சினிமா

பணம் கையாடல் புகார்: உடைகிறது தெலுங்கு நடிகர் சங்கம்?

பணம் கையாடல் புகார்: உடைகிறது தெலுங்கு நடிகர் சங்கம்?

webteam

தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காக திரட்டப்பட்ட நிதியில் மோசடி நடந்துள்ளதாகக் கூறி ஒரு தரப்பு நடிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தெலுங்கு நடிகர் சங்கத் தலைவராக இருப்பவர், சிவாஜி ராஜா. பொது செயலாளர் நரேஷ். பொருளாளர், வெங்கடேஷ்சர ராவ். துணைத் தலைவர் ஸ்ரீகாந்த். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நடிகர் சங்கம் அமெரிக்காவில் சமீபத்தில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி உட்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். இந்த விழாவை நடத்துவதற்கு நடிகர் ஸ்ரீகாந்தின் நண்பர் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவுக்கு சென்று வந்ததில் ஊழல் நடந்திருப்பதாகவும் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி பொதுசெயலா ளர் நரேஷ், பிரச்னை எழுப்பினார். இது தொடர்பாக நிர்வாகக் ழுவை கூட்டி பேச வேண்டும் என்று கூறினார். இதனால் பிரச்னை பெரிதாக வெடித்தது. தலைவர் சிவாஜி ராவுக்கு ஆதரவாகச் சிலரும் நரேஷூக்கு ஆதரவாக சிலரும் என நடிகர்கள் பிரிந்து ஆளாளுக்கு தங்கள் தரப்பு நியாயத்தைப் பேசிவருகின்றனர். இதனால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவாஜி ராவ் கூறும்போது, ‘என் மீது கூறப்பட்டுள்ள புகார் தவறானது. சங்க நிதியில் இருந்து ஐந்து பைசா கூட எடுக்கவில்லை. எனது சொந்தப்பணத்தில் இருந்துதான் உதவிகள் கூட செய்துவருகிறேன். சங்க பணத்தில் இருந்து ஒரு டீ கூட குடித்ததில்லை. இது தொடர்பான எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்’ என்றார். 

நடிகர் ஸ்ரீகாந்த் கூறும்போது, ‘இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் என் பெயரையும் சேர்த்துள்ளனர். நரேஷிடம் இது தொடர்பாக 45 நிமிடம் பேசி விளக்கம் அளித்தேன். இருந்தும் என் பெயர் இதில் அடிபடுகிறது. அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்பந்தம் போடும்போது, நரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் எதுவும் சொல்லவில்லை. இப்போது திடீர் என்று புகார் கூறுவது ஏன் என்று தெரியவில்லை’ என்றார். 

இதற்கிடையே சிரஞ்சீவியை சந்தித்து பிரச்னை பற்றி பேச நடிகர் சங்க நிர்வாகிகள் முயன்றதாகவும் அவர் அதற்கு விருப்பம் தெரிவிக்க வில்லை என்றும் தெரிகிறது. இதையடுத்து தெலுங்கு நடிகர் சங்கம் உடையும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.