தமிழ் திரைப்பட இயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கி இருக்கும் பாலிவுட் திரைப்படமான 'ஷேர்ஷா' ஆகஸ்ட் 12 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது.
தமிழில் 'குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் விஷ்ணுவர்தன். தொடர்ந்து `அறிந்தும் அறியாமலும்', `பட்டியல்', `சர்வம்' உள்ளிட்ட படங்களை இயக்கினார். அஜித்தின் `பில்லா', `ஆரம்பம்' படங்களையும் இயக்கினார். இதைத்தொடர்ந்து மூன்று வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த விஷ்ணுவர்தன், தற்போது இந்தியில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார்.
கார்கில் போரின்போது வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி 'ஷேர்ஷா' எனும் படம் உருவாகி இருக்கிறது. அதில் விக்ரம் பத்ரா கதாப்பாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் கடந்தாண்டே முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டாலும், கொரோனா அச்சுறுத்தலால் வெளியாகாமல் இருந்தது.
திரையரங்குகள் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் இப்போதைக்கு இல்லை என்பதால், இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.