தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. அதேபோல், தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘குஷி’. காதல், குடும்பம் மற்றும் ஆக்ஷன் நிறைந்த படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. ஷிவ நிர்வாணா இயக்கியுள்ள இத்திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் புரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்ட விஜய் தேவரகொண்டா நிகழ்வுகளில் ஒன்றான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அவரிடம் அவரது படங்கள் தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து பேசிய அவர், “ரஜினிக்கு 6 படங்கள் அடுத்தடுத்து ப்ளாப் ஆகலாம். ஆனால் மீண்டும் வந்து அவரால் ஜெயிலர் மாதிரியான ஒரு படம் நடித்து 500 கோடி ரூபாய் வசூலிக்க முடியும். சிரஞ்சீவிக்கும் ஆறு முதல் ஏழு திரைப்படங்கள் அடுத்தடுத்து ப்ளாப் ஆனது. அதன் பிறகு கடந்த சங்கராந்தி சூப்பர்ஹிட் படம் கொடுத்தார்” என்று பேசியுள்ளார். இந்தப் பகுதியை மட்டும் தற்போது தனியாக வைரலாக்கி வருகின்றனர். ஆனால், அதன்பிறகு ரஜினி மற்றும் சிரஞ்சீவியை புகழ்ந்து அவர் பேசியிருந்தார்.
”தெலுங்கில் சிரஞ்சீவி வந்த பின் தெலுங்கு சினிமாவையே அவர் மாற்றினார். நடிப்பு, நடனம் போன்றவற்றை முழுக்க மாற்றினார். அவரைப் பார்த்து ஈர்க்கப்பட்டு சினிமாவிற்குள் வந்தவர்கள் அதிகம். சில சூப்பர் ஸ்டார்கள் வெற்றி, தோல்விகளுக்கு அப்பாற்பட்டவர்கள். ஆனால் இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் ரஜினி, சிரஞ்சீவி திரைப்படங்கள் சரியாக செல்லவில்லை என்றால் சிலர் அவர்களை விமர்சிப்பார்கள். அது எனக்கு சற்றே மரியாதைக் குறைவான விஷயமாக தோன்றும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், “ஜெயிலர் படத்தை இன்னும் பார்க்கவில்லை. விரைவில் பார்க்க வேண்டும். அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது. அதற்கு வாழ்த்துகள். வசூலில் 500 கோடிகளை கடந்து விட்டதாக கேள்விப்பட்டேன். எனது சிறு வயதில் ரஜினி திரைப்படங்களை பார்த்துள்ளேன். அது தமிழ் திரைப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற திரைப்படங்களுக்கு பெரிய ரசிகர்கள். அடுத்து சூர்யா திரைப்படங்கள் வர ஆரம்பித்தது. எனவே இங்கிருந்து வரும் திரைப்படங்களுக்கு நாங்கள் மிகப்பெரிய ரசிகர்கள். இந்நிலையில் பிற மொழிகளின் நடிகர்கள் ஒன்றிணைந்து நடிக்கிறார்கள்” என்றார்.
ரஜினிகாந்தை பொறுத்தவரை ஜெயிலருக்கு முன்பாக அண்ணாத்த, தர்பார், பேட்ட, 2.0, காலா, கபாலி ஆகிய ஆறு படங்கள் வெளியாகி இருந்தது. இதில் விமர்சன ரீதியாக அண்ணாத்த, தர்பார் சரியாக போகவில்லை என்று சொல்லலாம். இந்த ஆறில் இன்று வரை வசூலில் பட்டையை கிளப்பியது 2.0 திரைப்படம் தான். அதேபோல், கபாலி வசூலில் ஹிட் அடித்ததை அதன் தயாரிப்பாளர் பலமுறை உறுதி செய்திருக்கிறார். கலாவும் பிளாப் வகையில் சேராது. பேட்ட திரைப்படம் விஸ்வாசம் படத்துடன் போட்டி போட்டு வசூலில் பட்டையை கிளப்பியது. விஸ்வாசம் ஓவர் டேக் செய்திருந்தாலும் பேட்ட படமும் ஹிட் ரகம் தான். இதற்கு முன்பு ரஜினிக்கு பாபா, குசேலன், கோச்சடையான் போன்ற படங்களைத் தான் ப்ளாப் ரகம் என்று சொல்லலாம். ஆனால், ஒவ்வொரு முறை ப்ளாப் விமர்சனங்கள் வரும் போதும் மிகப்பெரிய ஹிட் கொடுத்து அசத்தியிருப்பார் ரஜினிகாந்த். சந்திரமுகி அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.