சினிமா

இப்போதும் எப்போதும் திரையுலகின் கேப்டன் விஜயகாந்த் ! 69ஆவது பிறந்தநாள் இன்று

இப்போதும் எப்போதும் திரையுலகின் கேப்டன் விஜயகாந்த் ! 69ஆவது பிறந்தநாள் இன்று

jagadeesh

கேப்டன் விஜயகாந்த் என்றாலே இப்போதுள்ள இளைஞர்களுக்கு அவர் மீது நெகடிவ் இமேஜ் மட்டுமே இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை "மீம்" கிரியேட்டர்களின் நாயகனாகவே இருந்தார் விஜயகாந்த். அதற்கு காரணமாக இருந்தது அவரின் குரல் மற்றும் உடல்நிலை. ஆனால் இப்போது விஜயகாந்த் குறித்த மீம்கள் வருவது பெருமளவு குறைந்துள்ளது. எந்த இளைஞர்கள் அவர்களை எள்ளி நகையாடினார்களோ அதே இளைஞர்கள் அவரின் உடல்நிலையை இப்போது புரிந்துக்கொண்டனர்.

ஆனால், திரைத்துறையில் விஜயகாந்த் செய்துள்ள சாதனைகளும், எளிய மக்களுக்கு அவர் செய்த உதவிகளும் இன்றைய இளைஞர்களுக்குத் தெரிய வாய்ப்பே இல்லை. கேப்டன் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் விஜயகாந்த் இன்று தன்னுடைய 69 ஆவது பிறந்தநாளை கொண்டுடாடுகிறார். இந்த நாளில் அவரின் திரையுலக பயணத்தையும், அவர் குறித்த சில தகவல்களையும் சற்றே தெரிந்துக்கொள்ளலாம்.

விஜயராஜ் டூ விஜயகாந்த்

மதுரை திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தார் விஜயராஜ். தமிழ்த் திரைப்படங்கள் மீது ஏற்பட்ட தீராக்காதல் காரணமாக பள்ளிப்படிப்பை 10 ஆம் வகுப்புடன் நிறுத்திவிட்டார். அப்பாவின் அரிசி ஆலையை கவனிக்கத் தொடங்கினார். ஆனாலும், விஜயராஜ்க்கு, மனம் முழுவதும் சினிமாவே இருந்தது. அதிலும் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்பதே கனவு. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் மதுரையில் இருந்து 1978 இல் சென்னைக்கு வந்த விஜயராஜ். ‘இனிக்கும் இளமை' படத்தின் மூலம் விஜயகாந்த் ஆக திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். அவரை இயக்குநர் எம்.ஏ.காஜா கதாநாயகனாக வெள்ளித்திரைக்கு அறிமுகம் செய்தார். ஆனால் முதல் படம் அவருக்கு இனிமையை தரவில்லை. அடுத்தடுத்த படங்களின் நிலையும் இதேதான். ஆனால், விஜயகாந்த் சோர்ந்துப்போகவில்லை. தொடர்ந்து முயன்றுக்கொண்டே இருந்தார்.

தூரத்து இடி முழுக்கம்

கே.விஜயன் இயக்கத்தில் சலீல் சவுத்ரி இசையில் விஜயகாந்த் நடித்த "தூரத்து இடி முழக்கம்", பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின்பு, எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் நடித்த "சட்டம் ஒரு இருட்டறை" பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து, பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதன் பின்பு, இராம.நாராயணன் இயக்கிய "சிவப்பு மல்லி"யும் ஹிட். அப்போதுதான் விஜயகாந்தின் திரையுலக கிராஃப் ஏற ஆரம்பித்தது. 1980-கள் ரஜினி, கமல் என திரையுலகத்தை கோலோச்சிய காலம். இவர்களின் கால்ஷீட் கிடைக்காத சிறு தயாரிப்பாளர்கள் அடுத்து நாடியது விஜயகாந்தைதான். வெற்றித் தோல்வி என சரிபாதியாகவே அவர் வாழ்க்கை சென்றுக்கொண்டு இருந்தது. ஆனால், மணிவண்ணன் தனது "நூறாவது நாள்" படத்தின் மூலம் விஜயகாந்துக்கு மீண்டும் ஒரு பிரேக் கொடுத்தார்.

