விஜய் ரசிகர்கள் புதிய தலைமுறை
கோலிவுட் செய்திகள்

நாளை ’லியோ’ ரிலீஸ்.. சென்னை ரோகிணியில் டிக்கெட்டுக்காகக் குவிந்த ரசிகர்கள்.. போலீஸ் தடியடி!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ‘லியோ’ பட டிக்கெட்டை வாங்குவதில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Prakash J

லோகேஷ் கனகராஜ் இயக்கதில் விஜய் நடித்துள்ள ’லியோ’ திரைப்படம், நாளை (அக்.19) வெளியாக இருக்கிறது. இதில் ’லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து பல்வேறு திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

விஜய் ரசிகர்கள்

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிலும் ’லியோ’ பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அங்கே குழுமத் தொடங்கினர். இதனால் ரசிகர்களிடம் டிக்கெட்டை வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தினர்.

முன்னதாக, ’லியோ திரைப்படம் இங்கு வெளியாகப் போவதில்லை’ என ரோகிணி திரையரங்கில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். தயாரிப்பாளர் மற்றும் திரையரங்கு உரிமையாளர் இடையே பங்குகள் குறித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால்தான் ’லியோ’ திரைப்படம் இங்கு வெளியாகப்போவதில்லை எனக் காரணம் கூறப்பட்டது. இருப்பினும் ரோகிணியில் ’லியோ’ படத்தை திரையிடுவது தொடர்பான பிரச்னைக்கு இன்று மாலை தீர்வு காணப்பட்டது.

இதையடுத்து இன்று மாலைக்குப்பின் டிக்கெட் விற்பனை தொடங்கியது. இதே திரையரங்கில் ’லியோ’ பட ட்ரெய்லர் வெளியீட்டின்போது குவிந்த விஜய் ரசிகர்கள், திரையரங்கின் நாற்காலிகளைச் சேதப்படுத்தியிருந்தனர். தற்போது உடைக்கப்பட்ட அந்த 450 இருக்கைகளும், 10 நாட்களில் சுமார் ரூ.30 லட்சம் செல்வில் மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.