செய்தியாளர் - அன்பரசன்
கடந்த 2022 ஆம் ஆண்டு பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான சர்தார் 2 படத்தின் படப்பிடிப்புகான பூஜை கடந்த 12ம் தேதி தொடங்கியது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார்.
இதற்கான படப்பிடிப்பானது சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட செட்களில் ஜூலை 15 ஆம் தேதி தொடங்கியது. அதில் ஆக்ஷன் காட்சி ஒன்றில் எந்தவித உபகரணமுமின்றி சண்டை பயிற்சியாளர் ஏழுமலை ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்ப்பாராத விதமாக, கிட்டதட்ட 20 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் அவர். அங்கு மருத்துவர்கள், “ஏழுமலை மேலிருந்து கீழே விழுந்ததால் மார்பு பகுதியில் காயமடைந்து, நுரையீரலில் ரத்தகசிவு ஏற்ப்பட்டுள்ளது” என்று தெரிவித்து, அவர் உயிரிழந்துவிட்டார் எனக்கூறியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த விருகம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த ஏழுமலையின் உடலை பிரேத பரிசோதனைக்காக கேகே நகர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், போலீசார் வழக்குபதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை கடந்த 35 வருடங்களாக பல்வேறு திரைப்படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றி இருப்பது தெரியவந்துள்ளது.
விருகம்பாக்கம் போலீசார் தரப்பில், “நேற்று நடிகர் கார்த்தியுடைய சண்டை காட்சியின் போது, ஸ்டண்ட் பணிகளில் ஈடுபடும் நபர்களை கயிறு மூலமாக கீழே இறக்கும் பணிகள் நடந்துள்ளன. அப்போது நிலை தடுமாறி ஏழுமலை விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம், விபத்துச் சம்பவம் படத்தில் பணியாற்றிவர்களிடம் பேசினோம். படத்தின் உதவி இயக்குநர் ஒருவரிடம் இதுகுறித்து கேட்டபோது, " பிரசாத் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இன்னொரு பகுதியில் கட்டியிருந்த கயிற்றை ஸ்டன்ட்மேன் ஏழுமலை கழற்றி வைப்பதற்காகச் சென்றார். கயிற்றை கழற்ற மேலே சென்றவர் ஸ்லிப் ஆகி கீழே விழுந்திருக்கிறார். 'தொப்' என லேசாக நாங்கள் இருக்கும் இடத்தில் சத்தம் கேட்டது. திலீப் மாஸ்டர் தான் ஏதோ சத்தம் வருகிறது என அங்கே சென்று பார்த்தார். அப்போது தான் ஏழுமலை விழுந்திருந்ததையே நாங்கள் பார்த்தோம். நேற்று மாலையே அவரை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டோம். துரதிர்ஷ்டவசமாக அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. " என நடந்த சம்பவத்தை விளக்கினார்.