டு எடுக்க வேண்டும். அப்புறம் அவரிடம் பேசி வடிவேலு போட்டுக் கொண்டு வரும் மேக்கப்பை அழித்துவிட்டு நடிக்க வைப்போம். எல்லாத்தையும் மேல இருக்குறவன்; பார்த்துக் கொள்வான் என்பதுபோல உதயநிதி பார்த்துக் கொள்வார் என்று தான் இந்த படத்தில் இருந்தேன். கீர்த்தி சுரேஷூடன் தொடர்ந்து படம் எடுக்க ஆசைப்படுகிறேன். அதற்கான கதைகளை பண்ணுவேன்.
உதயநிதியை பார்த்து எனக்கு பயம் இருந்தது என்றால் அவரை வைத்து எப்படி படம் எடுப்பது என்று தான். ஏன்னென்றால் அவர் இதுவரை நடித்த படங்கள் ஜாலியான படங்கள்.; அவருக்கும் பயன்பட வேண்டும். எனக்கும் பயன்பட வேண்டும் என்று தான் உதயநிதியிடம் கதை சொன்னேன். மாமன்னன் அரசியல் படமாக எடுக்கும் போது குறைந்தபட்ச நேர்மையுடன் எடுக்கப்பட்டது. வணிக ரீதியாக மட்டும் இந்த படம் இருந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
படம் பார்த்துவிட்டு வீடு செல்லும் வரை ஏதாவது நினைக்க வேண்டும். அப்படிதான் எடுக்கப்பட்டது. என்னுடைய படைப்பில் வன்முறை இருக்கக் கூடாது என்று இருக்கிறேன். மாமன்னன் படத்தில் அரிவாள் இருக்கும். ஆனால், யாரையும் வெட்ட பயன்படுத்தப்படாது. பொலிட்டிக்கல் டிராமா படம் மாமன்னன். இப்பயொரு சிறு வயது கொண்ட என்னை நம்பி நீங்கள் வந்துள்ளீர்கள். காமெடி வடிவேலின் ரத்தத்தில் ஓடுகிறது. என் வீட்டில் வடிவேலு, இளையராஜா படங்களை மாட்டி வைத்துள்ளேன்.
ஒரு காலத்தில் நான் பலமுறை தற்கொலைக்கு முயற்சித்தவன். ஆனால், வடிவேலு காமெடியை பார்த்த பிறகு முடிவை மாற்றி இருக்கிறேன். வடிவேலுவை பார்த்துப் பார்த்து என்னுள் பல மாற்றங்கள் ஏற்பட்டது காமெடியாக நடிக்கும் வடிவேலுவின் வாழ்வின் பின் பக்கம் என்பது வேறு மாதிரி இருக்கும். அதனால் தான் வடிவேல் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சிரியஸாக நடிக்க வேண்டுமென்று வடிவேலுவிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு நடிக்க வைத்தோம்.
ரகுமான் சாரை ரொம்ப மிஸ் பண்றோம். இங்கு இந்த மேடையில் இல்லை. நானும் என்னுடைய உதவி இயக்குனர்களும் 5 ஆண்டுகள் ஒரே வீட்டில் இருந்தோம். இப்போது எனக்கு திருமணம் முடிந்த பிறகு ஓராண்டாக பிரிந்து இருக்கிறோம். நான் இப்படி படம் எடுக்கும் வகையில் கற்றுக் கொடுத்தவர் இயக்குனர் ராம்.அவரிடம் 15 ஆண்டுகள் இருந்து கற்றுக் கொண்டேன். ராம் இல்லாவிட்டால் மாரிசெல்வராஜ் என்பவன் வேஸ்ட்.. எனக்கு ஆசானாக இருந்தவர் ராம். ஒன்னும் தெரியாமல் இருந்த என்னை படிக்க வைத்து உருவாக்கியவர் ராம். என்னைவிட என்னுடைய படைப்பு தான் முக்கியம்.
அதுபோல் தான் என்னுடைய உதவி இயக்குனர்களை உருவாக்குகிறேன். இதனை தவறாக நினைப்பவர்களுக்கு நான் சாரி சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய படம் வெற்றி பெற்றதற்கு தமிழக மக்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. அவ்வளவு நன்றி. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களைப் பார்த்து விட்டு முதலமைச்சர் பேசினார். இதேபோன்று ரஜினி, கமல் ஆகியோர் பேசினர். அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.