சினிமா

தெனாலிக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ தமிழ் ரீமேக்!

தெனாலிக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ தமிழ் ரீமேக்!

sharpana

கடந்த ஆண்டு, மலையாளத்தில் இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் படுவள் இயக்கத்தில் வெளியான ’ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படத்தினை கே.எஸ் ரவிக்குமார் தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படம், கேரள அரசின் மூன்று திரைப்பட விருதுகளை வென்றதோடு வசூல் சாதனையும் செய்தது.

வேலைக்குச் செல்வதால் தந்தையைப் பார்த்துக்கொள்ள ரோபோவை நியமிக்கும் மகன்,  தந்தைக்கும் ரோபோவுக்குமான பாசப்பிணைப்பு என வித்தியாச கதைக்களத்தை கொண்ட இக்கதையைத்தான் தமிழில் கே.எஸ் ரவிக்குமார் ரீமேக் செய்யவுள்ளார்.

ரஜினி நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான லிங்கா படம்தான் கே.எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் கடைசியாக வந்த தமிழ் படம். கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட நடிகர் கிச்சா சுதிப்பை வைத்து ‘முடிஞ்சா இவன புடி’ படத்தை கன்னடத்திலும் தமிழிலும் இயக்கியிருந்தார். அதற்கடுத்ததாக தெலுங்கிலும் படங்கள் இயக்கினார். லிங்காவுக்குப்பிறகு, தமிழில் மீண்டும் களமிறங்கக் காத்திருக்கும் கே.எஸ் ரவிக்குமார் ’ஆண்ராய்டு குஞ்சப்பன்’ படத்தை தமிழில் தயாரிக்கவுள்ளார். ஆனால், படத்தை இயக்கவிருப்பது, அவரல்ல. அவரது உதவி இயக்குநர்கள்தான்.

கடந்த 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ‘தெனாலி’ படத்தினைத்தான் கே.எஸ் ரவிக்குமார் கடைசியாக தயாரித்திருந்தார். 20 வருடங்களுக்குப் பிறகு, அவர் தயாரிப்பில் இறங்கி இருப்பது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.