சினிமா

ஓடிடி திரைப் பார்வை: TE3N- பேத்தியின் மரணம்.. 'புலன் விசாரணை' தாத்தாவின் போராட்ட அனுபவம்

ஓடிடி திரைப் பார்வை: TE3N- பேத்தியின் மரணம்.. 'புலன் விசாரணை' தாத்தாவின் போராட்ட அனுபவம்

subramani

கொரோனா பொதுமுடக்க காலத்தில் பொதுமக்களுக்கு சற்றே ஆறுதாலான மனநிலையைத் தருவது இந்த ஓடிடி தளங்கள்தான். ஓடிடி தளங்களில் குவிந்து கிடக்கும் எக்கச்சக்க படங்களில் சிலவற்றை தேர்வு செய்து உங்களுக்கு அறிமுகம் செய்து வருகிறோம். அவ்வகையில் இன்று நாம் பார்க்க இருக்கிற இந்தி சினிமா 2016-ஆம் ஆண்டு வெளியான டீன் (TE3N).

அமிதாப் பச்சன், நவாசுதீன் சித்திக், வித்யாபாலன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த சினிமா தற்போது அமேசான் ப்ரைமில் காணக் கிடைக்கிறது. 70 வயது மதிக்கத்தக்க ஜானின் 8 வயது பேத்தி கடத்தப்படுகிறாள். சடலமாக கிடைக்கும் அவளது சாவிற்கு நியாயம் வேண்டும் என நினைக்கும் ஜான் போலீஸ் உதவியினை நாடுகிறார். அவர்களும் தன் பங்கிற்கு குற்றவாளியைத் தேடுகிறார்கள்.

எட்டு ஆண்டுகள் ஆகியும் குற்றவாளி கிடைக்கவில்லை. ஆனால் மனம் சோர்வதையாத ஜான் தானே புலனாய்வில் இறங்கி தன் பேத்தியின் மரணத்திற்கு காரணமானவனைக் கண்டுபிடிக்கிறார். பேத்தியின் மரணத்திற்கு நியாயம்தேடும் தாத்தாவின் ஆதங்க பெருமூச்சுதான் இந்தப் பட்டத்தின் திரைகக்தை. புலனாய்வுப் படங்களுக்கேயான சுவராஸ்யமான திருப்புமுனைக் காட்சிகள் இப்படத்தில் நிறையவே உண்டு.

ஒரு கிட்னாப், அதனைக் கண்டுபிடிக்க விரையும் காவல்துறை. த்ரில்லர் கதைகளைப் பொறுத்தவரையில் திரையில் பார்க்கும் அனைவர் மீது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதே திறமையான திரைக்கதை அமைப்பு. அது இந்த சினிமாவில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. ஆனால், ஒரு கிட்னாப்பை கண்டுபிடிக்க அமிதாப் பச்சன் இன்னொரு கிட்னாப்பை செய்வது. முடிவில் தன் பேத்தியை கிட்னாப் செய்தவர் சொல்லும் காரணம், நம்மை வேறு மாதிரி யோசிக்க வைத்துவிடும்.

படத்தில் ஜானாக வரும் அமிதாப் பச்சனின் நடிப்பு அருமை. இது வழக்கமான சொல்தான் என்றாலும் கவனிக்கத்தக்க சில நுட்பமான உடல் மொழியினை வெளிப்படுத்தி இருக்கிறார் அமிதாப். தன் பேத்தி கடத்தப்படும் போது காட்டப்படும் காட்சிகளில் தோன்றும் அமிதாப்பிற்கும் 8 ஆண்டுகளுக்குப் பிறகிலான காட்சிகளில் தோன்றும் அமிதாப்பிற்கும் இடையில் உடல்மொழியில் வித்யாசம் தெரிகிறது.

8 வருட முதுமையினை மெல்ல தன் பாத்திரத்தில் ஏற்றிக் காட்டியிருக்கிறார் அவர். காவல்துறை அதிகாரி சரிதா சர்காராக வரும் வித்யாபாலன் க்யூட். பேரழகு. அவருக்கும் மார்டினாக வரும் மற்றுமொரு காவல்துறை அதிகாரி நவாசுதீன் சித்திக்கிற்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் நல்ல மசாலா ரகம். நவாசுதின் சித்திக் போலீஸாக வரும் காட்சிகளிலும் சரி, பாதிரியாராக தோன்றும் காட்சிகளிலும் சரி அப்படியே கதையோடு ஒன்றிப் போகிறார்.

த்ரில்லர் கதைக்குத் தேவையான பக்கா ஒளிப்பதிவை செய்து அசத்தியிருக்கிறார் துஷார் கண்டி. படத்தின் முதல்பாதி குடுத்த விறுவிறுப்பை இரண்டாம் பாதி கொடுக்கவில்லை. சஸ்பென்ஸை மெயின்டயின் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் எதையோ தவறவிட்டிருக்கிறார் இயக்குநர் ரிபுதாஸ் குப்தா. ஆனால், காட்சிகளின் பிடியில் நம்மை சீட் நுணிக்கு சமயங்களின் வரவைத்தும் விடுகிறார். திரைக்கதை, ஒளிப்பதிவு, கதாபாத்திரத் தேர்வு என எல்லாம் வலுவாக இருந்தும் இந்த சினிமா சுமாராக வந்ததற்கு கதைக் கரு பழையது என்பதே காரணமாக இருக்கலாம். மற்றபடி த்ரில்லர் சினிமா ரசிகர்கள் இந்த TE3N சினிமாவை ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.

- சத்யா சுப்ரமணி