விஜய் pt web
கோலிவுட் செய்திகள்

முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படங்கள்... டாப் 10ல் 5 தளபதி வசம்!

PT WEB

பொதுவாக விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது கதைக்களம் எப்படி இருக்கும் என்பதை தாண்டி, முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம்தான் லியோ. இந்த படம் முதல் நாளில் 148 கோடி ரூபாய் வசூல் செய்து, தற்போது வரை முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக உள்ளது.

'லியோ'

இரண்டாவதாக, விஜயின் கோட் திரைப்படம் வெளியான முதல் நாளில் 126 கோடி ரூபாய்க்கு அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

GOAT Actorvijay

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியானது எந்திரன் 2.0. பாக்ஸ் ஆபிஸில் மொத்தமாக 800 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், முதல் நாளில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை குவித்தது.

தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் - 1 திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியிருந்தார். இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில், 2022ஆம் ஆண்டு வெளியானது. முதல் நாளில் 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியானது பீஸ்ட். இந்த படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும், வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. முதல் நாளில் 72 கோடி ரூபாய் வசூல் செய்தது.

ஜெயிலர்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரஜினிக்கு ஒரு COME BACK படமாக அமைந்தது. இப்படம் முதல் நாளில் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2018ஆம் ஆண்டு சர்கார் திரைப்படம் வெளியானது. முதல் நாளில் 69 கோடி ரூபாய் வசூல் செய்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது விக்ரம் திரைப்படம். துவக்க நாளில் இந்த படம் 66 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

விக்ரம் படம்

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் பிகில். 2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வந்த இந்த படம், 55 கோடி ரூபாய் வசூலித்தது.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் 2021ல் வெளியானது வலிமை திரைப்படம். இந்த படம், முதல் நாளில் 50 கோடி ரூபாய் வசூல் செய்து 10வது இடத்தில் உள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் விஜய்யின் 5 படங்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.