Vairmuthu pt desk
கோலிவுட் செய்திகள்

“தற்போதைய படத் தலைப்புகளை பார்த்து வெட்கப்படுகிறேன்; தமிழ் சொற்களுக்கா பஞ்சம்?” - வைரமுத்து

webteam

செய்தியாளர்: சுகன்யா மெர்சி பாய்

சென்னை பிரசாத் அரங்கில், ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் புதுமுகங்கள் சிலரும், வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பனை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில், கவிஞர் வைரமுத்து, வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தில் பாடல் வரிகளை எழுதியுள்ள வைரமுத்து, இசைத்தட்டை வெளியிட அதனை வணிகர் சங்கத் தலைவர் விக்ரமராஜா பெற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து மேடையில் கவிஞர் வைரமுத்து பேசிய போது... “இந்த படத்தின் தலைப்பு பனை என்பது மண்ணின் பெயர், மக்களின் பெயர், கலாசார குறியீடு என நினைக்கிறேன். தற்போதைய படத்தலைப்புகளை பார்க்கையில் துக்கப்படுகிறேன், வெட்கப்படுகிறேன். ஏன் தமிழ் சொற்களுக்கா பஞ்சம்? தற்போதைய தலைப்புகள் எதையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை நான். என்னைப் பொறுத்தவரை கருத்துகளை, படத்தின் காட்சியை விரிவுபடுத்தும் வகையில்தான் தலைப்புகள் இருக்க வேண்டும். முந்தைய காலத்தில் படத்தின் கதையை படத்தலைப்புகள் சொல்லிவிடும்.

ஒரு படத்தின் தலைப்பு விளிம்பு நிலை மக்கள் வரை ஒருவித கருத்தை எடுத்துச் செல்ல வேண்டுமென நினைக்கிறேன். தயவுசெய்து படங்களுக்கு தமிழில் பெயர் வையுங்கள். இதனை வேண்டுகோளாக வைக்கிறேன். பாமரன் தமிழை விரும்புகிறான். ஆனால், நீங்கள் பாமரனிடம் இருந்து தமிழை தள்ளி வைக்கிறீர்கள்.

இந்தியாவில் 11 கோடி பனை மரங்கள் உள்ளன. அவற்றில் 6 கோடி பனை மரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளன. ஒவ்வொரு அரசனுக்கும் ஒரு கொடி உள்ளது போல சேரனுக்கு பனை பூ மாலையை அணிவித்த வரலாறு இங்கு உண்டு. தமிழ்நாட்டின் மரமாக பனை மரம் உள்ளது. அது சொல்லும் பனை மரத்தின் முக்கியத்துவத்தை” என்றார்.

Thiruvalluvar

இதைத் தொடர்ந்து இயக்குநர் பேரரசு பேசுகையில்... “கோடிக்கணக்கில் ரசிகர்களை வைத்துள்ள முன்னணி நடிகர்களுக்கு அதிக அறிமுக பாடல்களை எழுதியவர் வைரமுத்து அவர்கள்தான்.. அவர் எழுதிய ‘வந்தேண்டா பால்காரன்’ பாடல்தான், நான் இயக்கிய திருப்பாச்சி படத்தில் ‘நீ எந்த ஊரு, நான் எந்த ஊரு பாடலை’ அவரை வைத்து எழுதக்காரணம். ஒரு ட்யூனுக்கு பாடலாசிரியராக பணியாற்றுவது வேறு. ஆனால், ஒரு ட்யூனுக்கு கவிதைகளை நிரப்புவது கவிப்பேரரசுதான். வைரமுத்து எழுதுகிற ஒவ்வொரு பாடலும் வரிகள் கிடையாது... அவை கவிதைகள்தான். அதனால்தான் அவர் பெயர் கவிப்பேரரசு.

திருவள்ளுவருக்கு வெள்ளை உடை அணியலாம், காவி பூசலாம், சிலர் கருப்பு உடை கூட அணியலாம். ஆனால், அவர் கையில் உள்ள பனை ஓலையை யார் மாற்ற முடியும்? அது பனை ஓலை கிடையாது தமிழ். தமிழர்களின் அடையாளம்” என்று பேசினார்.