Theatre File image
கோலிவுட் செய்திகள்

‘டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதிக்க வேண்டும்’- தியேட்டர் உரிமையாளர்களின் கோரிக்கையும் எதிர்ப்பும்!

தமிழகத்தில் உள்ள சினிமா திரையரங்குகளின் டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள அனுமதிக்கோரி, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

சங்கீதா

தமிழ்நாடு சினிமா திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் நீண்ட நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் கூடுதலாகவே வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்நிலையில், சினிமா டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக்கொள்ள அனுமதிக்கோரி, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

petition

அதில், “கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி தமிழக அரசாணை மூலம் எங்களுக்கு கட்டண விகிதம் நிர்ணயித்து ஆணையிட்டது. 6 ஆண்டுகள் கடந்துவிட்டதாலும், நடைமுறை செலவுகள் அதிகரித்து விட்டதாலும் திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே திரையரங்க உரிமையாளர்களை காப்பாற்ற கீழ்க்கண்டவாறு கட்டணங்களை உயர்த்தி வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜி.எஸ்.டி. அல்லாமல் உயர்த்த விரும்பும் டிக்கெட் கட்டணம்:

* மல்டிப்ளக்ஸ் ஏசி தியேட்டர் கட்டணம் ரூ.150-லிருந்து ரூ.250 ஆகவும்,

* நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏசி தியேட்டர் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.200 ஆகவும்,

* நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏசி இல்லாத தியேட்டர் கட்டணம் ரூ.80-லிருந்து ரூ.120 ஆகவும்,

* Recliner Seat உள்ள திரையரங்கில் கட்டணம் ரூ.350 ஆகவும்,

* Epiq திரைக்கொண்ட தியேட்டருக்கு ரூ.400 ஆகவும்

* Imax திரைக்கொண்ட தியேட்டருக்கு ரூ.450 ஆகவும்,

உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு தியேட்டர் உரிமையாளர் சங்கம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். கடைசியாக 2017-ல் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டநிலையில், இந்த முறை மறுபடியும் கட்டணம் உயர்த்தப்படுமா என காத்திருக்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கை வெளியான உடனேயே அதற்கான எதிர்ப்பும் பதிவாகியுள்ளது.

மாநாடு உள்ளிட்ட படங்களை தயாரித்த சுரேஷ் காமாட்சி, “ஏற்கெனவே திரையரங்கிற்குள் வருபவர்கள் விலைவாசியால் ஹோம் தியேட்டருக்குள் புகுந்துகொண்டிருக்கிறார்கள். இன்னமும் டிக்கெட் விலையை அதிகப்படுத்தினால் மக்கள் எப்படி படம் பார்க்க வருவார்கள்??! சிறிய படங்களின் நிலை என்னாகும்..?! அரசும், திரையரங்க உரிமையாளர்களும் திரையரங்கிற்கு வருபவர்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்து இதை தவிர்க்க வேண்டும். @CMOTamilnadu” என்று தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.