கேரக்டர்தான் முக்கியம் !

விஜயகாந்த் ஹீரோ என்று மட்டுமல்லாமல், தன்னுடைய கேரக்டர் சின்னதாக இருந்தாலும், வலுவாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அப்படி அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்தார். அப்படித்தான் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் எடுத்த "ஊமை விழிகள்" படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார். முதலில் இந்த கேரக்டருக்கு அணுகப்பட்டவர் சிவகுமார், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போனது. அதன் இயக்குநரான அரவிந்த் ராஜ் அடுத்தடுத்து இயக்கிய உழவன் மகன், செந்தூரப் பூவே ஆகியவையும் மாபெரும் வெற்றி.

விஜயகாந்த் டூ கேப்டன்

1990-களுக்குப் பிறகு விஜயகாந்த் தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத ஹீரோவானார். கேப்டனுக்கு முன்பாக புரட்சி்க் கலைஞர் விஜயகாந்த் என அழைக்கப்பட்டதும், இந்தக் காலக்கடத்தில்தான். "அம்மன் கோயில் கிழக்காலே", "வைதேகி காத்திருந்தாள்" படங்கள் தமிழகமெங்கும் விஜயகாந்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தது. அதன் பின் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வந்த "புலன் விசாரணை"யும், அதன் மேக்கிங்கும் அப்போது பெரிதும் பேசப்பட்டது. அதேபோல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான "சின்னக் கவுண்டர்" விஜயகாந்துக்கு பெயரும் புகழும் கொடுத்தது.

100 வது படம் 200 நாள் !

ரஜினியின் 100-வது படம் "ராகவேந்திரா", கமலின் 100-வது படம் "ராஜ பார்வை" ஆகியவை மிகப்பெரிய வெற்றி பெறவில்லை. தமிழ் கதாநாயகர்களுக்கும் 100-வது படத்துக்கும் ராசியே இல்லை என்ற மூடநம்பிக்கையை தகர்த்தவர் விஜயகாந்த். ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில், லியாகாத் அலிகான் வசனங்களில் விஜயகாந்தின் 100 ஆவது படமான "கேப்டன் பிரபாகரன்" தியேட்டர்களில் 200 நாள் ஓடி சாதனைப் படைத்தது. இது, பிரம்மாண்டமான படமாக அப்போது பேசப்பட்டது. இந்தப் படத்திற்கு பின்பே, ’கேப்டன்’ என்ற பெயர் விஜயகாந்தை தொற்றிக்கொண்டது.

அதிரடியான போலீஸ் வேடம் விஜயகாந்துக்கு மட்டுமே செட்டானது. இதன் பின் "மாநகர காவல்", "சேதுபதி ஐ.பி.எஸ்., "ஹானஸ்ட் ராஜ்" ஆகியவை பட்டையை கிளப்பியது. இதில் திடீரென மிகவும் அழுத்தமான அமைதியான போலீஸாக நடித்தப்படம் மணிரத்னத்தின் கதை, திரைக்கதையில், கே.சுபாஷ் இயக்கத்தில் வெளியான "சத்ரியன்". இப்போதும் விஜயகாந்த்தின் கிளாஸிக்கில் சத்ரியனுக்கு தனி இடம் உண்டு. இதன் பின்பு ’ரமணா’ வரை விஜயகாந்த் தொட்டதெல்லாம் ஹிட்.

கேப்டனின் பெர்சனல் பக்கங்கள்

எல்லாத் தம்பி, தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்த போது விஜயகாந்துக்கு 37 வயதாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் அக்காவின் வற்புறுத்தலின் பேரில் 1990 ஆம் ஆண்டு தொழிலதிபர் எல்.சி.கண்ணையா- அம்சவேணி தம்பதியின் மகளான பிரேமலதாவை மணம் முடித்தார். இவர்களது திருமணத்தை அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதிதான் நடத்திவைத்தார். விஜயகாந்தின் குலதெய்வம் வீரசின்னம்மா. மதுரைக்குப் பக்கத்தில் திருமங்கலம் அருகில் இருக்கிறது. பாழடைந்து கிடந்த கோயிலை சுற்றுச்சுவர் எழுப்பி, கும்பாபிஷேகம் நடத்தி புதுப்பிக்க உதவியிருக்கிறார்.

