அம்மா மறைந்தாலும், அவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மட்டும் வாரம் தவறாமல் கடைபிடிக்கிறார்!
சிறுவயதில் எல்லா விஷயத்திற்கும் கோபப்படும் சூர்யாவிடம் (நானி) ஒரு சத்தியம் வாங்குகிறார் அவனது தாய் சாயாதேவி (அபிராமி). எல்லா கோபத்துக்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என நினைக்காதே. வாரத்தில் ஒரு நாளை தேர்ந்தெடு, அந்த வாரம் முழுக்க நீ கோபப்பட்ட விஷயங்களில் எதன் மீது உன் கோபம் தீரவில்லையோ, அதற்கு மட்டும் பதிலடி கொடு என்கிறார். அம்மா மறைந்தாலும், அவருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மட்டும் வாரம் தவறாமல் கடைபிடிக்கிறார். இன்னொரு புறம் யார் மேல் கோபம் என்றாலும், சோகுலபாளேம் என்ற ஊரைச் சேர்ந்த மக்களை அடித்து வெளுக்கும் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தயானந்த் (எஸ் ஜே சூர்யா) அட்டகாசம் செய்கிறார். ஒரு கட்டத்தில் சூர்யாவின் கோபத்திற்கு ஆளாகிறார் தயாளன். அதன் பின் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.
நேர்த்தியான ரைட்டிங் இருந்தால் கமர்ஷியல் படத்தைக் கூட சுவாரஸ்யமாகக் கொடுக்கலாம்!
கமர்ஷியல் படம் என்றாலே, மூளையை கழற்றி வைத்துவிட்டு போக வேண்டும் என்ற வழக்கமான வரிகள் உண்டு. ஆனால், நேர்த்தியான ரைட்டிங் இருந்தால் கமர்ஷியல் படத்தைக் கூட சுவாரஸ்யமாகக் கொடுக்கலாம் என்பதற்கு விவேக் ஆத்ரேயா எழுதி இயக்கியிருக்கும் `சரிபோதா சனிவாரம்’ உதாரணம். கதாநாயகன் சூர்யா தன்னுடைய கோபத்தை விசாரணைக்கு உட்படுத்தி கவனமாக கையாளும் நபர். அதற்கு அப்படியே நேரெதிராக தயா, எடுத்த எடுப்பில் கோபப்பட்டு கை ஓங்குபவர். இந்த இருவரும் மோதிக் கொள்கிறார்கள் என்கிற இணையை உருவாக்கியதே சுவாரஸ்யமான ஒன்று. ஒரு ஹீரோ - வில்லன் மோதல் கதைதான் என்றாலும், அதற்குள் உள்ள பாத்திரங்களை வீணடிக்காமல், கச்சிதமாக் கதைக்குள் உபயோகித்த விதம் மிகச்சிறப்பு. கடிகாரத்தின் நேரத்தை மாற்றி வைக்கும் சிறுவன் துவங்கி, உப வில்லனின் ஜட்மெண்ட் வரை அனைத்தையும் வைத்து அதகளம் செய்கிறார்.
இப்போ பண்றா உன் நேச்சுரல் பர்ஃபாமன்ஸ” என நானியை தூக்கிப் போட்டு புரட்டுவது ஒரு ரகம்!
நானியின் நடிப்பு இயல்பான காட்சிகள், எமோஷனல் காட்சிகள், மாஸ் காட்சிகள் என எல்லாவற்றுக்கும் பொருந்திப் போகிறது. தந்தையிடம் வம்பிழுப்பது, அக்காவிடம் கெஞ்சுவது, சண்டையில் காட்டும் உக்ரம் என அசத்துகிறார். கூடவே நாயகியிடம், வயலன்ஸுக்கு எத்தனை எஸ் வரும் எனக் கேட்பது, மெட்டா ரெஃபரன்ஸாக நானி நடித்த படத்தையே உள்ளே கொண்டு வரும் காட்சி எனப் பல இடங்களில் ரொமன்ஸிலும் அழகாக ரசிக்க வைக்கிறார். ”இப்போ பண்றா உன் நேச்சுரல் பர்ஃபாமன்ஸ” என நானியை தூக்கிப் போட்டு புரட்டுவது ஒரு ரகம் என்றால், எதுக்கு அவன் அடிக்காம போனான், அப்பறம் எதுக்கு திரும்ப வந்து அடிச்சான்” என குழம்பி பின் தெளிவடைவது வேற ரகம். இடைவேளைக்குப் பின் அண்ணனிடம் காட்டும் பர்ஃபாமன்ஸ், தன்னை அடித்தவனை தேடும் காட்சிகளில் எல்லாம் SJ சூர்யா ... மாஸோ மாஸ். லீட் கதாப்பாத்திரங்களை அடுத்து நம்மை கவனிக்க வைப்பது முரளி ஷர்மா.
