இந்தியன் 2 - ராயன் - மகாராஜா புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

தமிழ் சினிமாவை அதகளம் செய்த ராயன்.. மகாராஜா, இந்தியன் 2 வை பின்னுக்குத்தள்ளி சாதனை.. இத்தனை கோடிகளா?

யுவபுருஷ்

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ராயன் திரைப்படம் கடந்த மாதம் 26ம் தேதி வெளியானது. பழைய திரைக்கதை, அதீத வன்முறை என்று இருந்தாலும் தனுஷ் கலந்த மசாலாவால் இன்றளவும் ட்ரீட்டாகவே இருந்து வருகிறது. அதிலும், ‘உசுரே நீதானே’ என்ற ஒற்றை வரியின் மூலம் படத்தை வேறு தளத்தில் தூக்கிச்சென்று நிறுத்தியுள்ளார் ரகுமான்.

ராயன்

பொதுவாக ஒரு திரைப்படம் முதல் 2,3 நாட்களுக்கு தாக்குப்பிடிப்பதே கடினமானதாக மாறியுள்ள நிலையில், 6 படங்கள் ஒரே நாளில் வெளியான பின்னரும், இன்றும் திரையரங்குகளில் கலக்கி வருகிறது ராயன். வார இறுதி நாட்களைக் கடந்து, வேலை நாட்களிலும் திரையரங்குகளில் கூட்டம் கூடி வருகிறது. குறிப்பாக நேற்று மற்றும் அதற்கு முந்தைய தினம் என சென்னையின் பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல்தான்.

நடப்பு ஆண்டில் எந்த படமும் வசூல் ரீதியாக சோபிக்காமல் இருந்தநிலையில், அரண்மனை 4 திரைப்படம் 100 கோடி வசூலை கடந்தது. தொடர்ந்து, விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படமும் 100 கோடியை கடந்தது. மூன்றாவதாக வெளியான சங்கரின் இந்தியன்- 2 திரைப்படமும் சுமார் 150 கோடியை கடந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து வெளியான ராயன், வெறும் 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து அதிரடி காட்டி வருகிறது.

இந்தியன் 2 - அரண்மனை 4 - மகாராஜா

இதற்கும் மேலாக, நடப்பு ஆண்டிலேயே அதிக வசூல் செய்த படமாக ராயன் மாறியுள்ளது என்று தயாரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியான வீடியோவில், தனுஷின் கெரியரிலேயே இதுதான் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கலவையான விமர்சனங்கள் என்றாலும், ராயன் படத்திற்கு செல்வோரின் எண்ணிக்கை குறையாமல் இருப்பதால், வசூல் உயர வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.