மாமன்னன் Twitter
கோலிவுட் செய்திகள்

Maamannan | சபாநாயகர் பதவி, சிதம்பரம் தொகுதி குறியீடு... மாமன்னன் பேசும் அரசியல் என்ன?

இரா.செந்தில் கரிகாலன்

நடிகர் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் மாமன்னன். இன்று வெளியாகி தமிழகம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படம் பேசும் அரசியல் குறித்து இங்கு பார்ப்போம்.

Maamannan

படத்தில் மாமன்னன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு, சமத்துவ சமூகநீதி மக்கள் கழகம் என்னும் கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார். பன்றிமேடு எனும் அவரின் ஊர், சேலம் மாவட்டத்தில் உள்ள காசியாபுரம் என்னும் தொகுதிக்குள் வருகிறது. பொதுத் தொகுதியாக இருக்கும் அந்தத் தொகுதி தனித் தொகுதியானதும் அதில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகிறார் வடிவேலு. சட்டமன்ற உறுப்பினரான பிறகும் சாதிய ரீதியாக சொந்தக் கட்சிக்குள் எப்படி ஒடுக்கப்படுகிறார், அதை எப்படி எதிர்கொண்டு மீண்டு வருகிறார் என்பதே படத்தின் மையக்கருவாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 44 தொகுதிகள் பட்டியல் சமூகத்துக்கும், 2 தொகுதிகள் பழங்குடி சமூகத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய மாவட்டங்களில் இரண்டு முதல் மூன்று தொகுதிகளும் சிறிய மாவட்டங்களில் ஒரு தொகுதியும் வரும். பொதுவாக, தமிழ்நாட்டில் திமுக அல்லது அதிமுக எனும் இரு பெரும் கட்சிகளிலும் மாவட்டச் செயலாளர் பதவி என்பது அதிகாரமிக்க பதவியாக இருக்கிறது. தனித் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகியிருக்கும் ஒரு நபர், தன்னைவிட கட்சி அனுபவத்தில் ஜூனியராக இருந்தாலும், மா.செ பதவியில் இருப்பவர்களைவிட அதிகாரமற்றவர்களாகவே இருப்பார்கள்.

இல்லை, என்றால் இதை இப்படி எடுத்துக்கொள்ளலாம். அதாவது தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில், அந்தந்த மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகத்தில், ஆதிக்க சமூகத்தில் இருந்து வருபவர்களே மாவட்டச் செயலாளர்களாக இருப்பார்கள். அப்படி சேலம் மாவட்டத்தில், மா.செவாக இருக்கும் ஃபகத் பாசில், எம்.எல்.ஏவாக, கட்சியில் சீனியராக இருந்தாலும் தனித்தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகியிருக்கும் வடிவேலுவை எப்படி நடத்துகிறார் என்பதையே படம் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது. இது, தமிழ்நாட்டில் பொதுவாக பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் யதார்த்த நிலைதான்.

அதுமட்டுமல்ல, பொதுத் தொகுதியைவிட, தனித்தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விஷயங்களில் என்னென்ன சிக்கல்கள் வரும் என்பது குறித்தும் படத்தில் பேசப்பட்டிருக்கிறது. உதாரணமாக, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக சார்பில் சந்திரசேகர் என்பவரும், திமுக கூட்டணியின் சார்பில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் போட்டியிட்டனர்.

Thirumavalavan

மொத்தமுள்ள, 39 தொகுதிகளில், 38 தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும், நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு சுற்றிலும் வாக்குகள் எண்ணப்பட்டாலும்கூட முடிவுகள் வேண்டுமென்றே தாமதமாக அறிவிக்கப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் குற்றம் சாட்டினர். இறுதியாக, 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்த சம்பவத்தை ஃரெபரன்ஸாக வைத்தும் படத்தில் காட்சிகள் வருகின்றன.

அடுத்ததாக, எம்.எல்.ஏவாக வெற்றிபெற்ற பிறகு, சட்டமன்றத்தில் சபாநாயகராக அமரும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. இதுவும் உண்மைச் சம்பவம் ஒன்றை ஃரெபரன்ஸாக வைத்து எடுக்கப்பட்டதாகக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அ.தி.மு.க ஆரம்பிக்கப்பட்டது முதல் கட்சியில் இருந்து வருபவர் முன்னாள் சபாநாயகர் தனபால். 1977 முதல் கடந்த 2021 வரை ஏழு முறை அந்தக் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏவாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். அவற்றில், 1977, 1980, 1984, 2001 ஆகிய வருடங்களில் நடந்த தேர்தல்களில் சங்ககிரி தொகுதியிலிருந்தும் 2011-ல் ராசிபுரம் தொகுதியிலிருந்தும், 2016 மற்றும் 21-ல் அவிநாசி தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் உணவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். கட்சியில் சீனியர், அமைச்சர், எம்.எல்.ஏ என பல பொறுப்புகளை வகித்தும் இவருக்கு கட்சியில் உள்ள மற்ற நிர்வாகிகள் உரிய மரியாதையை அளிப்பதில்லை என புகார் எழுந்ததாகவும்,.. அதையறிந்த, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, சட்டமன்றத்தில் அனைவரும் மரியாதை செலுத்தும் சபாநாயகர் பொறுப்பை அவருக்கு அளித்தார் என்றும் சொல்லப்படுவதுண்டு. அதுபோன்ற காட்சிகளும் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

``பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’’

என்கிற குறளையும் அதற்கான விளக்கத்தையும் கூறுவதோடு முடிவடைகிறது.

‘நாம கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு, ஒரு இடத்துக்கு வரவேண்டியிருக்கு’ எனும் உதயநிதின் வசனம் படம் பேசும் அரசியலுக்கு வலு சேர்த்திருக்கிறது. அப்படி முட்டிமோதி வந்தாலும், அங்கேயும் என்ன மாதிரியான ஒடுக்குமுறைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது, என்பதையும் தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. ஆக மொத்தத்தில், இதுவரை தமிழில் வெளியான திரைப்படங்களில் பேசாத ஒரு அரசியலைப் பேசியிருக்கிறது மாமன்னன்.