சினிமா

’புகைப்பிடிப்பது உயிரைக்கொல்லும்’: நடிகர் அல்லு அர்ஜுனின் அசத்தல் பிரச்சாரம்

’புகைப்பிடிப்பது உயிரைக்கொல்லும்’: நடிகர் அல்லு அர்ஜுனின் அசத்தல் பிரச்சாரம்

sharpana

’புகைப்பிடிப்பது உயிரைக் கொல்லும்’ என்ற வாசகத்துடன் கூடிய டி சர்ட் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டிருப்பதோடு, புகைப்பிடிப்பதற்கு எதிராக அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார்,நடிகர் அல்லு அர்ஜுன்.

நடிகர்கள் சிகரெட் பிடிக்கும் காட்சிகளை ’ஸ்டைலுக்காக’ தங்கள் படங்களில் வைத்துக்கொண்டிருக்கும் சூழலில் தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் சிகரெட் பிடிப்பதற்கு எதிராக ரசிகர்களிடம் விழிப்புணர்வூட்டி வருகிறார். சமீபத்தில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ள அல்லு அர்ஜுன் புகைப்பிடிப்பதற்கு எதிராக ‘புகைப்பிடிப்பது உயிரைக் கொல்லும்’ என்ற வாசகத்துடன் டீ சர்ட் அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு விழிப்புணர்வூட்டியிருப்பதோடு, தனது ’ரசிகர்கள் புகைப்பிடிக்கக் கூடாது’ என்பதற்காக வேண்டுகோளும் விடுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவர், தற்போது வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,

"மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டுதான் நம்மிடையே புகை பிடிக்கும் பழக்கம் அதிகமானது. அந்த காலத்தில் புகைப்பிடிப்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஆனால், இந்தக் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியிலும் புகை பிடிக்கும் பழக்கம் உச்சத்தில் உள்ளது. இதற்கு மனஅழுத்தமும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனை மாற்ற என்னால் முடிந்த ஒரு சிறு முயற்சியை மேற்கொண்டுள்ளேன்.

கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாமல் இருப்பதாலும், மூன்றாம் அலைக்கான சாத்தியக்கூறு அதிகமாக இருப்பதாக கூறப்படுவதாலும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்பினேன். எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகளை குறித்து நான் எடுத்துரைத்து வருகிறேன். சிறிய அளவில் நாம் செய்யும் மாற்றம் கூட நம்மை சீரான மற்றும் ஆரோக்கியமான பாதைக்கு அழைத்து செல்லும்” என்று அக்கறையுடன் கூறியிருக்கிறார்.