தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்  முகநூல்
சினிமா

நடிகர் தனுஷ்-க்கு செக் வைத்த தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம்? கொந்தளித்த நடிகர் சங்கம்.. மோதல் என்ன?

நடிகர் தனுஷை வைத்து புதிய படம் தொடங்குபவர்கள், அதற்கு முன், தங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

PT WEB

நடிகர் தனுஷை வைத்து புதிய படம் தொடங்குபவர்கள், அதற்கு முன், தங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், தனுஷுக்கும் நடிகர் சங்கத்துக்குமான பஞ்சாயத்து என்ன என்பதை பார்க்கலாம்.

ஒரு பெரும் தமிழ்ப் திரைப்பட உலகிற்குள் மிக ஒல்லியான உருவத்தில், துருதுருவென ஒருவராக களமிறக்கப்பட்ட தனுஷ், என்னையெல்லாம் பார்த்தவுடன் பிடிக்காது, பாக்க பாக்கத்தான் பிடிக்கும் என ரசிகர்களை தன்பக்கம் திருப்பினார். ஆயிரத்தில் ஒரு நடிகராக பார்க்கப்பட்ட தனுஷின் இன்றைய சினிமா ஆடுகளம், வேறு யாரும் நுழைய முடியாத இடமாக மாறியுள்ளது.

தனது போட்டியாளர்களை மில்லராக சுட்டு வீழ்த்தி வசூலை குவிப்பதும், திருச்சிற்றம்பலமாக வந்து ரசிகர் மனங்களை கவருவதுமாக, தனுஷின் பயணம் கடலுக்குள் பாயும் மரியானாக உள்ளது. இப்படி நடிப்பதிலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பிடிப்பதிலும் அசுரனாக இருக்கும் தனுஷ், இயக்கி நடித்து அண்மையில் வெளியான படம்தான் ராயன்.

இந்த நிலையில், அவரது டைரி முழுவதும் பல்வேறு படங்களின் படப்பிடிப்பு தேதி ஹவுஸ் புல்லாகி இருப்பதாக தெரிகிறது. இதை சுட்டிக்காட்டி உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தங்கள் தரப்பில் தனுஷுக்கு அதிரடியாக செக் வைத்துள்ளது.

நடிகர்கள், தயாரிப்பாளர்கள் பலரிடம் முன்பணம் வாங்குவதாகவும், முதலில் பணம் வாங்கியவரின் படத்தில் நடிக்காமல், புதிய வாய்ப்புகளில் நடிக்கச் செல்வதால், முந்தைய தயாரிப்பாளர் பாதிக்கப்படுவதாகவும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை விடுத்துள்ளது.

அதில், நடிகர் தனுஷ் பல்வேறு நபர்களிடம் அட்வான்ஸ் வாங்கி உள்ளதாக கூறியுள்ளதுடன், அவரை வைத்து புதிய படம் எடுப்போர், முதலில் தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகி கலந்தாலோசிக்க வேண்டும் என செக்மேட் வைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவசரமாக கூடிய தென்னிந்திய நடிகர்கள் சங்கம், நடிகர் தனுஷ் மீது இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்றும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தன்னிச்சையான முடிவு கண்டிக்கத்தக்கது என்றது. அவசர கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, ”தனுஷ் மீதான நடவடிக்கை வருத்தமளிக்கிறது. அவர் மீது எழுத்துப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை. ” என்று தெரிவித்தார்.

மேலும், நடிகர் சங்கத்தை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவை வன்மையாக கண்டிப்பதாக நடிகர் கருணாஸ் கூறினார். ஒரு நடிகர் மீது புகார் என்றால், அதை நடிகர் சங்கத்திடம் கொடுப்பதும், தங்கள் தரப்பு புகாரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கொடுப்பதும்தான் மரபு என்ற நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தின் தன்னிச்சை முடிவு அதிர்ச்சி அளிக்கிறது எனக் கூறியுள்ளது.

படப்பிடிப்பை ரத்து செய்ய உள்ளதாக கூறியது, தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ஒன்று என்றும் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகளின் கூட்டுக் கூட்டம்தான் தனுஷ்-க்கு எதிரான இந்த முடிவை எடுத்துள்ளது...