சுப்ரமணியபுரம் Twitter
கோலிவுட் செய்திகள்

காலங்கள் கடந்தும் அமோக வரவேற்பு! மீண்டும் திரையரங்க கொண்டாட்டத்தில் ‘சுப்ரமணியபுரம்’!

சுப்ரமணியபுரம் படம் ரீரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.

PT WEB

‘மதுர குலுங்க குலுங்க’ எனத் தொடங்கும் பாடலில் வரும் திருவிழா கூட்டத்தைப்போல், திரையரங்குகள் எல்லாம் ரசிகர்களின் கூட்டத்தால் குலுங்குகிறது... ஒவ்வொரு காட்சியுடனும் உணர்வுப்பூர்வமாக பிணைந்துள்ள ரசிகர்களின் ஆட்டத்தால், திரையரங்கமே திக்குமுக்காடுகிறது... இதெல்லாம் நடந்தது ஏதோவொரு படத்துக்கு அல்ல. அப்பாடல் வந்த சுப்ரமணியபுரம் படத்துக்கேதான்! ஒரேயொரு திருத்தம், இது சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் ரீரிலீஸ் காட்சிகள்.

கதை, திரைக்கதை, நடிகர்கள் தேர்வு, இசை என பல துறைகளின் சிறந்த கலைஞர்களின் பங்களிப்பு இருந்தால் ஒரு படம் ஹிட்டாகி விடும். இருந்தாலும் அந்த படம் கால ஓட்டத்தில் கரைந்துவிடாமல் நிலைத்து நிற்க, அதற்கு ஒரு க்ளாசிக் தன்மை தேவை. அப்படியொரு சிறந்த கதையம்சத்தில் உருவான திரைப்படம்தான் சுப்ரமணியபுரம்.

சுப்ரமணியபுரம்

பழிக்குப்பழி என்ற ரத்தம் சொட்டும் கதைக்களத்தில் உருவான சுப்ரமணியபுரம், 2008ஆம் ஆண்டு வெளியானது.

இது சசிகுமாரின் முதல்திரைப்படம். முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த சசிகுமார், நாட்டின் சிறந்த இயக்குநர்கள் எல்லாம் பாராட்டும் விதமாக ஹிட் படத்தை கொடுத்து திரைத்துறையை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தனது கதையும், காட்சி நுணுக்கங்களும் கொண்டாடப்படுவதைகண்டு நெகிழ்ந்த அவர், ரீரிலீஸ் சமயத்தில் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டார்.

அன்பை அள்ளிக் கொடுக்கும் நண்பர்கள், நடிப்புக்கு இடையே துளிர்விடும் காதல், அந்த காதலால் உருவாகும் பகை, அந்த பகையை தீர்க்க பயன்படும் துரோகம், துரோகத்துக்குக்காக பழிக்கு பழிவாங்கும் களத்தில் ஆக்ஷன் த்ரில்லராக அதிர வைத்திருக்கும் சுப்பிரமணியபுரம்.

சசிகுமார்

மண் மணம் வீசும் மதுரையின் சாதாரண மனிதர்களை எல்லாம், தன் கதையின் வழியே அசாதாரண கதாபாத்திரங்களாக்கி உலவவிட்டிருப்பார், சசிகுமார்.

சுப்ரமணியபுரம் என்ற மாபெரும் வெற்றிப் படத்துக்குபின் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கிய அவர், மீண்டும் இயக்குநர் அவதாரமெடுக்க இருக்கிறார். இயக்குநராக அறிமுகமாகி, ஹீரோவாக அசத்தி, நடிகராக தடம்பதித்த சசிகுமாரின் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படைப்புகளுக்காக காத்திருக்கிறார்கள், தமிழ் சினிமா ரசிகர்கள்.