சூர்யா-ஜி.வி.-சுதா கொங்கரா  Twitter
கோலிவுட் செய்திகள்

மீண்டும் கூட்டணி அமைக்கும் ‘சூரரைப் போற்று’ படக்குழு? - வெளியான தகவல்!

‘சூரரைப் போற்று’ படத்திற்குப் பிறகு நடிகர் சூர்யா-இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சங்கீதா

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ‘சூரரைப் போற்று’ திரைப்படம், கொரோனா ஊரடங்கு காரணமாக அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி நேரடியாக வெளியானது. ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

சூரரைப்போற்று

இந்தப்படத்தை, சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், சிக்யா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். 5 தேசிய விருதுகளையும் இப்படம் வென்று தமிழிலும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் தற்போது ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நடிகர் சூர்யா-இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த மூவரின் கூட்டணி மீண்டும் ஒன்று சேரும் என்று ஜி.வி. பிரகாஷ் முன்பு கூறியிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இசையமைப்பில் நூறாவது படம், சுதா கொங்கராவுடன் அமைய உள்ளதாகவும் அடுத்த வருடம் இப்படம் ஆரம்பிக்கும் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘விரைவில் ஜி.வி.100’ என்று ட்வீட் செய்துள்ளார்.

சூர்யாவின் பிறந்த நாள் வரும் 23 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்று இந்த மூவரின் கூட்டணி குறித்து அறிவிக்கப்பட உள்ளதையொட்டியே ஜி.வி. பிரகாஷ் அவ்வாறு ட்வீட் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி அமையும் பட்சத்தில் சூர்யாவின் 43 ஆவது படமாக அது இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.