கொஞ்சம் நேரமே வந்தாலும் அபிராமி, அதிதி பாலன் கவனம் கவர்கிறார்கள்:
“எப்போ பாரு ஜட்மெண்ட் மிஸ்ஸாகுது” என அவர் புலம்பும் ஒவ்வொரு இடமும் நம்மை குலுங்கி சிரிக்க வைக்கிறார். கொஞ்சம் நேரமே வந்தாலும் அபிராமி, அதிதி பாலன் கவனம் கவர்கிறார்கள். பில்டப் வசனங்கள் பேசும் இடங்களில், சற்றே விவேக் ஓபரய்-த்தனம் எட்டிப்பார்த்தாலும், எமோஷனல் மற்றும் மாஸ் மொமண்ட்களுக்கு நன்றாகவே கை கொடுக்கிறார் சாய்குமார். ”உண்மையான கோபம் என்ன தெரியுமா? அந்த கோபத்த கண்டு யாரும் பயப்படக்கூடாது, அது மத்தவங்களுக்கு தைரியத்தக் கொடுக்கணும்.” என அவர் பேசும் இடம் இதற்கு ஒர் உதாரணம். இதில் ஒரே மைனஸ், ப்ரியங்கா அருள் மோகனின் நடிப்புதான். முக்கியமான காட்சிகளில் கூட பெரிய அளவில் கவரும்படி இல்லை, கல்லு என்ற கதாப்பாத்திர பெயருக்கு ஏற்ப கல்லாக நிற்கிறார்.
சனிக்கிழமை மட்டும் ஒருவன் தன் கோபத்தை வெளிப்படுத்துகிறான்:
விஜிலாண்டே ஹீரோ கதையை பல வடிவங்களில் பார்த்துப் பழகிய நமக்கு, இந்த சனிக்கிழமை ஹீரோ புதிதாகத் தெரிய சிறப்பான எழுத்துடன் கூடிய தொழில்நுட்ப காரணிகளும் முக்கிய காரணம். தமிழில் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த முரளி தான் இப்படத்திற்கு கேமரா. ஒவ்வொரு காட்சியையும் மிக சிரத்தை எடுத்து புதிதாக கொடுத்திருக்கிறார். மாஸ் பில்டப்களுக்கு பிடித்திருக்கும் ஐடியாக்கள் அத்தனைக்கும் சபாஷ். ஜேக்ஸ் பிஜோயின் பாடல்களும் - பின்னணி இசையிலும்... பீச் ஓரமாய் எரியும் பியானோ வாசிக்கும் கலைஞராய் அட்டகாசம் செய்திருக்கிறார். சனிக்கிழமை மட்டும் ஒருவன் தன் கோபத்தை வெளிப்படுத்துகிறான் என்பதை, அழுத்தமாக சொல்ல அதற்கேற்ப பல விஷயங்களை வைத்திருக்கிறார் விவேக் ஆத்ரேயா.
மிகத்தரமாக உருவாக்கப்பட்டிருக்கும் அட்டகாசமான ஆக்ஷன் மசாலா பொழுதுபோக்குப் படம்:
ஆனால், வில்லனான தயா எப்படி இவ்வளவு கொடூரமான ஆளானான் என்பதை விளக்க சொல்லப்படும் குட்டி கதை போதவில்லை. அதே போல சூர்யா - அவனது அக்கா இடையிலான மனத்தாங்கலும், அவர் மீண்டும் வீட்டுக்கு வரும் காட்சியும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். கூடவே என்னதான் நன்றாக இருந்தாலும் சில பாடல்கள் மெலிதான வேகத்தடை போடுகின்றன. மேலும் படத்தின் வன்முறைக்காகவும், ரத்தத்திற்காகவும் குழந்தைகள் பார்க்க உகந்ததல்ல என்பதும் குறிப்பிட வேண்டியது. இக்குறைகளை கடந்து பார்த்தால், எந்த விதத்திலும் போரடிக்காத படம் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. மொத்தத்தில் மிகத்தரமாக உருவாக்கப்பட்டிருக்கும் அட்டகாசமான ஆக்ஷன் மசாலா பொழுதுபோக்குப் படம்!