சினிமாவோ, அரசியல் கூட்டணியோ எல்லாமே வீரசின்னம்மாவின் உத்தரவுப்படிதான் நடக்கும். தீவிர ஐயப்ப பக்தர். ஐயப்பன் கோயிலுக்கு 18 வருடங்களாகச் சென்று வந்தவர், நடுவே பக்தர்கள் இவர் காலில் விழுந்து வணங்குவதைப் பழக்கமாகக் கொண்டவுடன், இப்போது கோயிலுக்குச் செல்வது இல்லை.1999 முதல் 2004 வரை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருந்த விஜயகாந்த், நடிகர் சங்க கடனை அடைத்தார். 2001 இல் சிறந்த இந்தியக் குடிமகன் விருதை விஜயகாந்துக்கு ஐ.நா. மனித உரிமைக் கமிஷனின் அப்போதைய தலைவர் பி.என்.பகவதி டெல்லியில் வழங்கினார்.

கொடையுள்ளம் கொண்ட கேப்டன்

விஜயகாந்த் என்றால் கோபப்படுபவர் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், நண்பர்களை எப்போதும் மறக்காதவர். அவரால் உயர்ந்த தயாரிப்பாளர்கள் பிற்காலத்தில் தாழ்ந்தபோதும் தூக்கிப் பிடித்தவர் விஜயகாந்த். அரசியலுக்கு வருவதற்கு முன்பாகக் கூட ஒவ்வொரு வார இறுதிநாட்களிலும் தன் வீடு தேடி உதவிக் கேட்டு வரும் ஏழை மக்களுக்கு உதவியவர். தியேட்டர் அதிபர்கள் இப்போதும் கொண்டாடும் வசூல் சக்கரவர்த்தி விஜயகாந்த். இப்போதும், தமிழகத்தில் ஏதோ கிராமத்தில் விஜயகாந்தின் பழைய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டால் வசூல் கொடுக்கும் என்பது தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை. விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீது மிகுந்த மரியாதை கொண்டவர், அதன் காரணமாகவே தனது மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் சூட்டினார்.

அதேபோல மிகச் சிறந்த தேசப் பற்றுக்கொண்டவர். இது தனது படங்களின் வசனங்கள் மூலம் எதிரொலித்தது. இப்போது உடலும், குரலும் தளர்ந்து இருந்தாலும் அவர் மீண்டும் தன் கர்ஜனை குரலில் சினிமாவில் பேச வேண்டும் என்பது அவரின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. வாழ்த்துகள் கேப்டன், மீண்டு வாருங்கள் வெள்ளித்திரைக்கு. சத்ரியன் படத்தின் வசனமாக சொல்ல வேண்டும் என்றால் "வரனும் ! பழைய பன்னீர்செல்வமா திரும்ப வரணும்". 

தி.நகர் விஜய்காந்த் அலுவலத்தில் அணையாமல் எரியும் அடுப்பு:

விஜய்காந்த் என்றால் திரைத்துறையினர் பலருக்கும் நினைவுக்கு வருவது சாப்பாடு விஷயத்தில் அவர் காட்டும் அபரிமிதமான அக்கறைதான். எப்போது சினிமா செட்டில் பணிபுரியும் அனைவரும் சரியான சரியான நேரத்தில் நல்ல உணவு சாப்பிட்டு விட்டார்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்வார். மற்றொரு முக்கியமான விஷயம், சென்னை தி.நகரில் உள்ள அவரது அலுவலகம் கிட்டதட்ட சினிமா துறை சார்ந்தவர்களுக்கு ஒரு அன்னசத்திரமாகவே திகழ்ந்தது. எப்போது யார் வேண்டுமானாலும் அங்கு சென்று சாப்பிட்டுவிட்டு வரலாம் என்ற நிலை இருந்தது. இன்றளவும் அந்த காலத்தில் சினிமா வாய்ப்பு தேடி முயற்சித்த காலத்தில் விஜய்காந்த் அலுவலகம் எப்படி தங்களுக்கு பசியாற்றியது என்று பலரும் நன்றியுடன் நினைவு கூர்வார்கள்.