உதயநிதி ஸ்டாலின்  PT Desk
கோலிவுட் செய்திகள்

“3 வருடங்கள் கழித்து படம் நடித்தால் இவருடைய படத்தில் தான் நடிப்பேன்” - உதயநிதி ஸ்டாலின்

“இதுதான் என்னுடைய கடைசி படம்; ஒரு வேளை மூன்று வருடம் கழித்து நடித்தால் மாரி செல்வராஜ் படத்தில் மட்டும் தான் நான் நடிப்பேன்" என்று நடிகரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

PT WEB

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. அரசியல் சார்ந்த கதையம்சம் கொண்ட ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்திருந்த நடிகர் வடிவேலு இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார். மேலும், பல்வேறு முன்னணி சினிமா நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். இப்படத்தில் இருந்து வடிவேலு பாடிய ‘ராசக்கண்ணு’, ஏ.ஆர். ரஹ்மான் குரலில் ‘ஜிகுஜிகு ரயில்’ பாடல்கள் ஏற்கெனவே வெளியாகிவிட்டன. இந்தப் பாடல்கள் தவிர 'கொடி பறக்குற காலம்', 'நெஞ்சமே நெஞ்சமே', 'உச்சந்தல', 'மன்னா மாமன்னா', 'வீரனே' ஆகிய பாடல்கள் நேற்று வெளியானது.

இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ ‘மாமன்னன்’ கடைசிப் படம் என நான் ஒரு முறைதான் கூறினேன் (சிரிப்புடன்). இதுதான் என்னுடைய கடைசி படம் என சொல்லி தான் ரகுமான், கீர்த்தி, வடிவேலு என அனைவரிடமும் கால்ஷீட் வாங்கினேன். கதை கேட்டதும் இதற்கு வடிவேலு எப்படி இருப்பார் என ஆலோசித்து, அவரிடம் கேட்டும் அப்படி அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், இந்த கதை வேண்டாம் என நினைத்தோம். ‘மாமன்னன்’ வடிவேலு அண்ணன் தான்; அண்ணன் இல்லை என்றால் இந்தப் படம் இல்லை.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ போல் நாம் ஒரு படம் பண்ண வேண்டும் என வடிவேலு அண்ணணிடம் கூறினேன். இப்போதைக்கு இதுதான் என்னுடைய கடைசி படம். ஒரு வேளை மூன்று வருடம் கழித்து நடித்தால் மாரி செல்வராஜ் படத்தில் மட்டும் தான் நான் நடிப்பேன்” என்று தெரிவித்தார்.

விழாவில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பேசுகையில், “அனைவரும் உதயநிதி சினிமாவில் இருந்து ஓய்வுபெறுவதை வேறு விதமாக பேசுகின்றனர். ஆனால் நான் அவரை வாழ்த்தி அனுப்பி வைக்கிறேன். நீங்கள் சினிமாவிற்கு வர வேண்டாம். அங்கேயே இருங்கள். மாரிசெல்வராஜூக்கு ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களுக்கு பிறகு மூன்றாவது படம் ‘மாமன்னன்’ கண்டிப்பாக வெற்றிதான். உதயநிதி அவர்களிடம் மீண்டும் சொல்லுகிறேன், நீங்கள் சினிமாவிற்கு வர வேண்டாம்; அப்படியே போய்விடுங்கள்” என்று தெரிவித்தார்.

விழாவில் சிவகார்த்திகேயன் மேடையில் பேசுகையில், “இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர் என்பதை மாரி செல்வராஜ் ‘பரியேறும்‌ பெருமாள்’ படத்தின் இறுதிக்காட்சியின் சிங்கிள் ப்ரேமில் வைத்துள்ளார். ‘பரியேறும் பெருமாள்’ மாதிரி ஒரு படத்தை எடுத்து விட முடியுமா என்றால், அது ‘மாமன்னன்’ படமாகத்தான் இருக்கும். நல்ல படங்கள் எடுப்பதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டே இருப்பேன்” என்று பேசினார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் விழா மேடையில் பேசுகையில், “இந்த படத்திற்கு பிறகு நடிகர் வடிவேலுவை ‘மாமன்னன்’ என்று தான் கூப்பிடுவார்கள். நீங்கள் நடிகர் என்பதை தாண்டி ஒரு EMOTION. இந்த படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட்” என சஸ்பென்ஸை உடைத்தார் கீர்த்தி சுரேஷ்.

நடிகர் வடிவேலு மேடையில் கூறியதாவது, “இந்த ‘மாமன்னன்’ படம் அல்ல, நிஜம். சோகத்தையும் அந்த மன கசப்பையும் நடிக்க வைத்த என் தலைவன் 'பரமக்குடி தந்த பத்திரமாத்து தங்கம் ' கமல்ஹாசன் தான். அவரிடம் இருந்து கற்று கொண்டதுதான் ‘மாமன்னன்’ படத்தில் நடித்தது. ஆஸ்கார் விருதையே, ஏதோ பழைய பாத்திர கடையில் வாங்கி வந்த மாதிரி, சாக்கில் அள்ளி தூக்கி வந்தவர் ஏ.ஆர்.ரஹ்மான். மறைந்த என் தாய் தான், இந்த பாடலை பாட வைத்தது. அதேபோல ரஹ்மான் தான் என்னை பாட வைத்தார். படம் பாருங்கள் நன்றாக வந்திருக்கிறது. இவர் வாங்கிய ஆஸ்கார் விருதில் எனக்கு இரண்டு, மூன்று கொடுத்தது போல இருந்தது” என்று தெரிவித்தார்.