உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர் ராமு காலமானார். இவர் இயக்குநர் சசி இயக்கிய “பூ” திரைப்படத்தின் மூலன் திரையுலகில் அறிமுகமானார். கதாநாயகன் தங்கராசுவின் தந்தை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வெள்ளந்தியான கிராமத்து தந்தையாக முதல் படத்திலேயே மிளிர்ந்திருப்பார்.
அடுத்து நீர்ப்பறவை, வீரம், ஜில்லா, நெடுநல்வாடை ஆகிய படங்களிலும் நடித்தார். தங்க மீன்கள் படத்தில் செல்லாமாளின் தாத்தாவாக பாசமாகவும் கல்யாண சுந்தரத்தின் தந்தையாக கடுமையாகவும் அட்டகாசமான யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ராமு. பரியேறும் பெருமாள் படத்தில் கல்லூரி முதல்வர் அறையில் பரியனுக்கு அறிவுரை கூறும் கதாபாத்திரமாக வருவார் ராமு.
“என்னோட அப்பா செருப்பு தைக்கிறவர். அவரோட புள்ளை நான். உனக்கு பிரின்சிபால். பன்னி மாதிரி என்ன அடிச்சு விரட்டுனானுக. ஓடி ஒளிஞ்சு போயிட்டேனா? எது அவசியம்ன்னு தெரிஞ்சுக்கிட்டு பேய் மாதிரி படிச்சேன். அன்னைக்கு என்ன அடக்கனும் நினைச்சவன்லாம் இன்னைக்கு என்னை அய்யா சாமின்னு கும்புடுறான். உன்னை சுற்றி நடக்குற விஷயத்தலாம் மீறி நீயும் ஜெயிச்சு வருவன்னு நான் நம்புறேன்.” என்று பரியனை அனுப்பி வைக்கும் கதாபாத்திரமாக வாழ்ந்திருப்பார் ராமு.
இதையடுத்து சூரரை போற்று படத்தில் சூர்யாவின் தந்தையாக நடித்திருப்பார். அதில் அவர் இறக்கும் காட்சியும் இருக்கும்.
மாரடைப்பு ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ராமு. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டதாக இயக்குநர் லெனின் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.